Skip to main content

"நான் செய்யும் ஒரே தீபாவளி பலகாரம்..." - வானதி சீனிவாசன் நாஸ்டால்ஜிக் பேட்டி

Published on 06/11/2018 | Edited on 06/11/2018

மத்திய பாஜக அரசுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் சளைக்காமல் பதில் அளிப்பவர் வானதி சீனிவாசன். மாநில பொதுச்செயலாளராக இருப்பதால் தினந்தோறும் கட்சிப்பணிகள். இதற்கிடையே தேசிய அளவில் பயணங்கள் வேறு... பரபரப்பிலேயே இருக்கும் அவரிடம் கொஞ்சம் ரிலாக்ஸ்டாகப் பேசினோம். அவரது தீபாவளி எப்படி?  

 

vanathi seenivasan



உங்க வீட்டு தீபாவளி எப்படியிருக்கும்? என்ன ஸ்பெஷல்?

புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டுவிட்டு கோயிலுக்கு போவோம். குழந்தைகள் பட்டாசு வெடிப்பார்கள். அதனை பார்த்துக்கொண்டிருப்போம். கட்சிக்காரர்கள் வருவார்கள். வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வோம். இனிப்புகளை வழங்குவோம். வருஷம் பூராவே ஏதாவது துணிமணிகள் எடுத்தாலும் தீபாவளிக்காக ஸ்பெஷல் பர்சேஸ் இருக்கும். டைம் கிடைக்கிறது கஷ்டமாக இருக்கும். இருந்தாலும் குழந்தைகளுக்காக தீபாவளிக்காக புது டிரஸ் எடுத்தேன். எனக்கும் எடுத்தேன்.

உங்கள் தலை தீபாவளி எப்படி இருந்தது? எங்கே கொண்டாடினீர்கள்?

என்னுடைய தலை தீபாவளி வழக்கம்போல கோயம்புத்தூரில் உள்ள எங்க அப்பா அம்மா வீட்டில் இருந்தது. என்னுடைய தம்பி அப்போது அமெரிக்காவில் இருந்தார். வழக்கம்போல தீபாவளியை கொண்டாடினோம். பட்டாசு வெடிச்சோம். உறவினர்களுடன்  சந்தோஷமாக இருந்தோம். கோயம்புத்தூர் பக்கம் தீபாவளி அன்று அசைவம் சமைக்க மாட்டோம். என் கணவர் வேலூர் பக்கம் என்பதால் அங்கு அசைவம் உண்டு. அதனால் எங்க அம்மா ரொம்ப தவிச்சாங்க. மாப்பிள்ளைக்கு என்ன சமைக்கணும்? மாப்பிள்ளைக்கு மட்டுமாவது அசைவம் செய்யட்டுமா? எல்லாருக்குமே சைவமா செஞ்சிடலாமா? வேலூர் சமையலா? கோயம்புத்தூர் சமையலா? என குழப்பமாகவே பேசிக்கிட்டு இருந்தாங்க. பிறகு வேலூர் சமையலாகவே இருக்கட்டும்ன்னு மாப்பிள்ளைக்காக எல்லோரும் விட்டுக்கொடுத்தாங்க.

நீங்க விரும்பி சாப்பிடும் தீபாவளி பலகாரம் எது? விரும்பி சமைக்கும் தீபாவளி பலகாரம் எது?

ரொம்ப வருஷமா தீபாவளியை எங்க அப்பா அம்மாவோட கோயம்புத்தூரில் கொண்டாடினோம். அங்க நிறைய பலகாரங்கள் செய்வாங்க. பசங்க பெரியவங்களா ஆனதால், 'எங்க ப்ரண்ஸ்ஸோட தீபாவளியை கொண்டாடுனும்'னு சொன்னதால இப்போ 10 வருஷமா சென்னையில் கொண்டாடுகிறோம். ஆனால் பொங்கலுக்கு கண்டிப்பாக கோயம்புத்தூருக்கு போய்விடுவோம். 
ஊரில் ஒரு பாரம்பரியம் உண்டு. பண்டிகைன்னா எண்ணெய் சட்டியை வைக்க வேண்டும் என்பது. அதுக்காக நான் எனக்கு தெரிஞ்ச குலாப் ஜாமூன் செய்வேன். வருஷத்துக்கு ஒரு நாள் இந்த குலோப் ஜாமூனை செய்ய கிச்சன் பக்கம் போறீங்கன்னு சொந்தக்காரங்க கிண்டல் செய்வாங்க. தீபாவளிக்கு முதல் நாள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, கடைசியாக குலோப் ஜாமூன் செய்வேன். அதுகூட கடந்த தீபாவளிக்கு என்னால முடியவில்லை. விட்டுபோச்சு.

கோயம்பத்தூர் பக்கம் செய்யும் அரிசி முறுக்கு பிரபலம். முழுக்க, முழுக்க அரிசியில் செய்யக்கூடிய முறுக்கை செய்வேன். உளுந்து கலக்காமல் செய்யக்கூடியது. வேண்டுமென்றால் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம். இதனை அவ்வப்போது செய்வேன். சில தீபாவளிக்கும் செய்வேன். எங்க வீட்டுக்கு வருபவர்களிடம் கொடுப்பேன். யார் வீட்டுக்காவது போகும்போது முறுக்கை கொண்டுபோய் நான் செஞ்சது என பெருமையா சொல்லிக் கொடுக்கும்பபோது சந்தோஷமாக இருக்கும். அதுவும் எங்க அம்மாக்கிட்ட கைமுறுக்கு கத்துக்கணுமுன்னு ரொம்ப நாள் ஆசை. அவுங்களும் சொல்லிக்கொடுத்தாங்க. எனக்கு கோணல்மானலா போய் செய்யவே வரல.

 

vanathi seenivasan family



தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் படங்களெல்லாம் பார்த்திருக்கிறீங்களா? மறக்க முடியாத தீபாவளி ரிலீஸ் படம் எது?

ஒவ்வொரு தீபாவளிக்கும் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதில் கவனமாக இருப்பேன். கோயிலுக்குப் போவோம். பசங்களோட வீட்டில் இருப்போம். மூத்த மகன் ஆதர்ஷ், இளைய மகன் கைலாஷ் என பசங்களும் அப்படித்தான். இந்த வருஷம்தான் தீபாவளிக்கு சினிமாவுக்கு போகணுமுன்னு என் சின்ன பையன் கேட்டான். படம் மெதுவா பாக்கலாம், தீபாவளிக்கு எல்லோரும் வீட்ல இருக்கணுமுன்னு சொல்லியிருக்கேன்.

உங்கள் ஃபேவரிட் வெடி எது? எந்த வெடி வெடிக்க பயப்படுவீர்கள்?

பயமெல்லாம் கிடையாது. சின்ன வயதில் என் தம்பியும் நானும் இது உனக்கு, இது எனக்கு என பாகம் பிரித்து போட்டி போட்டுக்கொண்டு வெடிப்போம். லெஷ்மி வெடியை வெடிச்சிக்கிட்டே இருப்போம். இப்ப எங்க பசங்க வெடிப்பதை பார்க்கிறோம்.

நீங்கள் குழந்தையாக இருந்த போது கொண்டாடிய தீபாவளிக்கும் இப்போதைய தீபாவளிக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

கிராமங்களில் தீபாவளியை விட பொங்கலைத்தான் சிறப்பாகக் கொண்டாடுவோம். தீபாவளி அந்த அளவுக்கு இருக்காது. தீபாவளிக்கு டிரஸ், பட்டாசு, பலாகாரம் அவ்வளவுதான். அப்போ நான், எனது தம்பி. இப்போது எனது குடும்பம், பசங்க. அப்ப இருந்த உற்சாகம் இப்போது இல்லை. குழந்தைகளுக்கு இருக்கிற உற்சாகம் பெரியவங்களுக்கு இருக்காதுல்ல... 

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறதே உச்ச நீதிமன்றம், அதைப்பற்றி?

தீபாவளி உற்சாகமான விழா, தீபாவளி என்றாலே பட்டாசுதான். உச்சநீதிமன்றம் நாடு முழுக்க உள்ள மக்களைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். டெல்லியில் உள்ள நிலைமையை மட்டும் பார்த்து சொல்லிவிட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துலதான் பட்டாசு வெடிக்கணுமுன்னு கோர்ட் சொல்லியிருக்குன்னு குழந்தைகளிடம் எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்று தெரியல. ஏன் கோர்ட் இப்படி சொல்றாங்க, வருஷத்துக்கு ஒருநாள்தானே வெடிக்கிறோமுன்னு குழந்தைகள் கேட்குறாங்க.

மாசு ஏற்படுது, அதனாலதான் கோர்ட்டு இப்படி சொல்லியிருக்கு, கோர்ட் தீர்ப்பை மதிக்கணும் என சொல்ல வேண்டியிருக்கு. கவர்மெண்ட் பஸ் புகை விடுது, எவ்வளவு கார், ஆட்டோ போகுது, அதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? நாங்க வருஷத்துல ஒருநாள்தானே வெடிக்கிறோமுன்னு கேட்குறாங்க. சுற்றுச்சூழலை பற்றி நாம பேசினாலும், குழந்தைகளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு.
தீபாவளி தமிழர்கள் பண்டிகை இல்லை என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

விநாயகர் தமிழ் கடவுள் இல்லை, கிருஷ்ணர் தமிழ் கடவுள் இல்லை, விஷ்ணு தமிழ் கடவுள் இல்லை என புதிதாக ஒரு கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் உருவாக்குகிறார்கள். மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தில் ஐந்து ரதம் வைத்திருக்கிறார்கள். அதில் கன்னி மூலையில் பாருங்கள், அந்தப் பாறையில் விநாயகர் இருக்கிறார். விநாயகர் இல்லாமல் தமிழருடைய வாழ்க்கை இல்லை.

அவதாரங்கள், தசாவதாரங்கள் எல்லா இடங்களிலும் தமிழர் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒன்று. சிலப்பதிகாரத்தில் இருந்து எவ்வளவு தமிழ் இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் ஐந்து விதமாக தமிழர் வாழ்க்கையை பிரித்திருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. அதில் ஐந்து கடவுளில் ஒரு கடவுள் விஷ்ணு.

விஷ்ணு மாயோனை ஒரு கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், தசாவதாரத்தையும் ஏற்றுக்கொள்வதாக இருக்கணும். சங்கத் தமிழ் இலக்கியங்களே மாயோனைப் பற்றி சொல்கிறது. தசாவதாரம் என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழர்களுடைய வாழ்வில் கலந்திருக்கிறது.

வட மாநிலத்திற்கும், தென் மாநிலத்திற்கும் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் உண்டு, பண்டிகை கொண்டாடும் முறைகளில் வேறுபாடு உண்டு. ஆனால் பண்டிகை என்பது இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒன்றுதான். பிரிவினை அரசியலுக்காக செய்யப்படக்கூடிய இந்த கருத்துக்களுக்கெல்லாம் எந்த விதத்திலும் மக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை பாதிக்காது. இது அரசியலுக்கான ஒரு கருத்து அவ்வளவுதான். 

 

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Postponement of the program of alternative parties joining the BJP

பா.ஜ.க.வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணையும் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26.02.2024) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி இன்று மாலை நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இருப்பினும் நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பா.ஜ.க.வினர் யாரும் வரவில்லை. அதன் பின்னர் மாலை 06.40 மணியளவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர்.

அதன் பின்னர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில், “இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பா.ஜ.க.வில் இனைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் கட்சியில் இணைபவர்கள் மோடியை சந்திக்க வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதாலும், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.