ADVERTISEMENT

ஈழத்தமிழ் அகதிகள் பாவப்பட்டவர்களா?

10:32 PM Jan 03, 2020 | vasanthbalakrishnan

1948 ஆம் ஆண்டு இலங்கை விடுதலை அடைந்த பிறகு இலங்கை குடியுரிமைச் சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அப்போதிருந்து தமிழர்களுக்கு பிரச்சனை உருவாகியது. முதலில் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர்களை இந்தியாவுக்கு கடத்த வேண்டும் என்றுதான் அரசு திட்டமிட்டது.

இவர்களை இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று இலங்கை அரசு முத்திரை குத்தியது. பிரிட்டிஷார் ஆட்சியில் இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இவர்கள். இவர்களை இந்திய அரசு திரும்ப்பெற வேண்டும் என்று இலங்கை அரசு வற்புறுத்தியது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்தது. தமிழர்கள் ஆங்கிலத்தை படித்து, இலங்கை அரசு அலுவலகங்களில் பெரும்பான்மையான பொறுப்புகளில் இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் 25 சதவீதம் தமிழர்களும், 75 சதவீதம் சிங்களர்களும் இருந்தனர். ஆனால், அரசு பொறுப்புகளில் சிங்களர்கள் சிறுபான்மையாக இருந்தனர்.

ADVERTISEMENT



இதையடுத்தே 1956ல் சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களும், இடதுசாரிக்கட்சிகளும் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 1958 ஆம் ஆண்டு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அரசாங்கம் நிறைவேற்றிய ஒரே மொழி சட்டத்தால் இலங்கை அரசில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி தமிழர்கள் முழுமையாக பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று தமிழர் கட்சிகள் கருதின. இலங்கை அரசின் இந்தச் சட்டம் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுபான்மை தமிழர்களுக்கு அநீதி இழைப்பதாக குற்றம்சாட்டினார்கள்.

ஆனால், தங்கள் பிரதிநிதியாக தமிழர்கள் தேர்வுசெய்திருந்த தமிழ் தேசிய இலங்கை தமிழ் அரசுக் கட்சி, சிங்கள மொழியுடன் துணை மொழியாக தமிழ் இருக்கும் என்ற அரசின் உறுதியை ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த முடிவை இடதுசாரிக் கட்சிகள் ஏற்கவில்லை.

தற்காலிக தீர்வை தொடர்ந்து, 1960கள் முழுவதும் போராட்டங்களும், அரசு ஒடுக்குமுறைகளும் நீடித்தன. ஒவ்வொருமுறையும் போராட்டங்கள் தீவிரமடையும்போது அரசு கொஞ்சம் இறங்கிவருவது வழக்கம். ஆனால், 1972ல் தமிழர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையில் தர நிர்ணயக் கொள்கையை அமல்படுத்தியது. இதையடுத்து, தமிழர்களின் பல்கலைக்கழக வாய்ப்புகள் பறிபோயின. இதன்விளைவாக 1977ல் இலங்கையில் ஆட்சியை பிஎன்பி கட்சி கைப்பற்றிய பின் மிகப்பெரிய இனக்கலவரம் மூண்டது. இதன் உச்சகட்டமாக 1981ல் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய நூலகத்தை சிங்களர்கள் தீவைத்து எரித்தனர். உலகையே உலுக்கிய இந்த தீவைப்புச் சம்பவம் தமிழர்கள் மத்தியில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் தமிழ் தீவிரவாத குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தன. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப்புலிகள் என்று பல அமைப்புகள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை தொடங்கியிருந்தன.

ADVERTISEMENT

யாழ்ப்பாணம் நூலகம்


கொலைகளும், ஆட்கள் காணாமல் போவதும், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதும் இருதரப்பிலும் தொடர்கதையாகியது. இந்நிலையில்தான் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் இலங்கை ராணுவத்தின் ரோந்து வாகனம் ஒன்றை விடுதலைப்புலிகள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். அந்த வாகனத்தில் பயணம் செய்த 15 ராணுவ வீரர்களில் 13 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் இலங்கையை பதற வைத்தது.

இதையடுத்து சிங்களர்கள் வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழர் பகுதிகளில் புகுந்து கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் என அவர்கள் அட்டூழியம் தொடர்ந்தது. ராணுவ வாகனம் தாக்கப்பட்ட இரண்டாவது நாளில் அதாவது ஜூலை 25 ஆம் தேதி வெளிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய தளபதிகளான குட்டிமணி, ஜெகன் ஆகியோர் சிங்கள கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர்.

1960களில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட புரட்சிகர தமிழ் மாணவர்கள் சிங்களரின் அட்டூழியங்களுக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு கைதுசெய்து அதிகபட்ச பாதுகாப்புள்ள வெளிக்கடை சிறையில் அடைத்தது. இவர்கள் மீதான வழக்குகளை விசாரித்த நீதிபதி, சட்டத்தின்படியே இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகவும், ஒருநாள் இவர்கள் கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்றலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் பேசிய குட்டிமணி, “எனது மரணத்துக்கு பிறகாவது தமிழீழம் கிடைக்கலாம். ஆனால், அதை காண்பதற்கு வசதியாக, என்னை தூக்கிலிட்ட பிறகு, எனது கண்களை தானமாக கொடுக்க வேண்டும்” என்றார்.

ஆனால், சிங்களர்களோ அந்த விடுதலைப் போராட்டத் தியாகியைக் கொன்று, கண்களை தோண்டி தரையில் போட்டு, இரும்புத் தடியால் அடித்து நைத்தார்கள். தமிழர் பகுதிகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. இங்கு தமிழர் மாமிசம் கிடைக்கும் என்று போர்டு எழுதி வைத்து சிங்களர்கள் தங்கள் வெறியைத் தணித்துக் கொண்டனர்.

இந்த இனப்படுகொலையைத் தொடர்ந்து உயிர் தப்பினால் போதும் என்று வீடு, வாசல், நிலம் ஆகியவற்றை இழந்து ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வந்து குவிந்தனர். 1983 ஜூலை 24 முதல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி வரை 1லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக வந்தனர்.

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முக்கிய காரணமாக ராஜிவ் காந்தியும் எம்ஜியாரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கை வடகிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து 1989 ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை 25 ஆயிரத்து 585 தமிழர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் தமிழர் பகுதியில் அதிகரித்த நிலையில் அமைதிப்படையை எதிர்த்து 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக இலங்கை அரசுக்கு எதிராக விடுதலைப்புலிகள் சண்டையைத் தொடங்கினர். இதையடுத்து, மீண்டும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வரத் தொடங்கினார்கள். 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் பல்வேறு முகாம்களுக்கு வந்தனர்.

இந்நிலையில்தான் 1992 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பொறுப்பேற்ற ஜெயலலிதா அரசும் மத்தியில் பொறுப்பேற்ற நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசும் சுமார் 54 அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. இந்தச் சமயத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் சண்டை தீவிரமாக நடைபெற்றது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, இலங்கை ராணுவம் பிரபாகரனை கைதுசெய்தால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார்.

1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நார்வே அமைதி முயற்சி முறிந்ததால், மீண்டும் சண்டை தொடங்கியது. 2002 ஏப்ரல் வரை 23 ஆயிரத்து 356 பேர் அகதிகளாக வந்தனர். அத்துடன் நார்வே அமைதி முயற்சி மீண்டும் தொடங்கியதால் இருதரப்பும் சண்டை நிறுத்தம் அறிவித்தனர். எனவே அகதிகள் வருகை நின்றுவிட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று வகையில் அகதிகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டது. முகாம்களிலும், தனியாகவும் அகதிகள் தங்கியிருக்கின்றனர். அவர்களைத் தவிர, போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கென்று தனியாகவும் முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மொழிப் பிரச்சனை காரணமாக ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் தமிழ்நாட்டிலேயே தங்கவைக்கப்பட்டனர். இன்றைய நிலையில் 132 முகாம்கள் இருப்பதாகவும் அவற்றில் 80 ஆயிரம் அகதிகள் தங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால், 2019 டிசம்பர் மாத கணக்கின்படி 107 முகாம்களில் 59 ஆயிரத்து 595 பேர் தங்கியிருப்பதாகவும், முகாம்களில் இல்லாமல் தனியாக 34 ஆயிரத்து 638 பேர் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்ட அகதிகளின் குழந்தைகளுக்கு மிக முன்னேறிய சர்வதேச தரம்வாய்ந்த கல்வி வழங்கப்பட்டது. ஆனால், அந்த உரிமை 1991ல் ராஜிவ் கொலை செய்யப்பட்ட பிறகு திரும்பப்பெறப் பட்டது.

அதுமட்டுமின்றி, ராஜிவ் கொலைக்குப் பிறகு அகதிகள் மீது அரசின் சந்தேகப்பார்வை ஆழமானது. கடலோரமாக அமைக்கப்பட்டிருந்த சில அகதி முகாம்கள் உள்ளடங்கிய பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. அதுவரை சுதந்திரமாக நடமாடிவந்த அகதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். கட்டுப்பாடுகளை மீறும் அகதிகள் குடும்பத்திற்கு உதவித்தொகையும், ரேஷன் பொருட்களும் நிறுத்தப்பட்டன. இது அவர்களுக்குரிய தண்டனையாக கருதப்படுகிறது.



இதெல்லாம் ஐ.நா.வின் அகதிகளுக்கான கமிஷனுக்கு தெரியாதா? என்றால், இதை விசாரிக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஏனென்றால், சர்வதேச அகதிகள் பாதுகாப்பு மாநாட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. எனவே, சிறப்பு முகாம்களில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழருக்காக எந்த ஒரு மனித உரிமை அமைப்புக்கும் உரிமையில்லாமல் போயிற்று.

2009ல் நடைபெற்ற இலங்கை இறுதிச் சண்டைக்குப் பிறகும் தமிழ் ஈழம் பற்றியே பேசும் தமிழகத்தில் உள்ள அமைப்புகள், இங்குள்ள முகாம்களில் சித்திரவதைகள் அனுபவிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குறித்து எதுவுமே பேசுவதில்லை. ராஜிவ் கொலையில் தண்டனைபெற்று சிறையில் உள்ள ஏழுபேர் குறித்து பேசும் அளவுக்குகூட முகாம் அகதிகளுக்கான உரிமைகள் பறிபோவதைப் பற்றி பேசுவதில்லை. இந்நிலையில்தான் முதன்முறையாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தருவோம் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதிமுகவின் வெற்றிக்காக ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகள் பிரச்சாரம் செய்தன. ஆனால், ஈழம் பற்றி மட்டுமல்ல, ஈழத்தமிழர் அகதிகளுக்கு குடியுரிமை குறித்தும்கூட ஜெயலலிதா தலைமையிலான அரசு கவலையே படவில்லை.

இந்நிலையில்தான், மோடி தலைமையிலான பாஜக அரசு புதிய குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தில்கூட இலங்கையிலிருந்து வந்து சுமார் 1983 முதல் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் அகதிகளாக தஞ்சம்புகுந்த இலங்கைத் தமிழர்களுக்குக்கூட குடியுரிமை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. அவர்களுடைய உரிமைகளுக்காக வாதாடவேண்டிய மாநில அதிமுக அரசும் இதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறது. அவர்களுக்காக போராட வேண்டிய ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகளும் வாயை மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கின்றன. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர்கள் பொய்யான தகவல்களை கூறிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்தியவம்சாவளித் தமிழர்களுக்கு உரிமை வழங்கியதை அவர்கள் தவறாக திரித்து கூறுகிறார்கள். அதாவது, 1964 ஆம் ஆண்டு இலங்கை பிரதமராக இருந்த சிரிமாவோ பண்டாரநாயகாவும், இந்திய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி இலங்கை ஜனத்தொகையில் அன்றைக்கு 11 சதவீதமாக இருந்த 7 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்களை படிப்படியாக இந்தியாவுக்கு திரும்பப் பெறுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

2003 ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ளப்பட்டனர். இப்படி அழைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு, தமிழகத்தின் சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு குடியிருப்புகளும் குடியுரிமையும் வழங்கப்பட்டதைத்தான் பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையிலிருந்து அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் இன்றும் மூன்றாந்தர மனிதர்களாகவே தங்களுக்கென்று அடையாளமில்லாமல், நாடற்றவர்களாக வாழும் நிலையில் இருக்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT