Advertisment

ஆங்கிலேயர் கால தமிழ் எண் மைல்கல்  கண்டெடுப்பு

British Era Tamil Numerical Milestone Survey

விருதுநகரில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் செந்திவிநாயகபுரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல், முத்து முனியசாமியாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.

Advertisment

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல்கற்களில் ஊர்ப்பெயர்களை ஆங்கிலம், தூரத்தை ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய மைல்கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் VIRUDUPATI என ஆங்கிலத்திலும், விருதுபட்டி என தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், ‘௧’ என்ற தமிழ் எண்ணிலும் மைல்கல்லில் குறித்துள்ளனர். ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதால் இதன் எழுத்துகள் தெளிவாக இல்லை. இக்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது.

Advertisment

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915ல் நகராட்சியான விருதுநகர், 1923க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை ரயில் பாதை போட்டபோது, 1876ல் விருதுபட்டியில் இரயில் நிலையம் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது. இப்போதும் கூட இவ்வூர் ரயில் நிலைய சுருக்கக் குறியீடு விருதுபட்டியைக் குறிக்கும் VPT தான். அருப்புக்கோட்டையின் உற்பத்திப் பொருட்கள் வண்டிகள் மூலம் விருதுபட்டி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆயின. பொருட்களை விரைவாக கொண்டு செல்ல அருப்புக்கோட்டையிலிருந்து சரளைக்கல் சாலை போடப்பட்டபோது, இம்மைல்கல் வைக்கப்பட்டிருக்கலாம். தற்போது வைக்கப்படும் மைல்கல் போல இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டு சாலையைப் பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும்.

மேலும் விருது என்ற சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம், மரபுவழி எனப் பல பொருள்கள் உண்டு. முல்லை நில ஊர்கள் பட்டி எனப்படும். பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில்வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம். ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி இவ்வூர் ‘விருதுகள் வெட்டி’ என முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தபோது, 1869-ல் வெளியிடப்பட்ட நூலில் விருதுபட்டி என்றே இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.1875க்கு முன் நடப்பட்டதாகக் கருதலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

britain Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe