Advertisment

'குவாரிகளால் அதலபாதாள பள்ளங்கள்'- நிலநடுக்க அச்சம் நீங்காத விருதுநகர்!

801

'Bottomless chasms caused by quarries' - Virudhunagar remains fearless of earthquakes! Photograph: (virudhunagar)

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகள் குறித்து புதிய சர்ச்சை  எழுந்துள்ளது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஒரு அரசியல் கட்சி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் குவாரிகள் அத்துமீறி செயல்படுகின்றன என்றும், அதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் ‘குவாரி பணிகள் நிறுத்தப்பட்ட பிறகும் தோண்டப்பட்ட ஆழமான  பள்ளங்கள் பாதுகாப்பின்றி திறந்தவண்ணம் விட்டுவிடப்பட்டுள்ளன.  

Advertisment

மழைக்காலங்களில் இவை நீர் நிரம்பி உயிருக்கு ஆபத்தான பகுதிகளாக மாறுகின்றன. மேலும், வெட்டப்பட்ட கற்கள் அகற்றப்படாமல் மலைபோல்  குவிந்து கிடப்பதால் நிலத்தின் இயல்பான அமைப்பு மாறி மண் சரிவு அபாயம்  உருவாகியுள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல லட்சம் சதுர அடிகள்  பரப்பளவில் நிலம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தின் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கங்கள்  ஏற்படுகின்றன; அதுபோல இங்கும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி  ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறும் குவாரி நிர்வாகிகள் மீது  கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தோண்டப்பட்ட பள்ளங்களை அவசரமாக மூட  வேண்டும்.’  என்று கோரப்பட்டுள்ளது.

Advertisment
803
'Bottomless chasms caused by quarries' - Virudhunagar remains fearless of earthquakes! Photograph: (virudunagar)

இதுகுறித்து சமூக ஆர்வலர் விஜயகுமார் நம்மிடம் “ஒரு குவாரிக்கு உரிமம்  வழங்கும் போது வேலை முடிந்த பின் அந்த இடத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனையாகும். தோண்டப்பட்ட பள்ளங்களை நிரப்புதல், நிலத்தை சமப்படுத்துதல், மீண்டும் பயன்படக்கூடிய வகையில் மாற்றுதல் போன்றவை உரிமையாளர்களின் பொறுப்பாகும். இது வெறும் நடைமுறை விதி அல்ல, மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமையாகும்.சுரங்கத் துறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்களும், மாநில விதிகளும், குவாரி பணிகள் முடிந்த பின் நிலத்தை அப்படியே கைவிடக்கூடாது எனத் தெளிவாகக் கூறுகின்றன. உரிய அனுமதி இன்றி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது  விதிமுறை மீறலாகும். பள்ளங்கள் மூடப்படாமல் இருந்தால் மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் பாதிப்பு, விவசாய நிலங்கள் சேதம், நிலச்சரிவு அபாயம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின்  கீழும் நடவடிக்கை எடுக்க முடியும்.” என்றார்.    

ஆனால், இதற்கு மாறான விளக்கத்தை சுரங்கத்துறை தரப்பு முன்வைக்கிறது.  விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் முனைவர் சுகதா ரஹிமா நம்மிடம்  “இந்த நிலநடுக்கம் மனிதர்களால் உருவானது அல்ல. இது  இயற்கையாக பூமிக்குள் உள்ள பழமையான பாறை பிளவுகள் காரணமாக ஏற்பட்ட அதிர்வு. விருதுநகர்-ஸ்ரீவில்லிபுத்தூர்-வைப்பாறு பகுதிகளை ஒட்டிய நிலப்பரப்பில், பல லட்சம் ஆண்டுகளாக இருந்து வரும் “பாறை பிளவு  மண்டலம்” (Fault Zone) உள்ளது. பூமிக்குள் ஆழத்தில் இருக்கும் இந்தப் பாறை அடுக்குகள் மிகவும் சிறிய அளவில் நகரும் போது தான் இத்தகைய லேசான நில அதிர்வுகள் உருவாகின்றன. குவாரிகள் தோண்டப்படுவது அதிகபட்சம் 40 முதல் 50 மீட்டர் ஆழம் வரை மட்டுமே. ஆனால் நிலநடுக்கம் ஏற்படக் காரணமான பாறை நகர்வுகள் 10 முதல்  100 கி.மீ. ஆழத்தில் நடக்கின்றன. அதனால், குவாரி தோண்டுதல் மற்றும் நிலநடுக்கம் இரண்டுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. எல்லா வகை சுரங்கங்களுக்கும் ஒரே விதிமுறை கிடையாது. நிலக்கரி அல்லது சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் தோண்டிய பின் மண்ணால் நிரப்பி மூடும் நடைமுறை உள்ளது. ஆனால் கிரானைட் மற்றும் ரஃப்ஸ்டோன் (கட்டிடக் கல்) குவாரிகளுக்கு அப்படி பூர்த்தி செய்து பழைய நில அமைப்பாக மாற்ற  வேண்டும் என்ற கட்டாய விதி இல்லை. காரணம், இங்கு பெரும்பாலும் கல்  மட்டுமே எடுக்கப்படுகிறது. கல் எடுத்த இடத்தை மீண்டும் மண்ணால்  நிரப்பினாலும் அது இயல்பான நிலமாக மாறாது. 

799
'Bottomless chasms caused by quarries' - Virudhunagar remains fearless of earthquakes! Photograph: (virudunagar)

குவாரி பகுதிகளுக்கு வெளியே மலைபோல் குவிந்திருக்கும் கற்கள் “வேஸ்ட்”  என்று பலர் நினைத்தாலும், அவை முழுமையாகப் பயனற்றவை அல்ல. அவை “கிரானைட் வேஸ்ட்” எனப்படும் துணைக்கற்கள். இவற்றை அரைத்து எம்- சாண்ட் (M-Sand) தயாரிக்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் பழைய கல் குவியல்கள் எதிர்காலத்தில் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படும் மூலப்பொருளாக மாறலாம். அதனால் புதிய இடங்களில் அதிகமாக நிலம்  தோண்ட வேண்டிய அவசியமும் குறையும். ஆனால் இதை நடைமுறைப்படுத்த நில உரிமையாளர் தனியாக சுற்றுச்சூழல்  அனுமதி பெற வேண்டும். சில இடங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது,  உரிமை பிரச்சினைகள் இருப்பது போன்ற காரணங்களால் பழைய குவியல்கள் அப்படியே நீண்ட காலமாகக் கிடக்கின்றன.  செயல்படாத குவாரிகளைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்ற நடைமுறைகள் உள்ளன. சில இடங்களில் அவை நடைமுறையில் இருக்கும்; சில இடங்களில் அனுமதி, வழக்கு போன்ற காரணங்களால் தாமதப்படலாம்.  இருப்பினும், பெரும்பாலான குவாரிகள் மனிதர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் அல்ல; இயற்கையாகவே உயர்ந்த பாறைப் பகுதிகளில்  அமைந்தவை என்பதால் ஆபத்து மிகவும் குறைவு.    

802
'Bottomless chasms caused by quarries' - Virudhunagar remains fearless of earthquakes! Photograph: (virudhunagar)

சமீபத்தில் இங்கு பதிவான அதிர்வு ரிக்டர் அளவையில் சுமார் 3 மட்டுமே. இது  மனிதர்கள் லேசாக உணரக்கூடிய அளவு தான்; பெரிய சேதத்தை  ஏற்படுத்தக்கூடிய அளவு அல்ல. இமயமலைப் பகுதிகளைப் போல அடிக்கடி  பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் மண்டலமாக இந்தப் பகுதி கருதப்படவில்லை.  இங்கு நிலத்தட்டு ஒப்பீட்டளவில் உறுதியாக உள்ளது. அதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.   சமீபத்திய நிலநடுக்கம் இயற்கையான பாறை இயக்கத்தால் ஏற்பட்டது; கிரானைட் குவாரிகள் காரணமில்லை. பழைய குவாரிகள் மூடப்படாமல்  இருப்பதற்கும் தனித்தனி சட்ட, தொழில்நுட்ப காரணங்கள் உள்ளன. வெளியே குவிந்திருக்கும் கற்களும் எதிர்காலத்தில் பயன்படும் வளமாகவே பார்க்கப்படுகின்றன. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.   

இதனால், ஒருபக்கம் மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் பாதுகாப்பு அச்சம் எழுப்ப, மறுபக்கம் அதிகாரிகள் இயற்கையே காரணம் என விளக்கம் அளிக்கின்றனர்.  மூடப்படாத குவாரிகள் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு அரசுத்  தரப்பிலிருந்து பதில் வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

earthquake enviroinment Sivakasi Srivilliputhur stone quarry Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe