ADVERTISEMENT

கருப்பு சந்தையில் கரோனா மருந்து! கல்லாகட்டும் மெடிசன் மாஃபியாக்கள்!

06:42 AM Aug 22, 2020 | rajavel

ADVERTISEMENT

உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கருப்புச்சந்தையில் பலமடங்கு விலை கூடுதலாக விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தபோது... "வெவ்வேறு வைரஸ் நோய்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவந்த ரெம்டிசிவிர் (Remdesivir) மற்றும் டோசிலிஸுமேப் (Tocilizumab)ஆகிய இரண்டு மருந்துகள்தான் தற்போது கரோனா நோய்த்தடுப்பு மருந்தாக மருத்துவமனைகளில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த, மருந்துகள்தான் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்காமல் ப்ளாக் மார்க்கெட்டில் பலமடங்கு விலை கூடுதலாக விற்கப்படுகிறது என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் நிறைய ஸ்டிங் ஆபரேஷன் எல்லாம் செய்து பலரை அரெஸ்ட் செய்து கொண்டிருக்கின்றன. மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை. கருப்பு சந்தையில் கரோனா மருந்துகளை விற்ற 20 பேரை மகாராஷ்டிராவில் அரெஸ்ட் செய்திருக்கிறார்கள். குஜராத்தில் ஏற்கனவே கைதான தோடு மீண்டும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அகமதாபாத்திலும் கைது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட தமிழகத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது, தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.எ.எஸ்., தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குனர் உமாநாத் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குனர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனர் சிவபாலன் ஆகியோருக்கு புகார் கொடுத்துள்ளது லஞ்ச ஊழலுக்கு எதிரான ‘அறப்போர்’ இயக்கம்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ருதி, "ரெம்டிசிவிர் மருந்தை தயாரித்து உலகம் முழுக்க விற்பனை செய்ய காப்புரிமை வாங்கியிருக்கும் கைலிட்ஸ் சையின்சஸ்(Gailits Science) மருந்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து சிப்லா, ஹெடிரோ ஆகிய இரண்டு மருந்து கம்பெனிகள்தான் ஆரம்பத்தில் விற்பனை செய்வதற்கான அனுமதியை (Supply Licence) வாங்கியிருந்தன. பிறகு மைலடன், ஜூபிலண்ட் அனுமதி வாங்கியிருக்காங்க.

இரண்டுபேர் விற்பனை செய்யும்போதே இம்மருந்தின் விலையை அரசாங்கம் நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 4,800 ரூபாய்க்கு மத்திய மருந்துகட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation) பரிந்துரை செய்தது. அதனால், சிப்லா கம்பெனி 4800 ரூபாய்க்கும், ஹெடிரோ கம்பெனி 4200 ரூபாய்க்கும் ரெம்டிசிவிர் மருந்தை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டன. மேலும், இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்ய அனுமதி வாங்கியிருக்கின்றன. அதனால், இன்னும் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாட்டை உருவாக்கி ப்ளாக் மார்க்கெட்டில் விற்க ஆரம்பித்து விட்டார்கள். அதாவது, 4,000 ரூபாய்க்குள் விற்கவேண்டிய ரெம்டிஸிவர் மருந்தை 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய்வரை விற்கிறார்கள்.

அதேபோல், கரோனாவை தடுக்க வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் மற்றொரு டோசிலிஸுமேப் (Gailits Science) என்ற மருந்தானது ஆஃப் லேபிள் மருந்து. அதாவது, இந்த மருந்து ஆராய்ச்சி லெவலில்தான் உள்ளது. இந்த, மருந்தை நோயாளிகளுக்கு எவ்வளவு அளவில் எப்படி கொடுக்கவேண்டும் என்ற, வரைமுறைகூட இன்னும் வகுக்கப்படவில்லை. இதன், சாதக பாதகங்களைச் சொல்லித்தான் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். அரசாங்கம் நிர்ணயித்த இதன் விலை 32,000 ரூபாய். ஆனால், எங்களுக்கு நெருங்கிய குடும்பத்தினர் இந்த மருந்து கிடைக்காமல் கருப்பு சந்தையில் 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். மேலும், 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல் வருகிறது.

இப்படி, சாதக பாதகங்கள் உள்ள மருந்தை சாதாரண புழக்கத்திற்கு அனுமதித்ததே தவறு. காரணம், டோசிலிஸுமேப் மருந்தை தயாரித்து விற்பனை செய்யும் ரோச் (Roche) மருந்து கம்பெனியின் ஆராய்ச்சியிலேயே கரோனாவை சரியாக குணப்படுத்தவில்லை என்று ரிசல்ட் வந்துள்ளது. வேறுமாதிரி ஆராய்ச்சியில் சரியாக வரும் என்று சமாளித்திருக்கிறது அம்மருந்து கம்பெனி. அப்படியென்றால், அதன் தரம் எப்படி இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

அதுவும், இந்த ரெம்டிசிவிர், டோசிலிஸுமேப் மருந்துகளை மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் விற்பனை செய்யவேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அரசாங்கம் அனுமதி கொடுத்தது. இதையும் மீறி, ப்ளாக் மார்க்கெட்டில் வந்துவிட்டது. அதனால்தான், புகார் கொடுத்துள்ளோம்'' என்கிறார். இதுகுறித்து, தனியார் நோய்க்குறியியல் துறை துணைத்தலைவர் mmஏ.சுரேஷ்குமார் நம்மிடம், "கரோனா வைரஸ் போன்று ஃப்ளேக், காலரா, மெர்ஸ், ஜிகா, நிபா, எபல்லோ, ஸ்பேனிஷ் ப்ளு என பல்வேறு வைரஸ் நோய்கள் உலகத்தில் பரவி பலகோடி உயிர்களை வேட்டையாடுகின்றன. இதில், பெரும்பாலான நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அதேபோல், கரோனாவுக்கும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆராய்ச்சியில் தான் உள்ளது. அதேபோல், சைடஸ் கேடில்லா (zydus cadila) என்ற ஹைதரபாத் கம்பெனி சைக்கோட்டிக் என்ற தடுப்பூசியையும், அதே ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் என்ற தடுப்பூசியையும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியும் ஆஸ்ட்ரா செனிகா என்ற கம்பெனியும் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பூசியையும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்கான, இரண்டாவது, மூன்றாம் கட்ட ஆராய்ச்சி யானது பூனேவிலுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளது. அதனால், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவந்த மருந்து களைத்தான் தற்போது கொடுத்து பார்க்கிறார்கள். அதில், ஓரளவுக்குத்தான் குணப்படுத்துகின்றன.

தற்போது கரோனா மருந்துகள் மாத்திரை வடிவிலும் குறைந்த விலைக்கு வர ஆரம்பித்துவிட்டன. அதாவது லூபின் என்ற மருந்து கம்பெனி கோவிஹால்ட் என்ற 200 எம்.ஜி. அளவுள்ள ஒரு மாத்திரையை 49 ரூபாய்க்கும், சன் ஃபார்மா என்ற மருந்துக் கம்பெனியின் புளூகார்ட் 200 எம்.ஜி. அளவுள்ள ஒரு மாத்திரையை 35 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இப்படி, மருந்துகளின் விலை குறைவாக விற்க ஆரம்பித்துவிட்ட சூழலிலும் பல்லாயிரக்கணக்கில் விலை அதிகமாக விற்பனை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்கிறார் அவர்.

ரஷ்ய அதிபர் புடின் தன் மகளுக்கே பரிசோதனை செய்து, கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக சொன்னபோதும், உலக சுகாதார நிறுவனம் உடனடியாக அதனை ஏற்காமல், இன்னும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே அது பற்றி இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து எதுவும் இல்லை.

இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தும் மருந்துகள் கருப்புச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று அரசாங்கத்துக்கு புகார் கொடுத்த ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவச்சங்கத்தின் மாநிலச்செயலாளர் டாக்டர் ஏ.கே. ரவிக்குமாரிடம் நாம் கேட்டபோது, "நாங்கள் புகார் கொடுத்ததுமே அதுகுறித்த விசாரணையை தமிழக மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை தொடங்கிவிட்டது. கரோனா தடுப்பு மருந்துகளை விலை கூடுதலாக கருப்புச்சந்தையில் விற்பவர்கள் மீது நிச்சயமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல், தமிழக அரசின் தமிழ்நாடு சேவைப்பணிகள் கழகத்தின் மூலம் இந்த மருந்துகளை வாங்கி, கரோனா சிகிச்சைக்கு அனுமதி கொடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்தால் நிச்சயமாக நோயாளிகள் பயன் அடைவார்கள்'' என்றார் கோரிக்கையாக.

மற்ற மாநிலங்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனர் சிவபாலனிடம் நாம் கேட்டபோது, "மதுரையைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர்கள் 5 பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பிறகுதான், உண்மை தெரியவரும்'' என்றார் அவர். ஆக, தமிழகத்திலும் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கும் ப்ளாக் மார்க்கெட்டர்ஸ் சிக்கப்போகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT