Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

வேட்பாளர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. -முக்கிய பிரமுகர்கள் முனகல்!

indiraprojects-large indiraprojects-mobile

“தேர்தலின்போது தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதென்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. ஒருபுறம் பிரச்சாரம் செய்தாலும், இன்னொருபுறம் முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக்கும் வேட்பாளர்கள் நேரம் ஒதுக்கி வருகின்றனர்.   

 

vip

 

இந்த நடைமுறை ஏன் வந்தது தெரியுமா? கிராமமோ, நகரமோ குறைந்தது 10 பேராவது முக்கிய பிரமுகர்களாக இருப்பார்கள். குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்தோ, வியாபாரத்தின் அடிப்படையிலோ, செல்வாக்குள்ள குடும்பம் என்பதாலோ,  அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கும். 
 

அவர் ஒரு தொழிலதிபராக இருப்பார். அவருடைய நிறுவனத்தில் பலர் பணிபுரிவார்கள். முன்பெல்லாம், தேர்தலில்  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களிடம் அந்த முதலாளி சொல்வார். அவர்களும்,  ‘முதலாளி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்..’ என்று அவருடைய சொல்லுக்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது? முதலாளி சொன்னால் தொழிலாளர்கள் கேட்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. தொழிலாளர்கள் சுயமாகச் சிந்திக்கிறார்கள். அதனால்,  வாக்களிக்கும் விஷயத்தில் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூற முதலாளிகளே முன்வர மாட்டார்கள். பல முதலாளிகள் தேர்தல் நாளில் வாக்குச்சாவடி பக்கமே போக மாட்டார்கள்.  ஆனாலும், அந்தப் பழைய சம்பிரதாயம் தொடரவே செய்கிறது.” தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளைக் கவனித்துவரும் ‘பெரிய முதலாளி’ எனப்படும் முக்கிய பிரமுகர் ஒருவர் இப்படிச் சொன்னார்.  

 

மேலும் அவர் “இந்தத் தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.  கவுண்டமணியோட ஃபேமஸ் டயலாக் இது. தேர்தல் சீசனில்,  அந்தத் தொழிலதிபர்களுக்கே தொல்லை தருபவர்களாக இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.  சந்திக்க வருபவர்கள், பேசி முடித்துக் கிளம்புவதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். பொன்னான அந்த நேரம் எங்களுக்கு இழப்புதானே?” என்று சிரித்தார். 
 

vip

 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியிலும், முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு கேட்பது நடந்துவருகிறது.  சந்திப்பின்போது என்னதான் பேசுகிறார்கள்?

விருதுநகர் தொகுதியிலும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் படலம் நடக்கிறது. முக்கிய பிரமுகர் ஒருவருடைய வீட்டுக்கு  சாத்தூர் திமுக வேட்பாளர் சீனிவாசனை அழைத்துச் சென்றார் திமுக மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “முதலாளி..   உங்க ஆதரவு எங்களுக்கு வேணும். அடுத்து சென்ட்ரல்லயும் ஸ்டேட்லயும் நம்ம ஆட்சிதான். ஊருக்கோ, பிசினஸுக்கோ என்ன பிரச்சனைன்னாலும் நாங்க பார்த்துக்குவோம்.” என்று கூற, அவர்களுக்கு டீ, பிஸ்கட் தந்து உபசரித்து அனுப்பினார் அந்தப் பிரமுகர்.  


மறுநாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியையும் அழைத்துச்சென்று, அதே முக்கிய பிரமுகரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார்.  “கவர்மென்ட் நம்மகிட்ட இருக்கு. நாங்க உங்ககிட்ட இருக்கோம். நீங்கதான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும். இவங்கள்லாம் யாரோன்னு பார்க்காதீங்க.  இங்கே எம்.எல்.ஏ.வும் நான்தான்; எம்.பி.யும் நான்தான். தொகுதிக்கோ, தொழிலுக்கோ என்ன பிரச்சனைன்னாலும் சொல்லுங்க. உடனே சரி பண்ணிருவோம்.” என்று உறுதியளித்திட, அவர்களுக்கும் டீ, பிஸ்கட் தந்து உபசரித்து அனுப்பினார் அந்த முக்கிய பிரமுகர். 

 
தேர்தல் ஆதரவு கேட்டு தன்னுடைய முதலாளியான அந்த முக்கிய பிரமுகரிடம்  வேட்பாளர்கள் தரப்பு பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்த அறையில் அலுவலகப் பணியில் பிசியாக இருந்தார் ஒருவர்.  கடந்த 45 வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அவரிடம் ‘வாக்களிக்கும் விஷயத்தில் உங்க முதலாளியின் எண்ண ஓட்டம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே?’ என்று கேட்டோம். 

“முதலாளி மனசு யாருக்குத் தெரியும்? எங்க முதலாளியோட அப்பாவும் ஒரு முக்கிய பிரமுகர்தான். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். அப்ப காமராஜர் இந்தப்பக்கம் வந்தா எங்க முதலாளி வீட்லதான் தங்குவார்; எனக்குத் தெரிஞ்சு.  இந்தக் குடும்பத்துல இப்ப யாருக்கும் அரசியல் ஈடுபாடு இல்லை. ஆரம்பத்துல இருந்தே, தேர்தல் நேரத்துல கே.கே.எஸ்.எஸ்.ஆர். எங்க முதலாளியைப் பார்த்துட்டுப் போறது வழக்கமா நடக்கிறதுதான்” என்றார். 
 

தொகுதிதோறும் இதுபோன்ற சந்திப்புக்கள் நடக்கின்றன. தங்களை முக்கிய பிரமுகர்களாகக் கருதி, அரசியல் தலைவர்கள்  தேடிவந்து ஆதரவு கேட்பதை பெருமையாக நினைப்பவர்களும் உண்டு. இந்த முக்கிய பிரமுகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். ஆனால், வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...