Skip to main content

நம்பிக்கையில்லா தீர்மானம் - என்ன செய்கிறார் சந்திர பாபு நாயுடு? 

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திர மாநிலத்தின் 25 தொகுதிகளில் 15 தெலுங்கு தேசம், 2 பாஜக என இந்தக் கூட்டணி வெற்றியையும் பெற்றது. முந்தைய  மத்திய அரசுதான் தங்கள் மாநிலத்துக்கு  சிறப்பு அந்தஸ்தைக் கொடுக்கவில்லை, தாங்கள் கூட்டணியில் உள்ள மோடி அரசாவது பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இருந்தார் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு. ஆனால் தற்போது அந்த நம்பிக்கையையும் இழந்து, பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து, இறுதியில் பா.ஜ.க அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார்.

 

cbn



இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசத்திற்கு முன்னதாகவே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மக்களவையில் நிறைவேற்ற முனைந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர குறைந்தது 50 உறுப்பினர்கள் பலம் இருக்க வேண்டுமென்ற நிலையில் இதை ஆதரிக்க முன்வந்தார் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. பின்னர்,  இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதைவிட நம் தலைமையிலேயே தீர்மானம் கொண்டுவந்தால் என்ன என்று முடிவெடுத்து அறிவித்தார் சந்திரபாபு நாயுடு. சிறப்பு அந்தஸ்து வேண்டும் என தெலுங்கு தேச தலைமை மட்டுமல்ல தெலுங்கு தேச எம்பிக்கள் கூட இதற்கான பல வழிகளில் போராடி வருகிறார்கள். ஏன் இதற்காக நூதன போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. தெலுங்கு தேச எம்.பி., சிவபிரசாத் பெண், நாரதர், ராமன்  வேடம் என பல நூதன முறையில் கவனத்தை ஈர்த்து, சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். 

மக்களவையில் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 536. அதில் பாஜகவிற்கு 275 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அதில் இருவர் நியமன உறுப்பினர்கள், ஒருவர் சபாநாயகர், மேலும் கூட்டணி கட்சிகளின்  மக்களைவை உறுப்பினர்களை சேர்த்தால் அரசுக்கு ஆதரவாக மொத்தம் 315 பேர் உள்ளனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தாலும் தோற்றுத்தான் போகும் என பாஜக தரப்பு பயமில்லாமல் இருப்பது போல் இருந்தாலும், உள்ளே நடுக்கம் இருக்கும். எதிர்கட்சிகளின் ஆதரவை திரட்டி கண்டிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்ற சந்திரபாபு நாயுடுவின் முனைப்பு இன்னும் குறையவில்லை. 

 

chandrababu with aravind



சில நாட்களுக்கு முன்  மேற்குவங்க முதல்வர்  மம்தாவை சந்தித்து அவரது ஆதரவை கேட்டுள்ளார். ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முடிவை வரவேற்றார் மம்தா. டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து தனது ஆதரவைக் கோரினார். காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவைத் திரட்டி வருகிறார். இந்த சந்திப்புகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஆதரவைப்பெற  மட்டுமல்ல காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்கவேண்டும் என்பதற்காகவும்தான் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

இப்படி இருக்க அதிமுகவிடமும் ஆதரவு கேட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. இதற்கு காரணம் காவிரி போன்ற உரிமை பிரச்சனைகளில் மத்திய அரசிற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் அதிருப்தியே. இன்னொரு பக்கம் நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்படாமல் தள்ளிப் போவதற்கு ஒரு வகையில் காரணம் அதிமுக எம்பிக்கள்தான். காவிரி உரிமைக்காக இவர்களின் அவை வெளிநடப்பு போராட்டத்தாலும் அவைக்குள் எழுப்பும் சர்ச்சையாலும் மக்களவை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்களவை ஒத்திவைப்பு சந்திரபாபுவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஒத்திவைக்கிறது.

என்று சந்திரபாபு நாயுடு நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிவித்தாரோ அன்றே தமிழகத்தில் எல்லா எதிர்கட்சிகளும் சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுகவின் 37 எம்பிக்களும் ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. காரணம் தன் மாநில உரிமையை பெற ஆந்திரா எடுத்த இந்த முடிவு ஒரு வகையில் மத்திய அரசிற்கு நெருக்கடிதான். இந்த நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தி நம் தமிழக உரிமையான காவிரியை பெறுவதற்கு இது ஒரு சிறந்த சூழல் என பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவோ இதை ஆதரிக்காமல் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும்  கொண்டுவர முடியாத வகையில் வெளிநடப்பு செய்து வருகிறது. 
 

modi with ops eps



உண்மையில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவே  தன் தலைமையில் காவிரி உரிமைக்காக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் அறிவிப்பை விட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். 16 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி தன் மாநில உரிமைக்காக இந்த முடிவை எடுக்கும் பொழுது 37 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக ஏன் இன்னும் காவேரி பிரச்சனைக்கு தீர்வு காண உறுதியாக முயலாமல் உணவு இடைவேளையுடன் உண்ணாவிரதம் இருந்து மக்களை வெறுப்பேற்றுகிறது. தெளிவான உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தும், கைக்கட்டியே நிற்கிறது நம் மாநில அரசு. அதிமுக சந்திரபாபு நாயுடுவின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தருமோ என்ற சந்தேகமெல்லாம் தேவையில்லை, கண்டிப்பாகத் தராது என்றே கூறலாம். 

வாஜ்பாய் தலைமையிலான கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முக்கியமானவராக இருந்தார் சந்திர பாபு நாயுடு. ஆனால், இப்பொழுது பாஜகவே தனி பெரும்பான்மை பெற்றிருப்பதாலும் மோடியின் அணுகுமுறை வேறாக இருப்பதாலும் அதே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். சிறப்பு அந்தஸ்துக்கான தகுதிகள், தேவைகள் ஆந்திராவுக்கு இல்லையென்ற விளக்கமும் மத்திய அரசால் அளிக்கப்பட்டது. இது அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தலுக்காக சந்திர பாபுவின் ஸ்டண்ட் என்றும் சிலரால் கூறப்பட்டது. என்னவாக இருந்தாலும், இது குறித்துப் பேசும்பொழுதெல்லாம் சந்திர பாபு நாயுடு மீண்டும் மீண்டும் கூறுவது, "நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது பாஜக. ஆந்திர மக்களை ஏமாற்றிவிட்டது" என்பதைத்தான். அந்த ஒரு நம்பிக்கை மட்டுமா பொய் ஆனது?