Advertisment

செத்தால்தான் கண் தெரியுமா?

செத்தால்தான் கண் தெரியுமா?

அரசின் அலட்சியம்...பலியாகும் உயிர்கள்





Advertisment
அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த ரகு என்ற மென் பொறியாளர், பெண் பார்த்து, மணம் முடித்து பின்னர் அவருடன் அமேரிக்கா செல்லலாம் என்று கோயம்புத்தூர் வந்தவரின் கனவுகள், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்களின் காலில் விழுந்து உடைந்து சிதறுமென்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். இது அவரது கவனக்குறைவால் நடந்ததில்லை. இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது சாலையில் வைக்கப்பட்ட இராட்சச பேனர்களின் கட்டையில் இருட்டில் கண்ணுக்குத் தெரியாமல் அடிபட்டு கீழே தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னே வந்த லாரியும் அவரின் மீது ஏறியதால் துடிதுடித்து அதே இடத்தில் இறந்துள்ளார். இது தான் முதல் நாள் செய்தி. அவரது மரணத்திற்கு லாரிதான் காரணம் என்று காவல்துறை கூறியுள்ளது. 'ஹூ கில்டு ரகு?' என்று கோவை மக்கள் அந்த சாலையிலேயே கேள்வி கேட்டனர். அதை அவசரமாக அழித்துள்ளனர். தற்போது பேனர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளும் தடைகளும் இருந்தும் கூட இவர்கள் எந்த கட்டுப்பாடுமில்லாமல் வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சமீபமாக அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியங்களாலும் , அராஜகங்களாலும் மக்கள் தொடர்ந்து காவு வாங்கப்படுகின்றனர்.






ரெட் ஹில்ஸ் பகுதியில் பாதி கட்டப்பட்டு முடிக்கப்படாத மேம்பாலத்தில் கார் ஒன்று தவறிச் செல்ல, சென்ற வேகத்தில் பாலத்தின் மேலிருந்து காருடன் தலைகுப்புற விழுந்து மூன்று பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். மேம்பாலம் என்றாலே நம் ஊர்களில் எவ்வளவு காசு பார்க்கலாம் என்று மட்டும்தான் அரசியல்வாதிகள் யோசிப்பார்கள் போல... முடிக்கப்படாத மேம்பாலத்தை வழியில் பேரிகார்டுகள் கொண்டு அடைத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்குமா? இதுமட்டுமல்லாது, மேம்பாலங்களில் எது முடிக்கப்பட்டிருக்கிறது, எது முடிக்கப்படவில்லை என்று யாருக்குமே தெரியவில்லை என்பதே உண்மை. இவர்கள் கட்டிய போரூர், வடபழனி மேம்பாலங்கள் திறக்கப்படுவதற்காக பலருக்காகக் காத்திருந்து வெறுத்துப் போய் மக்களால் திறக்கப்பட்டன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலை, முக்கியமாக விழுப்புரம் மாவட்டம் உயிர் வாங்கும் விபத்துப் பிராந்தியமாகவே மாறிவிட்டது. வழியெல்லாம் முளைத்த ஹோட்டல்கள், ஆக்கிரமிப்புகள், அவர்களின் இஷ்டத்துக்கு உருவாக்கும் சாலை இணைப்புகள், அங்கு இருட்டில் பிரதிபலிப்பு பட்டைகள் (Reflective Stickers) இல்லாமல் நிற்கும் கனரக வாகனங்கள், விபத்துகளுக்குக் காரணமாக இருக்கின்றன.


Advertisment



சரி, ஓட்டுப் போட்ட பொது மக்களின் உயிர்தான் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றால், அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கும் இதே நிலைமைதான். நாகபட்டினத்தில் உள்ள போக்குவரத்துக் கழக கட்டிடத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த 11 ஓட்டுனர்கள், கண்டக்டர்களின் மீது கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து அதில் 8 பேர் உயிர் துறந்துள்ளனர். அரசாங்க கட்டடமான இது 1943 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அனைத்துக் கட்சிகளுக்கும் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் இருக்கின்றன. எந்த ஆட்சியிலும் இந்த அரதப் பழசான, ஆபத்தான கட்டிடத்தை பராமரிக்கவோ, புதுப்பிக்கவோ, மாற்றிக் கட்டவோ தோன்றவில்லை.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பிஞ்சு உயிரையும் சேர்த்து ஒரு குடும்பமே எரிந்தது. அதன் பின்தான் அரசும் அதிகாரிகளும் கந்துவட்டியைக் கட்டுப்படுத்த களத்தில் இறங்கியது போல் காட்டிக்கொண்டனர். கந்துவட்டி தொழில் செய்பவர்கள், அரசியல் கட்சிகளுக்கு நெருங்கியவர்கள் என்பது தான் உண்மை. கேரளாவில் இது போல உயிர்கள் பலியான பொழுது, 'ஆப்ரேஷன் குபேரா' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்றும் அது தொடர்கிறது. இங்கு? 2015 மழை வெள்ளம் சென்னையை உலுக்கியது. இதற்கு பின்னும் மழை பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்களுக்கு எண்ணம் இல்லை. இந்த ஆண்டு கொடுங்கையூரில் மழையால் தேங்கிய நீரில் பாய்ந்த கரண்டின் மூலம் வீட்டின் வெளியே விளையாடிய இரண்டு சிறுமிகள் பலியாகினர். அதன் பின்னர் தான் விழித்தது மின்துறை.





நேற்று திருவொற்றியூரில் சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தால் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், ஒரு சிறுவன் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான். வீட்டில் தேங்கியிருக்கும் நீருக்காக அபராதம் போடுபவர்கள், இதுபோன்ற நிறுவனத்தால் தோண்டப்பட்டு அதில் தேங்கியிருக்கும் தண்ணீர் அவர்கள் கண்களில் படாமல் இருந்து அதனுள் விழுந்து ஒரு உயிர் போனதும் கண்ணில் படுகிறது. டெங்குவால் உயிர்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தபோது, மர்மக் காய்ச்சலிலேயே கவனமாய் இருந்தது அரசு. ஒத்துக்கொண்டு செயலாற்றத் தொடங்கியபோது கைமீறிப் போயிருந்தது. ரோம் நகரம் பற்றி எறிந்த போது, நீரோ மன்னன் வயலின் வாசித்த கதை கேட்டிருக்கிறோம். இங்கே, எப்பொழுதும் ஆளுபவர்கள் வயலின் வாசிப்பது கூட இல்லை. வேறு வேலைகளில் இருப்பார்கள். எரிகின்ற வலி எப்பொழுதும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

சந்தோஷ் குமார்
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe