Skip to main content

சங்ககால மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

ramanathapuram district, mudukulathur black red pot tiles invention

 

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

முதுகுளத்தூர் அருகே உள்ள கருங்கலக்குறிச்சி கண்மாய் பகுதியில் வாழவந்தாள் அம்மன் கோயில் எதிரில், பண்ணைக்குட்டை தோண்டியபோது அதிகளவில் பானை ஓடுகள் வெளி வந்ததாக அவ்வூரைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ramanathapuram district, mudukulathur black red pot tiles invention

 

அதன்பேரில், அக்கண்மாய்ப் பகுதியில் ஆசிரியர் சண்முகநாதனுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்த பின், தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, "பண்ணைக்குட்டை தோண்டிய பகுதியில், ஒரு நுண்கற்காலக் கருவி, வழுவழுப்பான மற்றும் சொரசொரப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், தடித்த மற்றும் வழுவழுப்பான சிவப்பு நிற பானை ஓடுகள், தரையில் பதிக்கப்படும் சுடுமண் ஓடுகள், சுடுமண்ணால் ஆன விளக்குகள், குழாய், மூடிகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், துளையுள்ள பானை ஓடு, சிறிது உடைந்த சிவப்புநிற சிறிய குவளை, மான் கொம்பின் உடைந்த பகுதிகள், அரைப்புக் கல் மற்றும் குழவி, பெரிய செங்கல், குறியீடுகளுள்ள இரு பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

 

சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் மற்றும் பண்ணைக்குட்டை பகுதிகளில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட பழம் பொருட்களைக் கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு ஊர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. 

 

இங்கு கிடைத்த ஒரு முழு செங்கலின் நீளம் 29 செ.மீ., அகலம் 15 செ.மீ., உயரம் 7 செ.மீ. ஆகும். இது கி.பி. 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககால செங்கல் அளவில் உள்ளது. இதேபோன்ற செங்கல், கமுதி அருகே பேரையூரிலும் கிடைத்துள்ளது. இரு கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் ஆங்கில எழுத்துகளான ‘E, H’ போன்ற குறியீடுகள் உள்ளன. இதில் ‘E’ போன்ற குறியீடு அழகன்குளம் அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரைப்புக்கல் சிவப்பு நிற கல்லிலும், குழவி கருங்கல்லிலும் செய்யப்பட்டுள்ளன. 

ramanathapuram district, mudukulathur black red pot tiles invention

 

இங்கு கண்டெடுக்கப்பட்ட மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. பொதுவாக மான்களின் கொம்புகளைக் கொண்டு அவற்றை இரலை மான், உழை மான் என இரு வகையாகப் பிரிப்பர். இதில் இரலை மானின் கொம்புகள் உள்துளை இல்லாமல் உள்ளே கெட்டியாக இருக்கும். இதன் கொம்பில் கிளைகள் இருக்காது. இவற்றின் கொம்பு கீழே விழுந்து புதிய கொம்பு முளைக்காது.

 

ஆனால், உழை மானின் கொம்புகள் உள் துளையுடையவை. கீழே விழுந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இவற்றின் கொம்புகளில் கிளைகள் உண்டு. கீழே விழுந்த உழை மானின் கொம்புகளை மருந்தாகப் பயன்படுத்துவர். கெட்டியான இரலை மானின் கொம்புகளை ஆயுதமாகப் பயன்படுத்துவர்.

 

இவ்வூரில் கிடைத்த உள்துளையுடன் உள்ள கொம்புகளைக் கொண்டு இவை உழை எனும் புள்ளிமானின் கொம்புகள் என்பது உறுதியாகிறது. மேலும், இவ்வூருக்கு அருகில் இம்மானின் பெயரில் உழையூர் என்ற ஒரு ஊர் உள்ளது. மேலக்கொடுமலூர் கோயில் கல்வெட்டில், வடதலைச் செம்பிநாட்டு உழையூர் என்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.

 

ramanathapuram district, mudukulathur black red pot tiles invention

 

அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன், உத்தரகோசமங்கை அருகில் உள்ள கீழச்சீத்தை என்ற ஊரில் மேற்பரப்பாய்வில் கண்டெடுக்கப்பட்ட மான் கொம்புகள் உள்துளை இல்லாதவை. எனவே அவை இரலை மானின் கொம்புகள் என்பதை அறியமுடிகிறது. இரலை மானை புல்வாய் எனவும் அழைப்பர். அம்மானின் பெயரில் கமுதி அருகில் புல்வாய்க்குளம் என்ற ஊர் அமைந்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.