Skip to main content

செம்மொழியை வைத்து அரசியல் செய்யும் பாஜக... துணைபோகும் அதிமுக... திமுக எதிர்ப்பின் பரபரப்பு பின்னணி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

bjp


தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் காலத்திலிருந்து செம்மொழித் தமிழுக்கான குரல் ஒலித்தது. தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் இருந்தபோது மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் இருந்த செல்வாக்கினால் 2007இல் தமிழுக்கு செம்மொழித் தகுதியை அதிகாரப்பூர்வமாக வழங்கியது இந்திய ஒன்றிய அரசு.
 


இதனையடுத்து, மைசூரில் இயங்கி வந்த இந்திய மொழிகள் மய்ய (Central Institute of Indian Languages) நிறுவனத்தின் அலுவலகம் சென்னைக்கு மாறுதலாகும் படி செய்து, செம்மொழித் தமிழ் உயராய்வு மையமாகக் கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் இயங்கிடச் செய்தார் கலைஞர். தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயைச் சிறந்த தமிழ் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் விருது வழங்க அறக்கட்டளை அமைக்கவும் உதவினார்.

ஆட்சி மாற்றத்தால் செம்மொழி கவனிப்பாரற்றுப் போனது. தரமணிக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தில் இயக்குநர், துணைத் தலைவர், பதிவாளர், நிதி அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகள் பலவும் காலியாகவே கிடந்தன. மொழி சார்ந்த அமைப்புக்கு தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்களைத் தற்காலிகப் பொறுப்பாளர்களாக கடந்த 13 ஆண்டுகளாக நியமித்து வந்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து தி.க, தி.மு.க. போன்ற இயக்கங்கள் குரல் கொடுத்தும் போராடியும் வந்தன. தமிழார்வலர்கள் பலரும் குரல் எழுப்பி வந்தனர்.

2014 இல் இயக்குநர் பதவிக்காக செம்மொழி நிறுவனத்தின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. முனைவர் மு.பாலசுப்பிரமணியன் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் இயக்குநராக நியமனம் செய்யப் படவில்லை. பாலசுப்ரமணியன் இப்போது தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தராக உள்ளார். தேசிய தொழில்நுட்பக் கல்லூரியான என்.ஐ.டியின் பேராசிரியர் பழனிவேல்தான் செம்மொழி மத்திய நிறுவனத்தின் தற்காலிகப் பொறுப்பில் இருந்து வந்தார்.
 

bjp


இந்நிலையில், செம்மொழி மய்யத்தின் இயக்குநர் பதவிக்கு மீண்டும் விளம்பரம் செய்யப் பட்டது. முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், பேராசிரியர் என்ற நிலையை அடைந்திருக்க வேண்டும், துறைத்தலைவைராக அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும், 5 ஆண்டுகால நிர்வாக அனுபவமும் வேண்டும் எனப் பல விதிமுறைகள் குறிப்பிட்டப்பட்டிருந்தன.
 


தகுதியுள்ளோர் விண்ணப்பித்திருந்த நிலையில்தான் செம்மொழி மத்திய நிறுவனத்தின் இயக்குநராக முனைவர் சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அதில் நடிகர் ரஜினியையும் இணைத்து ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, செம்மொழி நிறுவனத்துக்கு முதல் இயக்குநரை நியமித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ரஜினி கடிதம் எழுத, அதுவும் ஊடகங்களில் வெளியானது. இந்தியாவின் அனைத்து மொழிகள் மீதும் பா.ஜ.க. அரசுக்கு உள்ள அக்கறை காரணமாகத்தான் செம்மொழித் தமிழை வளர்ப்பதற்காக இயக்குநர் நியமிக்கப்பட்டிருப்பதாகப் பேசப்பட்டது.

இயக்குநர் சந்திரசேகரகன் காங்கேயம் அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியர் நிலையில் உள்ளவர். அவரைவிட பணி அனுபவமும் தகுதியும் பெற்றவர்களான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இயக்குநர் பதவியின் நேர்காணலுக்குச் சென்றவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடாமல் சந்திரசேகரனை நியமித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த நியமனத்தில் காட்டப்பட்டுள்ள அவசரம் மற்றும் விதிமீறல்கள் குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.சீனுவாசன், பேராசிரியர் இரா.முரளி மற்றும் பல கல்வியாளர்கள் வெளிப்படையாகவே குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். தி.க. தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டார்.

நேர்காணலுக்குச் சென்றவர்களில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ.) இந்திய மொழிகள் மையம்-தமிழ்ப் பேராசிரியர் தாமோதரன், சென்னை உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார் ஆகியோர் உதவிப் பேராசிரியர் சந்திரசேகரனைவிட தகுதிப்பாடுகளில் மூத்தவர்கள் என்பதே கல்வியாளர்களின் வாதம். பேராசிரியர் தாமோதரன் இடதுசாரி சிந்தனை கொண்டவர். தமிழ் மொழி குறித்தும் திராவிடப் பண்பாடு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு, பெரியார் பற்றிய நூல்களை எழுதியுள்ளவர்.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் பயின்றவரான தாமோதரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம் போன்றவற்றில் பணி அனுபவம் பெற்றபின், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதிக்குரியவர். தனது ஆய்வுகளுக்காக கலைஞர், ஜெ போன்ற முதல்வர்களின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றவர். ஜே.என்.யூ. என்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்குள்ள ஒவ்வாமையும், தாமோதரனின் இடதுசாரி- பெரியாரியப் பார்வையும் அவருக்குத் தகுதியிருந்தும் பதவி கிடைக்காமல் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
 

http://onelink.to/nknapp


சந்திரசேகரனுக்கு முதல்வர் எடப்பாடியின் சிபாரிசும், ஜே.என்.யூ.வை ஒதுக்கும் பா.ஜ.க அரசின் கரிசனமும் கிடைத்ததால்தான் வெறும் உதவிப் பேராசிரியரான அவருக்கு இந்தப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

திருவள்ளுவருக்கு காவிப் பெயிண்ட் அடிப்பதுபோல, செம்மொழித் தமிழுக்கும் காவி வண்ணம் பூசும் வேலையைக் கச்சிதமாகத் தொடங்கியுள்ளது பா.ஜ.க அரசு. தி.மு.க. எதிர்ப்புணர்வு என்ற பெயரில் தமிழுக்குத் துரோகம் செய்கிறது அ.தி.மு.க. என்கிறார்கள் கல்வியாளர்கள்.

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.