Skip to main content

"எங்களை மனுஷங்ககிட்ட அனுப்புங்க அண்ணா..." - கதறிய விலைமாது! - ஆட்டோ சங்கர் #10 

as 10 title

 

இப்படி, எம்.ஜி.ஆர் மறைந்த பின் அதிமுகவிலும் ஆட்சியிலும் பெரும் களேபரம் நிகழ்ந்தது. அந்த ஊர் ரெண்டுபட்டதால் இந்தக் கூத்தாடிக்கு கொண்டாட்டமாக இருந்தது. அதே நேரம் அவர்களின் தேவைக்கு சப்ளை செய்ய முடியாமல் பெரும் திண்டாட்டமும் ஆனது. அதிகாரம், அதன் மூலம் கிடைக்கப்போகும் வருமானம்... இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய தயாராய் இருந்தனர் அந்த முதலாளிகள். இந்த நேரத்தில் என்னிடமிருந்த ஆகச்சிறந்த பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிய சுடலை மீதான கோபமும் அவ்வப்போது தலைதூக்கியது. அதை சற்றே மறந்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தேன். கரை வேட்டிகளின் பசிக்கு இரை போடுவது கடினமாக இருந்தது. அந்த இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் முக்கியமாய் இருந்தனர். ஒருவரைக் கூட இழக்கத் தயாராய் இல்லை.

 

 


இதனாலேயே அந்த யுத்தகளத்தில் ஒரேயொருவரை ரெண்டு கோஷ்டியிலுமே மதித்தனர். அந்த நபரைப் பார்த்ததும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடினர். ரெண்டு பக்கமும் வேண்டியவரான அந்த நபர் சாட்சாத் நான்தான்! அத்தனை எம்.எல்.ஏ.க்களுக்கும் தாக சாந்தியும், மோக சாந்தியும் செய்ய வேண்டுமே. அந்த சந்தர்ப்பத்தை அபாரமாக உபயோகித்தேன். ஏகமாய் பணம் பண்ணினேன். இரண்டு அணியிலுமாக அப்போது மட்டும் கிடைத்த தொகை ரூபாய் முப்பது லட்சம்.

 

 

mgr jeya janakiகைவசம் இருந்த பெண்கள் போதாமல் நாயலைச்சல் அலைந்தேன். அடையார் கேட் ஓட்டல், பிரசிடென்சி ஹோட்டல் மற்றும் பல ஓட்டல்களுக்கும் விலைமாதுகள் தாறுமாறாக அனுப்பப்பட்டார்கள். இதில் முதல் தடவை எம்.எல்.ஏ.க்களிடம் சென்று வந்த பெண்கள் அடுத்த ரவுண்டு செல்ல மறுத்தனர். "எங்களை மனுஷங்ககிட்ட அனுப்புங்க சங்கரண்ணா... பூரா கரடி, சிங்கம், புலியா இருக்கானுக...'' என கதறிற்று விலைமாது பெண் ஒவ்வொன்றும்! அந்தச் சமயத்தில் ஏராளமாய் காசு மட்டுமா பார்த்தேன்...? பார்த்த அவலமான காட்சிகள், நாற்காலி பிடிக்க நடந்த சண்டைகள், மாண்புமிகுக்களின் மற்றொரு பக்கங்கள் என ஒவ்வொன்றுமே சின்னச் சின்ன மின்சாரத் தீண்டுதல்கள்!

 

 


பெண்கள் போதாமல் ஊரிலிருந்த புரோக்கர்களை எல்லாம் அணுகித்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டி இருந்தது. அப்போது தற்செயலாக  ஒரு ப்ரோக்கர். "அடடா...சங்கர்! இப்பதான் ஞாபகம் வருது; உன்கிட்டே இருந்தானே சுடலை... அவன் கூட கே.கே. நகர்ல இதே பிசினஸ்தான்  பண்ணிக்கிட்டிருக்கான்... அவனைக்கூட கேட்கலாமே?'' என்றான். நெஞ்சுள் ஒரு திக் வாங்கினேன். "சு... சுடலை இப்ப கே.கே. நகர்லேயா இருக்கான்?''

பாபு வானத்துக்கும் தரைக்குமாக எகிறி குதித்தான்.

"அண்ணே! விடவே கூடாது அந்த துரோகியை; பணத்தை லவுட்டிக்கிட்டு பெண்ணையும் கடத்திப்போனவனாச்சே? அதோட, உபத்திராதேவி இப்ப   இருந்தா இந்த சமயத்திலே எவ்வளவு நல்லா இருக்கும்...?'' 

 

 


"மோகன், பாபு! ரெண்டுபேரும் போங்க! அவனைக் கூட்டிவாங்க... அவன் மேலே கைவைக்கக்கூடாது என்ன?'' - எச்சரித்து அனுப்பினேன்.

பாண்டி கோவில் பலிகடா கணக்காக சுடலை கொண்டு வரப்பட்டான். என்னைப் பார்த்ததும் நெடுஞ்சாண்கிடையாக கால்களில் விழுந்தான்.

 

 

auto sankar threatens sudalai"அண்ணே! என்னை மன்னிச்சுக்கங்க அண்ணே''

பாபு அவன் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து தாக்குவதற்குத் தயாராக... தடுத்துவிட்டு கேட்டேன் சுடலையிடம்.

"சுடலை...அந்தப்பெண்ணை கூட்டிட்டுப்போனியே... என்ன பண்ணினே...? அவளை வச்சு தொழில் பண்றியா?''

"ஐயையோ! இல்லைண்ணே; வேற பொம்பிளைகளை வச்சுதான் பண்றேன்... அவளை பெண்டாட்டி ஆக்கிக்கிட்டேன்''

"கல்யாணம் எப்ப நடந்துச்சு?''

"கல்யாணம்ன்னு பண்ணிக்கலை, புருஷன் பெண்டாட்டியா குடும்பம் நடத்திக்கிட்டிருக்கோம்''

"முட்டாள்! உங்க ரெண்டு பேருக்கும் நாளை சைதாப்பேட்டை ரிஜிஸ்தர் ஆபிஸ்லே கல்யாணம்...! நாங்க எல்லாரும் சாட்சிக் கையெழுத்து   போடறோம்! உன்னை மன்னிக்கறேன்... அதுதான் நான் உனக்கு தர்ற கல்யாண பரிசு''

சுடலையின் முகம் மலர்ச்சிக்குப்போனது. பாபுவின் முகம் அதிர்ச்சிக்குப் போனது. ஆனால், இருவருக்குமே என் திட்டம் என்னவென்று தெரியாது. சுடலையை சும்மாவா விடலாமா, அவனை பயன்படுத்தலாமா, பாபுவை முழுதாய் நம்பலாமா? எல்லா கேள்விக்கும் என் மனதில் பதில் இருந்தது. சுடலையை சும்மாவா விடுவேன் நான்?     


அடுத்த பகுதி:

சுமதி... தஞ்சம் கேட்டு வந்த எமன்! - ஆட்டோ சங்கர்#11

 

 முந்தைய பகுதி:

அதிமுகவின் பிளவு... ஆட்டோசங்கருக்கு லாபம்! - ஆட்டோசங்கர் #9  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...