ADVERTISEMENT

பாஜக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

04:57 PM Dec 23, 2017 | Anonymous (not verified)

பாஜக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?
வானதி சீனிவாசன் கேள்வி





2ஜி வழக்கில் தீர்ப்பு வந்ததிலிருந்து பல்வேறு விதமான விவாதங்கள் நடந்த வருகின்றன. பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்ததுக்கும் தீர்ப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஆரம்பித்து, சிபிஐ செயல்பாடு, காங்கிரஸ் காலத்தில் நடந்த ஆரம்ப கட்ட விசாரணை, அரசுக்கு இழப்பே இல்லை, நடந்தது ஊழலே இல்லை, இதைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்த பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்...இப்படி வண்ண வண்ணமாக வாதங்கள் நிகழ்கின்றன. பாஜகவின் பங்கு, நிலைப்பாடு, தீர்ப்பு குறித்த பார்வை என்ன? பா.ஜனதா பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வானதி சீனிவாசனிடம் கேட்டோம்...

இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் அரசாங்கத்தில் இருக்கக் கூடிய அமைப்புகள் தவறு நடந்திருப்பதாக, இழப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்கள். அதற்கு பின்பாக நீதிமன்றம் இந்த பிரச்சனையை கையில் எடுத்தது. ஒரு எதிர்க்கட்சியாக பாஜக மக்கள் முன்பாக இந்த பிரச்சனையை எடுத்துச் சென்றோம்.

ஆரம்பக் கட்டத்தில் இதனுடைய விசாரணை குறிப்பாக அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கருதியதன் காரணமாக தீர்ப்பு கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த நிறுவனங்களுடைய லைசென்சுகள் கேன்சல் செய்யப்பட்டது. அப்படி இருந்ததற்கு பின்பாக அவர்களே ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து அதன் மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

முதல் தகவல் அறிக்கை முதல், முதல் குற்றப்பத்திரிக்கை வரை முழுக்க முழுக்க அப்போது இருந்திருக்கக்கூடிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மீதே குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கூட, அவர்கள்தான் இந்த அடிப்படை தகவல்களையெல்லாம் நீதிமன்றத்திற்கு கொடுத்தவர்கள். ஒரு கிரிமினல் நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்படும்போதுதான் அந்த வழக்கில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

இந்த வழக்கை பொறுத்தவரை ஆவணங்கள், சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்கின்ற அடிப்படையில்தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேல்முறையீட்டில் நீதிமன்றம் எவ்வாறு இந்த வழக்கை விசாரிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இது முற்றிலுமாக ஆதாரங்கள் இல்லாமல் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறமுடியாது. ஏனென்றால் இதில் தவறு நடந்திருப்பதை உச்சநீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது. கிரிமினல் சட்டத்தின்படி அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்.

ஆனால் அதற்கு பின்பாக பாஜக கூட்டணி அரசாங்கம் வந்ததற்கு பின்பாக அலைக்கற்றைகள் அதிகமான தொகைகளுக்கு, 60 ஆயிரம் கோடி, அதன் பிறகு ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடி என எப்படியெல்லாம் இந்த நாட்டிற்கு அந்த அலைக்கற்றைகள் வருமானத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

குறிப்பாக அரசாங்கத்தினுடைய கொள்கை முடிவு, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கின்ற கொள்கை முடிவு மாற்றப்பட்டு, வெளிப்படையான விதத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்திருப்பதால், இந்த அரசாங்கம் வந்து முதல் ஏலத்திற்கு பிறகு இதுவரை 10 சதவீதம் அதனுடைய வருமானம் உயர்ந்திருக்கிறது. நாங்கள் வெளிப்படைத்தன்மையோடு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை என்றவுடன், பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்? நாங்கள்தான் ஆதாரங்களை கொண்டு வந்து வழக்கு போட்டோம் என்றால், மன்னிப்பு கேட்கலாமா வேண்டாமா என்பது அடுத்த பிரச்சனை. ஆனால் அன்று ஆண்டுகொண்டிருந்த ஒரு அரசாங்கத்தின் ஒரு அமைப்பு சொன்னது, அந்த அரசாங்கத்தில் அப்போது கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் தவறு என்று உச்சநீதிமன்றம் சொன்னது. உச்சநீதிமன்றத்திலே இந்த அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று நிறுவனங்களுடைய லைசன்சுகள் ரத்து செய்யப்பட்டது. அதையெல்லாம் மக்களுக்கு ஒரு எதிர்க்கட்சியாக பாஜக எடுத்து சொன்னது. அந்த எதிர்க்கட்சியின் வேலையை செய்தோம், பாராளுமன்றத்தில் கேள்வியை எழுப்பினோம். அன்று கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை தவறு என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் சொன்ன சூழலில், லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட சூழலில், கிரிமினல் குற்ற வழக்கில் அந்த சட்டத்தில் முழுமையாக சிபிஐ அதனை முழுமையாக நிரூபிக்க முடியாத காரணத்தினால் பாஜகவை எப்படி பொறுப்பாக்க முடியும்? பாஜக எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?

குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்த காரணத்தினால் அரசியல் கட்சிகள் பொய் சொன்னதாக எடுத்துக்கொள்ள முடியாது. இப்பவும் பிரச்சனை முற்றுப்பெறவில்லை. மேல்முறையீடு செய்வதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

-வே.ராஜவேல்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT