'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன' என்பது தமிழ் பழமொழி. ஆனால் நம் நாட்டு பிரபலங்களின் திருமணங்கள் சொர்க்கத்திலேயே நடப்பது போன்று பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றன. அப்படி இந்த ஆண்டு பல சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களின் திருமணங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்தத் திருமணங்கள் சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட் அடித்தன. அப்படி இந்த ஆண்டின் ட்ரெண்டிங் திருமணங்களின் சிறு தொகுப்பே இப்பதிவு...
பாவனா- நவீன்:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bavana-in.jpg)
இந்த ஆண்டின் முதல் செலிபிரிட்டி திருமணமாக ஜனவரி 22ஆம் தேதி நடிகை பாவனா மற்றும் தயாரிப்பாளர் நவீனின் திருமணம் நடைபெற்றது. தமிழில் அசல், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்த பாவனா தனது ஐந்து ஆண்டு காதலரான கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்தார். பாவனா 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் நடித்த மஹாத்மா திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் நவீன். இந்த திருமணத்தில் தென்னிந்திய திரைப்பட உலகை சேர்ந்த பலர் கலந்துகொள்ள திருசூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஸ்ரேயா- ஆண்ட்ரே கொஸ்சீவ்:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/shreya-in.jpg)
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி ஸ்டார்களுடன் ஜோடி போட்டவர் நடிகை ஸ்ரேயா. கடந்த சில ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி தனது காதலரான ஆண்ட்ரே கொஸ்சீவை மணந்தார். ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரே தேசிய டென்னிஸ் வீரர், தொழிலதிபர், பேச்சாளர் என பல துறைகளில் செயலாற்றும் ஆல் ரவுண்டராவார். இவர்களது திருமணம் மும்பையில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் வரவேற்பானது உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
சோனம் கபூர்- ஆனந்த் அகுஜா:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sonam-anand-in.jpg)
பாவனா, ஸ்ரேயாவை தொடர்ந்து இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட மற்றுமொரு ஹீரோயின் சோனம் கபூர். தனுஷின் அம்பிகாபதி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் டெல்லியை பாரம்பரியமாக கொண்ட ஆனந்த் அகுஜா என்ற தொழிலதிபரை கடந்த மே 8 ஆம் தேதி மணந்தார். ஏற்றுமதி தொழில் செய்துவரும் அகுஜாவின் சொத்து மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய். இவர்கள் இருவரும் 5 ஆண்டு காதலித்த பின், இந்த ஆண்டு மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் சீக்கிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
வைக்கோம் விஜயலட்சுமி-அனூப்:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaikom-vijaylakshmi--in.jpg)
இந்த வரிசையில் இருக்கும் மற்ற திருமணங்கள் அளவுக்கு இது விமரிசையான திருமணம் அல்ல, இவரும் மற்றவர்கள் அளவுக்கு பிரபலமானவர் அல்ல. தமிழ், மலையாள திரைப்படங்களில் புகழ்பெற்ற பாடகி வைக்கோம் விஜயலட்சுமி. இவர் இந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி அனூப் என்ற மிமிக்ரி கலைஞரை திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அது பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது. மணமகன் தனது கண் குறைபாட்டை இழிவுபடுத்தியதால் அந்தத் திருமணத்தை நிறுத்தியதாக அதற்கான விளக்கத்தையும் விஜயலட்சுமி அளித்தார். அவரின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
ரன்வீர் சிங்- தீபிகா படுகோன்:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/deepika-in_0.jpg)
இந்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்ட திருமணமென்றால் அது இந்தத் திருமணமாகத்தான் இருக்கும். பல ஆண்டுகளாக காதலில் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் சென்ற நவம்பர் 14 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு பல கோடிகள் செலவழிக்கப்பட்டன. தங்கும் அறைக்கு மட்டுமே 2 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. இத்தாலியில் திருமணம் முடிந்த பிறகு தீபிகாவின் சொந்த ஊரான பெங்களுருவிலும், பிறகு மும்பையிலும் என இரண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கிட்டத்தட்ட அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டு வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ்:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nicky_0-in.jpg)
தீபிகாவை தொடர்ந்து பாலிவுட்டின் டாப் ஹீரோயினான வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. தமிழன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறக்கும் இவருக்கு டிசம்பர் 1 ல் அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ஜோனாஸ் என்ற திரை பிரபலத்துடன் திருமணம் நடைபெற்றது. தன்னை விட பத்து வயது குறைவான நிக்கை இரண்டு ஆண்டு காதலுக்குப் பின் கரம் பிடித்தார் பிரியங்கா. இவர்களின் இந்தத் திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.
ஈஷா அம்பானி- ஆனந்த் பிராமல்:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/isha_ambani_wedding_photo-in.jpg)
ஆரம்பத்தில் சொன்ன பழமொழியை உண்மையாக்கும் வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற திருமணம்தான் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி திருமணம். சுமார் 710 கோடி செலவில் உதய்பூர் அரண்மனையில் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்திய தொழிலதிபரான அஜய் பிராமலின் மகனுக்கும், அம்பானி மகள் ஈஷாவிற்குமான இந்தத் திருமணம் அமெரிக்க பாடகி பேயொன்ஸ் இசை கச்சேரியுடன், பாலிவுட் நட்சத்திரங்கள் உணவு பரிமாற மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்காக 50 சொகுசு விமானங்கள், 1000 வெளிநாட்டு கார்கள் அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டன. இதில் பல வெளிநாட்டு, உள்நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் பொகாட்- சொம்வீர் ராதீ:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vinesh-in.jpg)
திரைப் பிரபலங்களை போலவே இந்த ஆண்டு பல விளையாட்டு நட்சத்திரங்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் முக்கியமான ஒன்று வினேஷ் பொகாட், சொம்வீர் ராதீ திருமணம். 'தங்கல்' கதையின் நிஜ நாயகிகளானகீதா பொகாட், பபிதா பொகாட்டின் சகோதரியான வினேஷ் பொகாட் இந்த ஆண்டு தனது சக மல்யுத்த வீரரான சொம்வீர் ராதீயை திருமணம் செய்துகொண்டார். கடந்த 8 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இவர்கள் டிசம்பர் 13 ஆம் தேதி ஹரியானாவில் எளிமையாக தங்களின் திருமணத்தை முடித்தனர். வினேஷ் பொகாட் இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டிலும், காமன்வெல்த் தொடரிலும் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
சாய்னா நேவால்- பருப்பள்ளி காஷ்யப்:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Saina-Nehwal-and--in.jpg)
ஹரியானாவில் வினேஷ் பொகாட்டின் திருமணத்திற்கு அடுத்த நாளே மற்றொரு ஹரியானா பெண்ணான சாய்னா நேவாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஹரியானாவில் பிறந்து தற்பொழுது தெலுங்கானாவில் வசித்துவரும் சாய்னா தனது சக வீரரான பருப்பள்ளி காஷ்யப்பை டிசம்பர் 14 அன்று மணமுடித்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பில் பல திரைத்துறை நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த திருமணம் பெரிய அறிவிப்புகள் இல்லாமல் திடீரென நடைபெற்றதால், சமூகவலைதளங்களில் பெருமளவு பேசப்பட்டது.
சஞ்சு சாம்சன்- சாருலதா:
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sanju-V-Samson--in.jpg)
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன். இந்திய டி20 அணியிலும் விளையாடிய இவர் கடந்த 22 ஆம் தேதி தனது கல்லூரி தோழியை திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்திற்கு அருகில் கோவலத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மட்டும் கிரிக்கெட் துறையிலிருந்து கலந்துகொண்டார்.
இவை மட்டுமல்லாமல் இந்த ஆண்டில் உலகளவிலும் பிரிட்டன் இளவரசர் ஹாரி, பாடகர் ஜஸ்டின் பெய்பர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயன் மோர்கன் ஆகியோரின் திருமணமும் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)