Skip to main content

நிலவு ஆராய்ச்சியில் தலைமை தாங்கப்போகும் இந்தியா

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Chandrayan 3 victory

 

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது ஆய்வைத் துவங்கியுள்ளது. 2023 ஆகஸ்ட் 23 இந்த தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளாக மாறியுள்ளது. உலகமே தற்போது இந்தியாவை உற்று கவனித்து வருகிறது. 

 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி, அதாவது இன்று மாலை 6:04 மணி அளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்திருக்கிறது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 அதன் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

 

சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிப் பயணத்தில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிராமங்கள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. கடந்த முறை அனுப்பப்பட்ட சந்திரயான் 2வின் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது தொடர்பை இழந்து சிதறியது. 

 

இந்த சந்திரயான் 3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தரையில் தரையிறங்குவதற்காக இஸ்ரோ ஆய்வு மையங்களில் பயிற்சிகள் செய்யப்பட்டன. இதனால் இஸ்ரோ ஆய்வு மையம், பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை செய்தது. அதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி, மிகவும் குளிரான வானிலையில், விக்ரம் லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டது.

 

ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 1ஐ அனுப்பிய போது இஸ்ரோ, நாசாவிடம் இருந்து நிலவில் இருப்பதை போலவே இருக்கும் மணலை வாங்கியது. அப்போது அதற்காக 10 கிலோ மண் வாங்கப்பட்டது. ஒரு கிலோ மண் 150 டாலருக்கு வாங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் சந்திரயான் 2 விண்கலத்திற்கு  60 கிலோ வரை மணல் தேவைப்பட்டது. அதனால், பட்ஜெட் காரணங்களால் இஸ்ரோ, நாசாவிடம் இருந்து மணல் வாங்காமல் அதற்கு பதிலாக நாமக்கல் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து மண் வாங்கியிருந்தது. அதே மண்ணைத்தான் இப்போது சந்திரயான் மூன்று திட்டத்திற்கும் இஸ்ரோ பயன்படுத்தி இருக்கிறது.

 

குறிப்பாக நாமக்கல்லில் உள்ள சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய 2 கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கி இருக்கிறது. அதன் பின்னர், இங்கு இருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் வைத்து தூளாக நொறுக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்துள்ளதால் அதை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்து இருக்கிறார்கள். நிலவின் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த மணலை எடுத்து உள்ளனர். இதில் செய்யப்பட சோதனையின் அடிப்படையில்தான் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டு, தற்போது நிலவில் இறங்கியிருக்கிறது. 

 

இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்து ரோவர் வாகனம்  நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

 

பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். சந்திரயான் மூன்றின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் ‛சாஃப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கியுள்ளது.  இந்த முறை மொத்தம் 15 நிமிடங்கள்  நடந்துள்ளது. அதாவது கடைசி 15 நிமிடத்துக்கு முன்பு விக்ரம் லேண்டர் நிலவுக்கு மேலே குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றி வந்துள்ளது. இந்த சமயத்தில் விக்ரம் லேண்டர் வினாடிக்கு 1.6 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வந்துள்ளது. இதையடுத்து அப்போது ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

தரையிறங்கிய பின் விக்ரம் லேண்டரில் உள்ள என்ஜினின் வேகம் என்பது 690 வினாடிகளில் பலமடங்கு குறைத்து செயல்படுத்தப்பட்டது. ஆரம்ப நிலையில் உள்ள வேகத்தை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் விக்ரம் லேண்டரின் வேகத்தை குறைத்தது. வினாடிக்கு 60 மீட்டர் வேகத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் பயணித்தது. நிலவின் தரையில் இருந்து 7.5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது விக்ரம் லேண்டர் ஒன்றுக்கு 2 முறை தரையிறங்கும் இடத்தை மீண்டும் சரிபார்த்தது. இதனை இஸ்ரோ மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் கவனித்தது. அதன்பிறகு விக்ரம் லேண்டர் ஃபைன் பிரேக்கிங் என்ற படிநிலையை அடைந்து விக்ரம் லேண்டர் செங்குத்தாக மாறி நின்றது.

 

இந்த செயல் கடைசி 7 நிமிடத்தில் நடந்துள்ளது. இந்த 7 நிமிடங்களை விஞ்ஞானிகள் ‛7 மினிட்ஸ் ஆஃப் டெரர் (Seven Minutes of Terror) என அழைக்கிறார்கள். ஏனென்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் என்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேல்பகுதியில் மிதக்கும் என்று கூறப்பட்டது.

 

நிலவின் தரையிலிருந்து 800 - 1300 மீட்டர் உயரத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் இடத்தை நோக்கி நிலவின் மேல்பகுதியில் இருந்து கீழ்நோக்கி சென்றுள்ளது. அந்த நேரத்தில், விக்ரம் லேண்டரின் கேமராக்கள் படங்கள் எடுக்க தொடங்கியது. அதோடு சென்சார்களும் ஆய்வுப் பணிகளுக்கான வேலைகளைத் தொடங்கி 12 வினாடிகள் கழித்து உயரம் 150 மீட்டராக குறைந்தது. இந்த வேளையில் அதிதொழில்நுட்பத்துடன் கூடிய முன்கூட்டிய ஆபத்தை அறியும் வகையிலான கேமரா ஒன்று தரையிறங்க வேண்டிய இடத்தில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை சரிபார்த்தது. அனைத்தும் சரியாக இருக்க அடுத்த 73 வினாடிகளில் விக்ரம் லேண்டர் 150 மீட்டர் தொலைவை கடந்து நிலவின் தென்துருவத்தில் கால்பதித்து சாதித்தது.  

 

உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியா மாறியிருக்கிறது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்துள்ளது.