Skip to main content

எடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் உடன்பாடில்லாத நிலையில் அதனை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில், தேர்தல் குறித்து எடப்பாடி எடுத்த அஸ்திரத்தை முறியடித்துள்ளது டெல்லி என்கிறார்கள் பா.ஜ.க.வினர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் நீதிமன்றங்களில் கால அவகாசம் கேட்டு இழுத்தடித்து வருகிறது எடப்பாடி அரசு. தி.மு.க. தொடர்ந்த வழக்கை காரணமாக காட்டி தப்பிக்க முயற்சிப்பதிலேயே காலம் கடத்தியது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் எதிர்பார்ப்புகள் முடங்கிக்கிடப்பதோடு ஊழல்கள் பெருத்துக் கிடக்கின்றன. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களை புறந்தள்ள முடியாமல் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது எடப்பாடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையம்.
 

eps



தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆணையத்தின் கமிஷனர் பழனிச்சாமி எடுத்துவரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்கான பரபரப்பு தமிழக அரசியல் கட்சிகளை தொற்றிக்கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்டமாக, தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்களது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெறத் துவங்கியுள்ளன அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள்.
 

admk



தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அக்டோபர் 31 ந்தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பை கமிஷனர் பழனிச்சாமி அறிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கொடுத்த யோசனையை ஏற்க வேண்டிய நிலையில் இருந்தார் அவர். அதற் கேற்ப, தேர்தலில் பயன் படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணியை பெங்களூரிலுள்ள பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், ஹரியானா, மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக தொழில்நுட்ப பணியாளர்கள் பிசியாக இருப்பதால் தமிழக பணிகளை நவம்பர் மூன்றாவது வாரத்தில்தான் முடிக்க முடியும் என பெல் நிறுவனம் அறிவுறுத்தியதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி மேலும் 4 வாரத்துக்கு அவகாசம் வாங்கியிருக்கிறார் ஆணையர் பழனிச்சாமி. அதனால், அக்டோபர் 31-ந்தேதி வெளியிட வேண்டிய நோட்டிஃபிகேசன் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் முதல்வாரத்தில், தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் அரசு தரப்பில் எந்த ரகசிய முடிவையும் எடுக்காமலிருந்தால் பொங்கலுக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும்'' என்கின்றனர்.
 

admk



தேர்தலை எதிர்கொள்ள வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க. தயாராகியிருக்கும் நிலையில், அது தொடர்பாக கட்சியின் சீனியர்களிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த விவாதங்களில் தோழமைக்கட்சிகளுக்கு செக் வைக்கும் சில திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டதாக அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடமிருந்து செய்திகள் கசிகின்றன.
 

vck



சீனியர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இதில் சென்னை உள்பட 5 மாநகராட்சிகளை கேட்கிறது பா.ஜ.க. 5 கேட்டால் 3 கிடைக்கும் என பா.ஜ.க. கணக்குப் போட்டுள்ளது. அதற்கான அழுத்தத்தை கடந்த 2 மாதங்களாகவே எடப்பாடிக்கு கொடுத்து வருகிறது பா.ஜ.க. தலைமை. அதே போல கூட்டணியிலுள்ள பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் தலா 3 மாநகராட்சிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் 2 மாநகராட்சிகளுக்கு பிடிவாதம் காட்டுவார்கள். மேலும், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் சீட் கேட்டுள்ளனர். தவிர, அனைத்து நிலைகளிலுமுள்ள வார்டுகளில் பாஜக 35 சதவீதம், பா.ம.க. 20 சதவீதம், தே.மு.தி.க. 25 சதவீதம் இடங்களை எதிர்பார்க்கின்றன. இது தவிர கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளும் இதே கணக்குகளை போட்டு எடப்பாடியை நெருக்கியிருக்கின்றன.
 

bjp



தோழமைக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளில் குறைந்தபட்சத்தை நிறைவேற்றினாலும் அ.தி.மு.க. விரும்பிய இடங்களில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். மேலும், தோழமைக் கட்சிகளுக்கு மேயர் பதவிகளை தாரை வார்ப்பதால் அந்த மாநகராட்சிகளில் அவர்கள் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த வெற்றி அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே மிரட்டலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என எடப்பாடி நினைக்கிறார்.

இதனையடுத்துதான் மூத்த,  முக்கிய அமைச் சர்களிடம் ஆலோசித்தார் எடப்பாடி . அப்போது, "இந்த கவலை எங்களுக்கும் உண்டு. கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் அ.தி.மு.க.வுக்கு போட்டியிட 7 மாநகராட்சிதான் கிடைக்கும். இது அ.தி.மு.க.வின் வலிமையை குறைக்கும். அ.தி.மு.க. கட்டாயம் 12 மாநகராட்சிகளில் போட்டியிட்டால்தான் நமது வலிமை நிரூபிக்கப்படுவதோடு கட்சியினரையும் திருப்திப் படுத்த முடியும். மேலும், மாநகராட்சி மேயர் பதவிகளை விட்டுக்கொடுக்க முடியாது. மற்றவைகளை ஒதுக்குகிறோம் என சொல்லி கூட்டணி கட்சியினரை சம்மதிக்க வைப்பதுதான் சரியாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு மேயர் பதவி களை ஒதுக்கினால் அங்கெல்லாம் தி.மு.க. ஈசியாக ஜெயித்துவிடும். அதனால் மேயர் பதவிகள் ஒதுக்குவதில் கறாராக இருப்பதுதான் நமக்கு நல்லது என சொல்லியிருக்கிறார்கள் அமைச்சர்கள்.


இதை ஆமோதித்த எடப்பாடி, இந்த யோசனை சரியானதுதான். ஆனால், நாடாளுமன்ற தேர்தலின் போது நாம் எடுத்த அதிரடிகளை இந்த முறை பா.ஜ.க. ரசிக்காது. மேயர் பதவி தரப்படாவிட்டால் எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராவார்கள். அதனால், மக்கள் வாக்களித்து மேயர் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நேரடி முறையை மாற்றி கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் மறைமுக தேர்தலை நடத்தினால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேயர் மற்றும் தலைவர் பதவிகளை நம் சக்தியைப் பயன்படுத்தி கவுன்சிலர்களை பார்த்து பிடித்துவிடலாம். இதன் மூலம் தோழமைக் கட்சிகளின் எதிர் பார்ப்புகளை தடுத்துவிட முடியும்' என எடப்பாடி சொல்ல, அந்த யோசனையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். மேலும், 70 சதவீத இடங்களில் அ.தி.மு.க. போட்டியிட்டால்தான் 50 சதவீத இடங்களையாவது நாம் கைப்பற்றமுடியும் எனவும் விவாதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் இவை குறித்து விவாதிக்கப்பட்டன. ஆனால், பா.ஜ.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு செக் வைக்க இப்படியெல்லாம் எடப்பாடி போட்ட திட்டத்தையறிந்து டென்சனானது பா.ஜ.க. தலைமை. உடனே டெல்லியிலிருந்து, "தற்போது நடைமுறையில் இருக்கும் நேரடி தேர்தலில் ஏதேனும் மாற்றம் செய்தால், நீங்கள் எதிர்பார்க்காத பல விசயங்கள் நடக்கும்' என எச்சரிக்கை செய்தது பா.ஜ.க. அதன்பிறகே தனது திட்டத்தை கைவிட்டார் எடப்பாடி''’ என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.


இதுகுறித்து டெல்லியோடு தொடர்புடைய பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் எடப்பாடிக்கு இப்போதும் விருப்பம் கிடையாது. ஆனால், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. கொடுத்த அழுத்தம்தான் தேர்தலை நடத்த அவரை ஒப்புக்கொள்ள வைத்தது. கடந்த மாதம் டெல்லியில், தன்னை சந்தித்த தமிழக அமைச்சர் தங்க மணியிடம் இதனை அழுத்தமாகவே வலியுறுத்தினார் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல். எடப்பாடியை தொடர்புகொண்டும் அவர் பேசினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் தொடங்கி கவுன்சிலர்கள் வரை அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க.வினர் இருந்தால்தான் மக்களோடு நெருங்கிப் பழக முடியும். மக்களின் நெருக்கமும் அவர்களின் தேவைகளும் நிறைவேறுவதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியும். இது, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்சாவுக்கு கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. தற்போது, தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டிருக்கும் எடப்பாடி, நாடாளுமன்ற தேர்தலைப் போல பா.ஜ.க.வை ஈசியாக ஹேண்டில் பண்ண நினைக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அது நடக்காது. பா.ஜ.க.வின் விருப்பப்படிதான் சீட் ஷேரிங் நடக்கும். இதனை தடுப்பதற்காகத்தான் மறைமுக தேர்தலை நடத்தும் அஸ்திரத்தை எடுத்தார் எடப்பாடி. அமைச்சரவையில் இதனை விவாதித்து, அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்வதற்காக சட்டமன்றத்தின் அவசர கூட்டத்தை கூட்டவும் ரகசியமாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதனை அறிந்து எங்கள் தலைமை கொடுத்த டோஸில் அந்த ரகசிய திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது'' என்கின்றனர்.

நீதிமன்றத்தின் கண்டனம், பா.ஜ.க. தலைமையின் அழுத்தம் ஆகியவற்றை எதிர் கொள்ள முடியாமல் தேர்தலை நடத்துவதற்கான சூழலை எடப்பாடி அரசு உருவாக்கி வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரையறை குளறுபடிகள், இடஒதுக்கீட்டில் மகளிருக்கான இடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட முரண்பாடுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் பொதுநல வழக்கு தொடர்ந்து தேர்தலுக்கு தடை கேட்கும் முயற்சியிலும் அ.தி.மு.க. தலைமை இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. தொண்டர்களிடம் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், "சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சி மேயருக்கு 15 கோடியும், மற்ற மாநகராட்சிகளுக்கு 10 கோடியும் செலவு செய்ய தகுதியுடையவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றும், சென்னை வார்டு கவுன்சிலர்களுக்கு 7 கோடியும் மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு 5 கோடியும் செலவிட தகுதியுள்ளவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் அ.தி.மு.க.வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, உள்ளாட்சி அமைப்புகளின் ஒவ்வொரு பதவியின் தன்மைக்கேற்ப கோடிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தினர்.

 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.