Advertisment

கொண்டாடத்தக்கதா பாஜகவின் வெற்றி..? என்ன சொல்கிறது ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள்..?

narendra modi amitsha

Advertisment

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் அங்கு நடைபெற்ற முதல் தேர்தல்தான், அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தல். இந்திய அரசியலமைப்பு சாசனத்திலிருந்த 370 -வது சட்டப்பிரிவை நீக்கியபின், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அங்கு அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து மாறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் அந்த மக்கள் வேதனைகளை அனுபவித்து வந்த சூழலில்தான் இத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

அந்த மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்படக் காரணமாக இருந்த பாஜக, இந்த தேர்தலில் 78 தொகுதிகளில் வெற்றிபெற்றதுடன் அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாகியுள்ளது. நடந்துமுடிந்த இத்தேர்தலின் 280 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் 278 இடங்களின் முடிவுகள் வெளியாகிவிட்டன, மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின்படி, குப்கர் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேநேரம், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, குப்கர் கூட்டணி மற்றும் பாஜக என இரு தரப்புமே வெற்றி எங்களுடையதுதான் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஏழு கட்சிகளைக் கொண்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (பி.ஏ.ஜி.டி) 110 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 75 இடங்களைக் கைப்பற்றிய பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் இத்தேர்தலில் 50 சுயேச்சைகள் வெற்றிபெற்றுள்ளனர்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்தபின் பல்வேறு கலவரங்களைத் தொடர்ந்து நடந்து முடிந்திருக்கும் இத்தேர்தல் ஜம்மு காஷ்மீர் அரசியலில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பகுதியில் பத்தில் ஒன்பது மாவட்டங்களை வென்றுள்ளது குப்கர் கூட்டணி. அதே நேரத்தில் ஜம்மு பகுதியில் பத்தில் ஆறு மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளது பாஜக. ஜம்முவிலுள்ள நான்கு மாவட்டங்களும் காஷ்மீரிலுள்ள ஒரு மாவட்டமும் சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisment

தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் பாஜக இந்த தேர்தலில் நாங்கள்தான் வெற்றிபெற்றுவிட்டோம் என்று காலரைத் தூக்கியது. தனது தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் குதித்தது. அதுமட்டுமல்லாமல் குப்கர் கூட்டணி 3.9 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், பாஜக மொத்தமாக 4.8 லட்ச வாக்குகளைப் பெற்று, அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியானது. ஆனால், பாஜக கூறும் இவை அனைத்தும் வெற்றியா என்று இத்தேர்தலில் முடிவுகளை உற்று நோக்கினால், அது வேறுமாதிரியாகத் தெரிகிறது. பாஜக தனி ஒரு கட்சியாக மொத்தமுள்ள 280 சீட்டுகளிலும் போட்டியிட்டு 75 சீட்டுகளை மட்டும்தான் கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி 168 சீட்டுகளில் போட்டியிட்டு 68 இடங்களைப் பிடித்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது பாஜகவின் வெற்றி விகிதத்தை விட குப்கர் கூட்டணியிலுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் வெற்றி விகிதம் அதிகம். அதாவது வெற்றி விகிதம் பாஜகவுக்கு மிகவும் குறைவே.

அதிகப்படியான வாக்குகள் பாஜக பெற்றதற்குக் காரணம், அது வலுவாக இருக்கும் ஜம்மு பகுதியில் 70 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றிருப்பதால் மட்டும்தான். இசுலாமியர்கள் அதிகமாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மேற்சொன்ன சதவீதத்தில் பாதிக்கும் கீழ்தான் பாஜக பெற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும். இது ஜம்மு காஷ்மீர் அரசியலில் நார்மலான ஒன்றுதான். ஜம்மு பகுதியை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்திக்கும் கட்சிகள் அதிகப்படியான வாக்குகளைப் பெறுகிறது. அதற்குச் சான்றாகப் பார்த்தால் 2014 சட்டமன்ற தேர்தலில் கூட பாஜக அதிகப்படியான வாக்குகளைப் பெற்றது. ஆனால், பிடிபிதான் அதிக தொகுதிகளை வென்றது. அதே கூட்டணியிலிருந்த பாஜக அதிக வாக்குகளைப் பெற்றிருந்தும் குறைந்தளவிலான தொகுதிகளையே கைப்பற்றியது. காஷ்மீருக்குள் பாஜக சிறிதளவு முன்னேறியிருந்தாலும் அதே வேளையில், ஜம்முவில் பாஜக பெரியளவில் வலுவிழந்துள்ளதை இத்தேர்தல் சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 2014 சட்டமன்ற தேர்தலையே எடுத்துக்கொள்வோம், ஜம்முவிலுள்ள 37 சீட்டுகளில் 25 இடங்களை வென்றது பாஜக. இது மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 65 சதவீதத்திற்கு மேல். ஆனால், நடந்து முடிந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலின் முடிவுகளை அலசினால், ஜம்மு பகுதியில் 50 சதவீத வெற்றியைத்தான் தக்க வைத்திருக்கிறது. பேலன்ஸ் சதவீதம் குறைந்திருப்பதாகத்தானே அர்த்தம், இந்த தேர்தலில் ஜம்முவில் 140 சீட்டுகளில் 71 இடங்களில்தான் வெற்றியடைந்திருக்கிறது பாஜக. இதையே இன்னும் சற்று கூர்ந்து நோக்கினால் ஜம்முவின் தோதா, ரம்பன், ரஜௌரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக மிக சொற்பளவிலான சீட்டுகளையே கைப்பற்றியுள்ளது. 2014 சட்டமன்ற தேர்தலில், தோதாவில் மொத்தமுள்ள இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக. ஆனால், டிடிசி தேர்தலில் 14 சீட்டுகளில் 8 இடங்களில்தான் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல சட்டமன்ற தேர்தலில் ரம்பனின் இரண்டுக்கு ஒரு தொகுதியில் வெற்றி கண்ட பாஜக, இம்முறை நடந்து முடிந்த டிடிசி தேர்தலில் 14 சீட்டுகளில் 3 இடங்களில்தான் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் பாஜகவின் வலு எவ்வாறு குறைந்திருக்கிறது என்பதை ஸ்டேட்ஸ் புரியவைக்கிறது.

இந்து வாக்குகள் அதிகமாக உள்ள ஜம்மு, உதம்பூர், சம்பா மற்றும் கத்துவா உள்ளிட்ட மாவட்டங்களில் 56 சீட்டுகளில் போட்டியிட்டு 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது பாஜக. முன்பு இந்த இடங்களிலெல்லாம் அவர்களுக்குப் போட்டியாக இருந்த காங்கிரஸ், இந்தமுறை சீனிலேயே இல்லை என்பதால் பாஜக பெரியளவிலான போட்டிகளின்றி அமோகமாக வென்றுள்ளது. இந்த இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும் பாந்தர் கட்சியும்தான் பாஜகவுக்கு டஃப் கொடுத்துள்ளனர். அதற்குப் பலனாக அவர்கள் தலா இரண்டு சீட்டுகளை வென்றுள்ளனர்.

இசுலாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பகுதியில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் துலைல், ஸ்ரீநகர் மாவட்டத்தில் கோன்மோ-2, புல்வாமா மாவட்டத்தில் கக்கபோரா-2 உள்ளிட்ட இடங்களில் வென்று மூன்று சீட்டுகளைத் தன்வசமாக்கியுள்ளது பாஜக. ஆனால், அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கும்போதும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலுள்ள மையப்பகுதிக்குள் பாஜகவால் நுழைய முடியவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்துக்கள் பெரும்பான்மையாக இல்லாத இடங்களில் பாஜகவால் வெற்றிபெற முடியாது என்பதை ஜம்மு காஷ்மீர் தேர்தல் காட்டியுள்ளதாகவே தெரிகிறது.

75 இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சி என்பதை வைத்து பாஜகவுக்கு வெற்றி என்பதுபோல பிம்பத்தை ஏற்படுத்தலாம், சட்டப்பிரிவு 370ஐ அம்மக்கள் வரவேற்கிறார்கள் என இதை வைத்துச் சொல்லலாம். ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் அரசியலாகப் பார்த்தால் பாஜகவுக்கு எதிர்பார்த்த முன்னேற்றமும் இல்லை என்பது நிதர்சனம்.

article 370 revoked jammu kashmir Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe