Skip to main content

நிழல் தலைவரா நட்டா..? சர்ச்சைகளும், சவால்களும்..!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

நிழல் தலைவரா நட்டா..? பாஜக தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா பொறுப்பேற்ற பின்னர், நேற்றிலிருந்து அவரைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளில் மிகப்பிரதானமானது. இந்த கேள்வி எழுவதற்கான முக்கிய காரணம், அரசியலில் அவர் கடந்து வந்த பாதையும், பாஜக முன்னாள் தலைவர் அமித்ஷாவின் ஆளுமையுமே எனலாம். ஐந்தாண்டுகாலம் அமித்ஷா அமர்ந்திருந்த ஒரு மிகப்பெரிய பதவியில், மோடிக்கு நெருக்கமானவரும், அமித்ஷாவின் நன்னம்பிக்கைக்கு உரியவருமான நட்டா தற்போது அமர்த்தப்பட்டுள்ளார். பெரிதாக ஊடக வெளிச்சம் படாத ஒரு அரசியல்வாதி நாட்டின் மிகப்பெரிய கட்சிக்கான தலைவராக வளர்ந்தது எப்படி..? தலைவராக அவர் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்னென்ன..? 

 

bjp workers expectations from their president j.p.nadda

 

 

59 வயதான ஜெ.பி.நட்டா 1960 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தின் பாட்னாவில் பிறந்தார். தனது பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி படிப்பை பீஹாரில் முடித்த நட்டா, சட்டம் பயில்வதற்காக ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு சென்றார். பாட்னாவில் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைத்துக்கொண்டு அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்தார். அப்போது நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய இவர், 1977 மாணவர் சங்க தேர்தலில் வென்று மாணவர் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல ஹிமாச்சலில் சட்டம் பயின்றபோது, பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். 1984 ஆம் ஆண்டு அந்த அமைப்பு சார்பில் மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்பான எஸ்.எஃப்.ஐ வேட்பாளரை தோற்கடித்தார். பிறகு 1993 வரை ஏ.பி.வி.பி மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் தலைமைப் பதவிகளை வகித்தார்.

இப்படி மாணவப் பருவத்திலிருந்து படிப்படியாக பாஜகவின் ஒவ்வொரு படிநிலையிலும் அழுத்தமான தடத்தைப் பதித்த நட்டா, 1993 ஆம் ஆண்டு ஹிமாச்சல் சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிபெற்று சட்டசபையிலும் அடியெடுத்து வைத்தார். 1994 ஆம் ஆண்டு பாஜக சட்டப்பேரவை தலைவராக பொறுப்பேற்ற அவர், 1998 ஆம் ஆண்டிலும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஹிமாச்சல் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஹிமாச்சலின் பிலாஸ்பூர் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்ற நட்டா, மூன்றாவது முறையாக 2003 ஆம் ஆண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை அவருக்கும், அவரது கட்சிக்கும் தோல்வியே மிஞ்சியது. இந்த தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. 

 

sd

 

தேர்தலில் தோல்வியை சந்தித்து ஐந்து ஆண்டுகள் சட்டசபைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டாலும் பாஜக உயர்மட்டத்தில் அவருக்கான செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே தான் இருந்தது. நிதின் கட்கரி போன்ற பல முக்கிய பாஜக தலைவர்களின் நட்பு அவருக்கு கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை சந்தித்த அதே பிலாஸ்பூர் தொகுதியில் மீண்டும் 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றியை தனதாக்கினார். அவரை போலவே அவர் சார்ந்திருந்த பாஜகவும் இத்தேர்தலில் வெற்றிபெற்று ஹிமாச்சலில் ஆட்சியமைத்தது. ஹிமாச்சலின் பதினொன்றாம் சட்டசபையான இதில் நட்டா வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2010 ஆம் ஆண்டு, பாஜக முதல்வர் பிரேம் குமார் துமலுக்கு இணையான செல்வாக்கையும், வளர்ச்சியையும் பெற்று பாஜகவில் அசைக்கமுடியாத சக்தியாக உறுவெடுத்திருந்தார் நட்டா. இப்படி ஒரு சூழலில் தான், முதல்வருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக நட்டா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுவே அவரின் அரசியல் பாதையை டெல்லியை நோக்கித் திருப்பியது. 

ஹிமாச்சலில் இருந்த நட்டாவை டெல்லியை நோக்கி அழைத்து சென்றார் நிதின் கட்கரி. 2012 ஆம் ஆண்டு பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்ததற்கு பின் மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டபோது, இவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2019 வரை ஐந்து ஆண்டுகாலம் இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தாலும், மோடியின் மீது விழுந்த ஊடக வெளிச்சம், இவர் மீது விழவில்லை என்றே கூறலாம். பாஜகவை பொறுத்தவரையில் ஒரு நல்ல தொண்டராக, தலைவராக, அமைச்சராக இருந்து பாஜக மூத்த தலைவர்களிடம் இவர் நன்மதிப்பை பெற்றாலும், பொதுவெளியில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமலேயே இருந்துள்ளார் நட்டா. 2010 ஆம் ஆண்டு ஹிமாச்சல் முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவரது மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது எய்ம்ஸ் மருத்துவமனைகளில் நடைபெற்றதாக கூறப்படும் 7000 கோடி ரூபாய் ஊழலை மூடிமறைக்க முயற்சித்ததாகவும் இவர் மேல் சர்ச்சைகள் எழுந்தன. 

 

ss

 

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 7000 கோடி ரூபாய் ஊழலுக்கு காரணமாக இருந்த ஒரு அதிகாரியை காப்பாற்றவும், அந்த வழக்கை முடித்துவைக்கவும் நட்டா முயற்சித்ததாக கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அந்த அதிகாரி ஹிமாச்சலில் நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையின் செயலாளராக இருந்தவர் என்பதும், நட்டாவின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் முதலில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தனுக்கு இந்த வழக்கை முடிப்பது தொடர்பாக இவர் பல முறை கடிதம் எழுதியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதச் சூழலிலேயே மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டு நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் எனவும் கூறப்பட்டது. 

இப்படி பல வெற்றிகளையும், சர்ச்சைகளையும் கடந்து இவ்வளவு தூரம் பயணித்திருக்கும் நட்டா, இனி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களும் ஏராளம். ஐந்து ஆண்டுகாலம் அமித்ஷா அமர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்திய ஒரு பதவியில், நட்டா புதுமையாக என்ன செய்யப்போகிறார் என்பதே பலரின் கேள்வி.  அமித்ஷாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கும், ஆக்ரோஷ பேச்சுக்கும் எதிர்மறையான அமைதியான குணாதிசயங்களை கொண்ட நட்டா, செயல் தலைவராக இருந்தாலும் அமித்ஷாவின் நிழலாகவே செயல்பட்டு வந்திருக்கிறார் என்பது பலரின் கருத்து. 

 

sss

 

தொடர்ந்து அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களில் பெற்ற தோல்விகளால் துவண்டிருக்கும் பாஜக, அடுத்த இரண்டு ஆண்டில் மட்டும் டெல்லி, பீகார், மேற்குவங்கம், தமிழ்நாடு என பல முக்கிய மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதில் பாஜகவை வெற்றிபெற வைக்க நட்டா என்ன செய்யப்போகிறார்..? மோடி-அமித்ஷாவின் ஆதிக்கத்தை மீறி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரையிலான தனது பிணைப்பை எவ்வாறு உறுதி செய்யப்போகிறார்..? அல்லது செயல் தலைவராக பணியாற்றியது போல அமித்ஷா மற்றும் மோடியின் நிழல் தலைவராகவே செயல்பட போகிறாரா..? உள்ளிட்ட பல கேள்விகள் நட்டாவை நோக்கி வைக்கப்பட்டிருந்தாலும், இதற்கான பதிலுக்காக சிறிது காலம் காத்திருப்பதும் தேவையாகிறது. 

 

 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.