Skip to main content

"அமித்ஷாவிற்கு ஃபோனை போடு" - சீறிய சிதம்பரம்!

தேசத்தின் அதிகார நாற்காலியில் உயர்ந்த பதவிகளை வகித்த தமிழரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 5 நாள் சி.பி.ஐ. கஸ்டடிக்கு சென்றிருப்பது இந்தியாவின் தொடர் தலைப்புச் செய்தியானது. 

முன் ஜாமீன் மனு ரத்து! அதிர்ச்சியடைந்த சிதம்பரம்! 

காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டுகாலம் (2004 2014) நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழுக்களில் இடம்பெற்றும் வலிமையாக இருந்தவர் ப.சிதம்பரம். அவர் வகித்த துறைகளிலிருந்து அவருக்கு எதிராக வளையம் அமைத்தது பா.ஜ.க. அரசு. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கடந்த வருடம் ஜூலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, 10 முறை தன்னை கைது நடவடிக்கையிலிருந்து காத்துக் கொண்டவர், கடந்த 20-ந் தேதி தனது முன்ஜாமீன் மனு நீதிபதி கவூரால் தள்ளுபடியானதும் சிதம்பரம் அதிர்ச்சியடைந்தார். கைதுக்கு தடை கோரிய இடைக்கால உத்தரவும் நிராகரிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் இருந்த ப.சி. அதிர்ச்சியடைந்தார். காங்கிரஸ் கட்சியிலும் டெல்லியிலும் பரபரப்பும் பதட்டமும் கூடியது. 

 

chidambaramஓடினார்கள்; முறையிட்டார்கள்; கெஞ்சினார்கள்! 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் மேல்முறையீடு செய்ய சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர் முயற்சித்த போது, அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் ரஞ்சன் கோகோய் இருந்ததால் மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை. தலைமை நீதிபதி அமர்வுக்கு அடுத்த நிலையில் இருந்த நீதிபதி ரமணாவிடம் முறையிட்டபோது, "மனுவில் பிழைகள், பட்டியலிடாத மனுவை விசாரிக்க முடியாது, தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புகிறேன்' என வெளிப்பட்ட பதிலால் மேலும் அதிர்ச்சி அடைந் தனர். தலைமை நீதிபதியும், தான் விசாரித்த வழக்கு முடிந்ததும் கிளம்பி விட்டார். "வெள்ளிக்கிழமைதான் விசாரிக்க முடியும்' என்றதுமே நிலவரம் புரிந்துவிட்டது சீனியர் வக்கீலான சிதம்பரத்துக்கு. 

 

congressதலைமறைவும் தலைமையின் உத்தரவும்!

இரவோடு இரவாக சி.பி.ஐ.யின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. டெல்லி ஜோர்பாக்கில் இருந்த சிதம்பரத்தின் வீட்டுக்கு அதிகாரிகள் செல்ல, அவர் இல்லாததால், "2 மணி நேரத்தில் சி.பி.ஐ.முன்பு ஆஜராக வேண்டும்' என்கிற நோட்டீசை ஒட்டிவிட்டு வந்தனர். சி.பி.ஐ. தன்னை கைது செய்யும் என தெரிந்து, தன்னு டைய கார் டிரைவரையும் உதவி யாளரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு செல்ஃப் ட்ரைவிங் செய்து திடீரென தலைமறைவானார் சிதம்பரம். லுக் அவுட் நோட்டீசை ரிலீஸ் செய்தது சி.பி.ஐ.! இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி சோர்ஸ்கள். "சிதம்பரத்துக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் அவர் தங்கியிருப்பது சி.பி.ஐ.க்கும் அமலாக்கத்துறைக்கும் டெல்லி போலீசுக்கும் தெரியும். ஆனால், கைது செய்யாமல் தவிர்த்தனர். தலைமறைவு குற்றவாளியாகவும் தேடப்படும் குற்றவாளியாகவும் அவர் சித்தரிக்கப்பட்டு அவரும் காங்கிரசும் அசிங்கப்பட வேண்டும் என ஆட்சி மேலிடம் விரும்பியது'' என்றனர்.


இந்தப் போக்கை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. "சட்டம் அறிந்தவரான ப.சிதம்பரம், சி.பி.ஐ.யிடம் சரணடைந்திருக்கலாம். அதை தவிர்த்து தலைமறைவாக இருப்பது அவருக்கும் கட்சிக்கும் உகந்தது அல்ல. மேல்முறையீட்டிலும் சாதகமான ரிசல்ட் கிடைக்குமென சொல்ல முடியாது. அதனால் அவரை வெளியே வரச்சொல்லுங்கள்' என அகமதுபடேல், குலாம்நபிஆசாத், மல்லிகார்ஜுனகார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ராகுலிடம் வலியுறுத்த, சிதம்பரத்திடம் பேசினார் ராகுல்காந்தி. இதனையடுத்து 21-ந்தேதி இரவு வெளியே வந்த சிதம்பரம், காங்கிரஸ் தலைமையகத்தில் 4 நிமிட நேரம் தன்னிலை விளக்கமளித்தார். அங்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

  bjpசுவர் ஏறிய சி.பி.ஐ.! 

இரவு 9 மணிக்கு ஜோர்பாக்கிலுள்ள தனது வீட்டுக்கு விரைந்தார் சிதம்பரம். அவரை பின் தொடர்ந்து படையெடுத்தனர் அதிகாரிகள். கைது செய்யப்படலாம் என அறிந்து காங்கிரஸ் தொண் டர்கள் சிலரும் பத்திரிகையாளர்களும் ஜோர்பார்க் இல்லத்திற்கு குவிந்தனர். பிரதான கேட் உள்புறம் பூட்டப்பட்டிருந்ததால், வேக வேகமாக தட்டினார் கள் அதிகாரிகள். மேலிடத்திலிருந்து வந்த உத்தரவையடுத்து அதிகாரிகள் சிலர் மதில்மேல் ஏறி உள்ளே குதித்து கேட்டை திறந்து, மற்ற அதி காரிகளையும் நுழையச் செய்தனர். வழக்கறிஞர் களுடன் விவாதித்தபடி இருந்த சிதம்பரம், அதி காரிகளை எதிர்கொண்டு, "கைது செய்ய வந்திருக் கிறீர்களா? விசாரணைக்கு அழைத்து செல்கிறீர் களா?' என கேட்க, "கைது செய்ய வந்திருக்கிறோம்' என சொல்ல, நீங்கள் எடுத்து வந்துள்ள வழக்கில் என் மீது எஃப்.ஐ.ஆர். இல்லை, குற்றச்சாட்டு பதிவும் இல்லை. எப்படி கைது செய்ய வந்தீர்கள்?' என கோபம் காட்ட, "உங்கள் எதிர்ப்பை சி.பி.ஐ. அலுவலகம் வந்து தெரிவியுங்கள். அங்கு உங்களுக்கு பதில் கிடைக்கும்' என சொல்ல, அதை மறுத்து பேசினார் சிதம்பரம். இதனிடையே, "சிதம்பரத்தை யார் கைது செய்வது' என சி.பி.ஐ.யும் அமலாக் கத்துறையும் மோதிக்கொண்டதும் நடந்தது. காரில் ஏறும்போது ஏகத்துக்கும் பதட்டத்தில் இருந்தார் சிதம்பரம். 

ஹோம் மினிஸ்டருக்கு ஃபோனை போடு! 

சிதம்பரத்தை கைது செய்த சி.பி.ஐ., அவரை ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு தங்களது புதிய தலைமையகத் துக்கு அழைத்து வந்தது. இந்த புதிய தலைமை யகம், சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைத்ததுதான். சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த தலா 9 பேர் என 18 அதிகாரிகள் சிதம்பரத்தை கேள்விகள் கேட்டனர். விடியற்காலை 5 மணிக்குத்தான் தூங்க அனுமதித்தனர். மீண்டும் காலை 10 மணியிலிருந்து விசாரணை நடந்திருக்கிறது. அந்த விசாரணையில், "ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக அந்நிய முதலீட்டை அனுமதித்தது ஏன்?' என கேட்கப்பட்ட கேள்விக்கு, "அதற்கு என்ன ஆதாரம்? ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தொடுத்து விட்டு என்னை கைது செய்து என் னிடமிருந்து பதிலை பெற முயற்சிக்கிறீர்கள்' என கோபம் காட்டியிருக்கிறார். அப்போது, இந்திராணி முகர்ஜி கொடுத்த வாக்குமூல வீடி யோவை போட்டுக்காட்டியிருக்கிறது சி.பி.ஐ.

லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப் பட்ட பெண்மணி அப்ரூவராக மாறினால் அவர் சொல்வது எப்படி உண்மையாகும்? வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் பற்றிக் கேட்டுவிட்டு, வழக்குக்கு தொடர்பே இல்லாத பல கேள்விகளை கேட்க, ஒரு கட்டத்தில் மிகவும் கோபமான சிதம்பரம், "கணக்கு தீர்க்கப் பார்க்கிறாரா உங்கள் ஹோம் மினிஸ்டர் (அமித்ஷா)? ஃபோன் போடுங்கள். அவரிடமே கேட்கிறேன்' என சீறியிருக்கிறார். அதன்பிறகு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு எதிர் கேள்வி கேட்ட சிதம்பரத்திடம் பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள் என்கின்றன டெல்லி தகவல்கள். 

9 வருட பகையை தீர்த்த அமித்ஷா! 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2008 முதல் 2012 வரை உள்துறை அமைச்சராக இருந்தார் சிதம்பரம். அப்போது குஜராத்தின் முதல்வராக மோடியும் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்தனர். மார்பிள் பிஸ்னெஸ் கிரிமினலான சொராபுதினுக்கும் மார்பிள் பிஸ்னெஸ் ஜாம்ப வான்களுக்கும் மோதல் இருந்த நிலையில், அமித்ஷாவை சந்தித்து சொராபுதின் மீது புகார் தெரிவித்தனர் மார்பிள் உலக ஜாம்ப வான்கள். இந்நிலையில் சொராபுதின், அவரது கூட்டாளியான பிரஜாபதி, சொராபுதின் மனைவி கவுசர் ஆகியோர் என்கவுன்ட்டரில் தீர்த்துக் கட்டப்பட்டனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ., என்கவுண்டரில் அமித்ஷா உள்பட காவல்துறை அதிகாரிகள், மார்பிள் பிஸ்னெஸ் முதலைகள் என பல பேருக்கு தொடர்பு இருப்பதை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்திடம் விவரித்தனர்.

அவரது உத்தரவுப்படி அமித்ஷாவை கைது செய்ய சி.பி.ஐ.அதிகாரிகள் குஜராத் விரைந்தனர். தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தான் அந்த டீமுக்கு தலைமை தாங்கினார். கைது செய்ய சி.பி.ஐ. வருவதை அறிந்து, மோடியும் அமித்ஷாவும் சிதம்பரத்திடமே பேசினார்கள். சிதம்பரமோ, "சட்டம் தன் கடமையை செய்கிறது' என அலட்சியமாக பதிலளித்துள்ளார். 3 மாதம் சிறையில் இருந்த பிறகு அமித்ஷாவுக்கு, "குஜராத் தில் நுழையக்கூடாது டெல்லியிலேயே தங்கியிருக்க வேண்டும்' என நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இதனால் 2012 வரை சொந்த மாநிலத்திலிருந்த மனைவி, குழந்தைகளை அமித்ஷா பார்க்க முடியவில்லை. தனது ஆட்சிக்கும் அரசியலுக்கும் அமித்ஷா விவகாரம் பெரிய பின்னடைவாக கருதினார் குஜராத் முதல்வராக இருந்த மோடி. வழக்கு மகாராஷ்ட்ராவுக்கு மாற்றப்பட்டது. அதில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த அமித்ஷாவை மும்பை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி லோயா கண்டித்தார். ஒரு கட்டத்தில் அவர் மாற்றப்பட்ட நிலையில் திடீரென மர்ம முறையில் மரணமடைந்தார் லோயா.

2014 ல் பிரதமரானார் மோடி. சொராபுதின் என்கவுண்டர் வழக்கிலிருந்து குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார் அமித்ஷா. சிதம்பரத் தால் நேர்ந்த துயரம் அமித்ஷாவை விரட்டிக் கொண்டே இருக்க, இரண்டாவது முறையாக 2019-ல் மீண்டும் பிரதமரான மோடியின் அமைச்ச ரவையில் மத்திய உள்துறை அமைச்சரானார் அமித்ஷா. எந்த உள்துறையின் மந்திரியாக இருந்துகொண்டு சி.பி.ஐ.யை வைத்து தன்னை சிதம்பரம் கைது செய் தாரோ அதே சி.பி.ஐ.வைத்து சிதம்பரத்தை கைது செய்ய அவர் மீதான வழக்கை தூசிதட்டினார் அமித்ஷா. 9 வருட பகை தீர்க்கப்படும் வகையில், சிதம்பரத்தின் கைது படலம் அரங்கேறியது.

சி.பி.ஐ.யின் 5 நாள் கஸ்டடியைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் கஸ்டடிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம். திகாருக்கு அனுப்பாமல் ப.சி.யை விடுவதில்லை என்பதில் அதிதீவிர கவனம் செலுத்தும் அமித்ஷா, காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற நோக்கத்தை ப.சி. வதம் மூலம் தொடங்கி, காங்கிரசை கதம்..கதம் என ஆக்குவதில் மோடிக்கு துணையாக இருக்கிறார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...