ADVERTISEMENT

பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!

10:43 PM Dec 14, 2017 | Anonymous (not verified)

பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே
எங்கள் உறுப்பினர்கள் தான்!

ஆர்.கே.நகரில் 'குடிப்போர் சங்க' வேட்பாளர்!



செல்லபாண்டியன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் டி.டி.வி.தினகரன் , மதுசூதனன், மருதுகணேஷ், என நட்சத்திர வேட்பாளர்களின் பரபரப்பான பரப்புரைகளால் பதறிப்போய் இருக்கும் போது அனைவருக்கும் போட்டியாக 'தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க'மும் களமிறங்கியுள்ளது. இதன் வேட்பாளராக எம்.எஸ்.ஆறுமுகம் போட்டியிடுகிறார். விஷால், தீபா போன்றவர்களே வேட்பு மனு தாக்கலில் தள்ளாடிப்போன போது, இவர்கள் தெளிவாக செய்து களத்திற்கு வந்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றனர். 'தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க'த்தின் வாக்குறுதிகள் என்ன, வெற்றி வாய்ப்பு (?!) எப்படி என்று அதன் தலைவர் செல்லபாண்டியனிடம் பேசினோம்.


உங்கள் அமைப்பின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

தமிழ்நாட்டில் மொத்தம் 61.4% சதவீதம் பேர் மது பிரியர்களா இருக்காங்க. எங்களுக்கு, அரசு மறுவாழ்வு மையங்கள் அமைத்துத்தர வேண்டும். ஆர்.கே.நகரில் இருக்கும் அனைத்து மதுபான கடைகளும் தனியாக ஓரிடத்துக்கு மாற்றப்பட வேண்டும். எங்கள் வேட்டபாளர் வெற்றி அடைந்தால் இந்த நடவடிக்கை எடுக்கச்சொல்லி அரசிடம் முறையிடுவோம். முக்கியமாக கோயில்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் உள்ள மதுபான கடைகள் முற்றிலும் நீக்கிவிட்டு எங்களுக்கான அனைத்து வசதிகள் உடைய உல்லாச மதுபான விடுதிகள் வேண்டும். எங்களால் தான் அரசுக்கு வருடம் முப்பதாயிரம் கோடி வருமானம் வருகிறது. அதனால் மதுகுடித்துவிட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக மாதம் 5000 ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும். இது தான் எங்கள் கட்சியின் கொள்கை, இதைத்தான் தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருக்கிறோம். இதற்கு முன்பு இரண்டு முறை போட்டி போட்டுள்ளோம். எங்கள் கருத்தை மக்களிடம் தெளிவாகக் கூறியுள்ளோம். இந்த முறை எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.







மது என்பதே உடலுக்கு கேடு தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மதுவின் தரம் இன்னும் குறைவாக இருக்கிறது என்றும் அதனால் அருந்துவோரின் உடல்நிலையை மோசமாக பாதிக்கிறது என்றும் சொல்லப்படுகிறதே ?

ஆம், மதுவின் தரம் குறைந்து தான் உள்ளது. வெளிநாடுகளில் இதற்கென்று ஆணையம் வைத்து, அதன் தரத்தை பராமரிக்கிறார்கள். ஆனால் இங்கு அதுபோல் எதுவுமில்லை. வெளிநாட்டு மதுபானங்கள் அரிசி, கோதுமை மற்றும் பழ வகைகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இங்கு கரும்பு சாற்றிலிருந்து வரும் மொலாசஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ்நாட்டில் மொத்தம் 250 வகையான மது உள்ளது. இவை அனைத்துமே இந்த முறையில் தான் தயாரிக்கப்படுகின்றன. அதனால் தான் தரம் குறைவாக உள்ளது. பத்து ரூபாய் பிஸ்கட் கெட்டுப் போனால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறமுடிகிறது. எங்களுக்கும் அதுபோன்ற நீதி வேண்டும். நாங்கள் நூறு ரூபாய்க்கு மது வாங்கி குடிக்கிறோம். எங்களுக்குக்கான மது தரமானதாக இருக்க வேண்டாமா? அதனால் 2006 உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு கீழ் மதுவையும் கொண்டுவரவேண்டும். இதைப் பற்றி சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம்.





நீங்களே சொல்லுகிறீர்கள்... மது குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று. இறக்கிறார்கள் என்பது தெரிந்தும் ஏன் மதுவை குடிக்க வேண்டும்?

அரசு தான் காரணம். ஆடு , மாடு, இலவசமா கொடுக்குது. அதுபோல கட்சிக்காரர்கள் நடத்தும் 12 ஆலைகளிலிருந்து அரசு கொள்முதல் செய்து இந்த மதுபானத்தை கொடுக்கிறது. அது நல்லது என்று நினைத்து தான் நாங்கள் குடித்தோம். அதன் மீது ஆசை அதிகமாக கடைசியில் அடிமையாகிவிட்டோம். தமிழ்நாட்டில் ஓட்டு போடுபவர்களின் சதவீதத்தை விட குடிப்பவர்களின் சதவீதம் அதிகம். அரசியல்வாதிகள் மாநாடுகளில் குவார்ட்டரும் கோழி பிரியாணியும் அளித்து எங்களை ஊக்கப்படுத்தி, குடிப்பதற்கு கடைகளை திறந்து வைத்து எங்களை அடிமையாக்கிவிட்டனர். இதற்கு காரணம் அரசு மட்டுமே.





நீங்கள் இந்த சங்கம் ஆரம்பித்ததை உங்கள் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டார்களா? இந்த சங்கம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது? எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் ?

நீங்கள் மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காகவும் நியாயத்திற்காகவும் போராடுகிறீர்கள் என்று சொல்லி என் குடும்பத்தார் என்னை ஆதரித்தனர். தமிழ்நாட்டில் எங்கள் சங்கம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் குவார்ட்டர் பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான். ஆனால் முறையாக அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் மூவாயிரம் பேர். எங்கள் சங்கத்தில் இணைய வேண்டும் என்றால் 250 மதுபான வகைகளில் 15 வகையை சரியாக சொன்னால் உறுப்பினராக சேர்க்கப்படுவர்.

நம்மை உறுப்பினரா சேர்ப்பது கடினம் தான் என்றெண்ணிக் கொண்டே திரும்பி வந்தேன்.

ஹரிஹரசுதன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT