Advertisment

வன்முறையாட்டத்தில் பாஜக; யுத்தகளமாகும் திரிபுரா! 

- க.சுப்பிரமணியன்

BJP Tripura issue CPIM condemn

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடந்து சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரிபுராவில் பாஜகவும், நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியும், மேகாலயாவில் என்.பி.பி. கட்சியும் ஆட்சியை பிடித்தன. திரிபுராவில் பா.ஜ.க. வெற்றிபெற்றதையடுத்துமாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களது வீடுகள், கடைகள் மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் 668 இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisment

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே தொடர்ச்சியாக திரிபுரா முழுவதும் குண்டர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு பிப்ரவரி 10-ஆம் தேதி திரிபுராவுக்குக் கிளம்பியது. இக்குழுவினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர்.

Advertisment

இரண்டு நாள் ஆய்வுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை செபாஜிஜாலா மாவட்டம், நேஹல்சந்திரா நகரில் உண்மை கண்டறியும் குழுவே பா.ஜ.க. குண்டர்களால் தாக்கப்பட்டது. இக்குழுவினர் சென்ற வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் இரண்டு நாள் சுற்றுப்பயணம் இடையிலேயே தடைபட்டது. இதையடுத்து உண்மையறியும் குழுவினர் திரிபுரா ஆளுநர் எஸ்.என்.ஆர்யாவை பிப்ரவரி 11-ஆம் தேதி சந்தித்து, மூன்று பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர். அதில், அமைதி திரும்பவும், அரசியல் விரோதத்தை அகற்றவும், மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

பின்பு பி.ஆர். நடராஜன், பிகாஷ் ரஞ்சன், எளமரம் கரீம், ரஹீம், பினோய் விஸ்வம், காங்கிரஸின் அப்துல் கலீக், ஆர்.ரஞ்சன் ஆகியோரடங்கிய உண்மையறியும் குழு, அகர்தலாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது. பாராளுமன்றத்தில் இவ்விஷயத்தை எழுப்பி தேசத்தின் கவனத்தை ஈர்ப்போம். திரிபுராவில் சட்டம் ஒழுங்கு குலைந்துவிட்டது எனக் குற்றஞ்சாட்டினர்.

சி.பி.ஐ. ராஜ்யசபா உறுப்பினர் விஸ்வம், “நாங்கள் திரிபுராவை அடையும்வரை வன்முறை இத்தனை தீவிரமாக இருந்திருக்கும் என நினைக்கவில்லை. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் திட்டமிட்டு வன்முறையை மேற்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் தாக்கப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள். பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்குதலை மேற்கொண்டு சூறையாடியுள்ளனர். பலர் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை டெல்லியிலிருந்து திட்டமிடப்பட்டது. திரிபுராவை வன்முறைக் களமாகவும் பாதுகாப்பற்ற இடமாகவும் மாற்றுவதில் உள்துறை அமைச்சகமும், அதை நடத்துபவருமே பங்கு வகிக்கிறார் என நாங்கள் நம்புகிறோம். பலர் அனைத்தையும் இழந்து நின்றதைப் பார்த்தோம். மோசமாகக் காயமடைந்துள்ளனர். கடைகள், வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கு முறையான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்” என்றார்.

கரீம், கலீக், ஜிதேந்திர சௌத்ரி, அஜய் குமார் ஆகிய எம்.பி.க்கள் அடங்கிய உண்மையறியும் குழுவே குண்டர்களால் தாக்கப்பட்டதென்றால் நிலவரத்தைப் புரிந்து கொள்ளலாம். அதுவும் போலீஸ் துணைக்கு வரும்போதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குழுவுடன் துணைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராயின் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

திரிபுரா தாக்குதல்கள் பற்றி கேள்வியெழுப்பிய அஜய்குமார், “திரிபுராவின் சாதாரண மக்களின் மீதான தாக்குதல்களில் போலீசார் ஏன் தொடர்ந்து பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள்? பிரதமரும், உள்துறை அமைச்சரும் இவ்விஷயம் குறித்து மௌனமாகவே இருப்பது ஏன்?” என்றார். உண்மை கண்டறியும் குழுவின் மீதான தாக்குதலை காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம், அவர்களது வருகைபற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர்.

திரிபுராவைப் பார்வையிட்ட பின் வங்காளத்தைச் சேர்ந்த சி.பி.ஐ.(எம்) எம்.பி. ரஞ்சன் பட்டாச்சார்யாசமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை நோக்கி, “திரிபுரா வந்து உங்கள் ஜனநாயகத்தின் தாயைப் பார்வையிடுங்கள்” எனப் பரிகாசம் செய்துள்ளார்.

2018-ல் திரிபுராவில் வெற்றிபெற்றதும் பா.ஜ.க. முதலில் செய்த வேலை பெலோனியா பகுதியில் லெனின் சிலையைத் தகர்த்ததுதான். 2023 தேர்தலிலும் பிரச்சாரத்தின்போதே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. வெற்றிபெற்ற கையோடு நரவேட்டை ஆடித்தீர்த்திருக்கிறது.

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்தியாவின் ஜனநாயகத்தை லண்டனில் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி, கடுமையான கண்டனங்களை எழுப்பி, நாடாளுமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

congress cpi cpm tripura
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe