Skip to main content

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை வைத்து பாஜக போட்ட கணக்கு...எதிர்ப்பு அலையில் ஜக்கி... வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

"ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்பார்கள். அதுபோல மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளே வாய் திறக்க தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஈஷா சாமியார் ஜக்கி வாசுதேவ் "இந்த சட்டம் நல்ல சட்டம்' என திருவாய் மலர்ந்திருக்கிறார். உடனே ஜக்கியை பா.ஜ.க. தலைவர்கள் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாட துவங்கி விட்டனர்.
 

jakki



"இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் மாணவர்கள் இதை படிச்சுப் பார்க்காமல் போராடுகிறார்கள். நானும் இந்த சட்டத்தை படிச்சு பார்க்கல. ஆனாலும் இந்த மாணவர்கள் போராட்டம் தேவையில்லாத ஒண்ணுன்னு தோணுது. இந்திய நாட்டில் வாழும் ஒவ்வொருத்தருக்கும் கடந்த காலம்னு ஒன்று இருக்கு. (ஆம் ஜக்கிக்கும் கடந்த காலத்தில் இவரது மனைவியின் மர்ம மரண வழக்கு இருக்குது) அதைத்தான் இந்த சட்டம் ஆராயுது. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியுரிமைக்கான தனிச் சட்டம் உள்ளது. (இந்தியாவிலும் இருக்கிறது). இந்து திருமணங்களைக்கூட இன்னமும் அங்கீகரிக்காத பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் இந்துக்களை குடிமகன்களாக ஏற்பதில் என்ன தவறு? அதற்கெதிராக போராடும் மாணவர்கள் போலீசை தாக்குகிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு இருந்தாலே இந்திய குடிமகன்களாக பதிவு செய்து கொள்ளும் விதத்தில் அசாமில் நடை முறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு இருக்கிறது. இதில் என்ன தவறு?'' என ஜக்கி பதினைந்து நிமிட வீடியோ பேச்சை வெளியிட்டிருக்கிறார். உடனே பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ஜக்கியை பாராட்டி பதிவிட்டார்.

 

modi



உண்மை நிலவரமோ மிகவும் கலவரமாக உள்ளது. முதலில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கான எதிர்ப்பு ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில்தான் தொடங்கியது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இசுலாமிய சிந்தனையின் தலைமைப் பீடமாகும். முத்தலாக் மசோதா, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் என பா.ஜ.க. அரசு தொடர்ந்து இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதையெல்லாம் இந்திய முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா என்பது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற ஒன்று என்றாலும் அது நடைமுறைக்கு வராது என முஸ்லிம்கள் எதிர்பார்த்தார்கள். அதை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. அரசு சட்டமியற்றியபோது அலிகார் பல்கலைக்கழகம் பொங்கி எழுந்தது.

 

cab bill



நீண்டகால போராட்டங்களை உறுதியாக கொண்டு செல்வதில் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைப் போலவே டெல்லி ஜாமியா பல்கலைக்கழகமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த மிருகத்தனமான தாக்குதல் இந்தியா முழுவதும் மாணவர்களை களமிறக்கி விட்டுள்ளது. இன்று மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


மோடி ஆட்சிக்கு வருவதற்கேற்ப, காங்கிரசுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய மேதா பட்கர், வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா போன்ற சமூக ஆர்வலர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து நூறு அமைப்புகளை திரட்ட திட்டமிட்டு அறைகூவல் விடுத்தார்கள். அறைகூவல் விடுத்த தினத்திலேயே இருநூறு அமைப்புகள் அந்தப் போராட்டத்தில் இணைந்துவிட்டன என போராட்டத்தின் தீவிரத்தை சொல்கிறார் டெல்லியைச் சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளரான ஷஃபி முன்னா. இது ஏதோ நகரங்களில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் நடத்தும் போராட்டமாக நின்று விடவில்லை.


அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு நிதி அமைச்சராக இருப்பவர் ஹிமந்துவ விஸ்வ ஷர்மா. இவர் அசாமின் தலைநகரான கவுஹாத்தியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில், இறந்து போன பா.ஜ.க. தலைவரின் உடலுக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டார். அவர் நெடுஞ்சாலை வழியாக ஐந்து கிலோமீட்டர் பயணம் செய்கிறார் என அறிந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள், அவரை எதிர்த்து கறுப்புக் கொடியுடன் லட்சக்கணக்கில் திரண்டு விட்டனர். அவர்களது எதிர்ப்பை சமாளிக்க ஐந்து கிலோமீட்டர் தூரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார் விஸ்வ ஷர்மா. அசாமில் பா.ஜ.க.வுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையை பார்த்த மோடி, ஜனவரி பத்தாம் தேதி கவுஹாத்தியில் பங்கேற்கவிருந்த ஒரு விழாவையே ரத்து செய்து விட்டார். அசாம் மண்ணில் காலை வைப்பதற்கு தயக்கம் காட்டும் அளவிற்கு இந்திய பிரதமரையே அலற வைத்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு என்கிறார்கள் வடகிழக்கு பத்திரிகையாளர்கள்.

இந்தியா என்பது ஒரு பெரிய தேசம். அதன் கிராமப்புறங்களுக்கு ஒரு விஷயம் சென்றடைய நேரம் எடுக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு இப்பொழுதுதான் வட இந்திய கிராமங்களை சென்றடைந்திருக்கிறது. உத்திரப் பிரதேச கிராமங்களில் டெல்லிக்கு அடுத்த படியாக போராட்டம் அணையவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு மூவர்ணக் கொடியுடன் இந்தியாவின் கிராமப்புறங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம்தான். இந்த கிராமப்புறங்களில் நடக்கும் போராட்டங்களில் இறப்பவர்கள் பற்றி எந்தப் பதிவையும் வெளியில் சொல்லாதீர்கள் என உத்தரப்பிரதேச அரசு போலீசுக்கும் கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையெல்லாம் மீறி போராட்டம் நடப்பதால், காஷ்மீரில் நிறுத்தப்பட்டிருந்த துணை ராணுவத்தை உத்தரபிரதேசத்தில் இறக்கி போராட்டத்தை நசுக்கிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.வின் யோகி ஆதித்யாவின் தலைமையிலான அரசு.

உத்தரப்பிரதேசம், முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் மாநிலம். இங்கே கிராமப்புறங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தலித்துகளும் முஸ்லிம்களும் இணைந்து போராடுகிறார்கள். இது உத்தரப்பிரதேசத்தின் தலித் தலைவரான மாயாவதிக்கு ஆட்டம் கொடுத்துள்ளது. மாயாவதி, இந்தப் போராட்டம் இவ்வளவு தீவிரமடையும் என எதிர்பார்க்கவில்லை. இந்தப் போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் தலித் தலைவரான சந்திரசேகர் ஆசாத் டெல்லி ஜும்மா மசூதியில் போராடிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்பார் என எதிர்பார்க்கவில்லை. டெல்லி ஜும்மா மசூதியில் தொடங்கிய பீம் சேனாவின் எதிர்ப்பு உத்திரப்பிரதேச கிராமப் புறங்களில் எதிர்ப்பு அலையை கரை புரண்டோட செய்ததால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

உ.பி. மட்டுமல்ல, பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய வடஇந்திய மாநிலங்களும் எரிகிறது என்கிறார் பிரபல பத்திரிகையாளரான மாத்யூ சாமுவேல். தமிழகத்திலும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் கடந்த வாரம் களமிறங்கின. தேசியக் கொடியுடன் நடைபெறும் போராட்டம், பா.ஜ.க. அரசை அதிர வைத்துள்ளது. இந்த சட்டத்தை எப்பொழுது பா.ஜ.க. அமல்படுத்தும் என பா.ஜ.க. வட்டாரங்களை கேட்டோம். "எதிர்ப்பு அமிழ்ந்து போகும் என பா.ஜ.க. கணக்கு போட்டது. இந்த சட்டத்தோடு என்.ஆர்.சி எனப்படும் குடிமக்கள் பதிவையும் கொண்டு வரலாம் என திட்டமிட்டது. என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால் இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தங்க வைக்க முகாம்கள் அமைக்க வேண்டும். இதை இந்த சட்டத்துடன் ரகசியமாக இணைத்து விடலாம் என்கிற பா.ஜ.க.வின் திட்டம், இந்த சட்டத்திற்கு எதிராக எடுத்த போராட்ட அலையால் தவிடு பொடியாகிவிட்டது. அதனால் இந்த சட்டத்திற்கு பிறகு வந்த துப்பாக்கி லைசென்ஸ் நடைமுறை சட்டத்தை நோட்டிபிகேஷன் மூலம் அமல்படுத்திய மத்திய அரசு, இந்தத் திட்டத்தினை அமலாக்கம் செய்வதற்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டு அமலாக்குவதற்கு பயப்படுகிறது'' என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.