Advertisment

சோசியல் மீடியாவில் எதிரான கருத்துகள்! பா.ஜ.க.வை உதறும் பா.ம.க.?

ramadoss

Advertisment

பா.ஜ.க.வுடனான தேனிலவு பா.ம.க.வுக்கு கசந்து விட்டதையே பா.ம.க.வின் செயற்குழுவில் பேசிய டாக்டர் ராமதாசின் பேச்சு உணர்த்துகிறது என்கிறார்கள்அரசியல் விமர்சகர்கள்.நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கூட்டணி உருவானது. பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. தலைவர்களின் ஆதரவு பா.ம.க.வுக்கு இருந்தது. ஆனால், கூட்டணி உருவாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அந்த உறவு கசந்திருக்கிறது என்கிறார்கள்.

பா.ம.க.வின் 32-ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இணையவழி மூலமாக கட்சியின் செயற்குழுவை தைலாபுரம் தோட்டத்திலிருந்து நடத்தினார் டாக்டர் ராமதாஸ். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த அந்த செயற்குழுவில் பேசிய ராமதாஸ், "நம்மை அழிக்க வேண்டுமென்பதற்காக சதி செய்து வருகின்றனர். அந்தச்சதிகாரர்கள் வேறு வடிவில் வருகின்றனர். விஷப்பாம்புகளாக வருகிறார்கள். நம்முடன் பழகி, நம்முடைய கொள்கைகளைப் பேசி, நம்மையே அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களால் அது எந்தக் காலத்திலும் முடியாது'' என அழுத்தமாகப் பேசியிருக்கிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல் அரசியல்ரீதியாக அவரை தாக்கிப்பேசியுள்ள டாக்டர் ராமதாஸ், கல்வி -வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 17 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டும்; மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்.

Advertisment

pmk

பா.ம.க.வை அழிக்கப் பார்க்கிறார்கள் என டாக்டர் ராமதாஸ் ஆவேசப்பட்டிருப்பதன் பின்னணிகள் குறித்து ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்தி வருகிறது அரசியல் கலப்பில்லாத வன்னியர் சத்திரியர் சாம்ராஜ்யம். இந்த அமைப்பின் தலைவர் பொறியாளர் சி.ஆர்.ராஜனிடம் நாம் பேசியபோது, "பா.ம.க. செயற்குழுவில் சதிகாரர்கள், விஷப்பாம்புகள் என்கிற வார்த்தைகளை உதிர்த்துள்ள ராமதாஸ், பா.ம.க.வை அழிக்க சதி நடப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார். 32 ஆண்டுளாக உள்ள ஒரு அரசியல் கட்சியை யாரால் அழிக்க முடியும்? ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் முடியும்.

மாநிலத்தில் அ.தி.மு.க.வும், மத்தியில் பா.ஜ.க.வும் இருக்கிறது. இவர்களின் கூட்டணியில்தான் ராமதாஸ் இருக்கிறார். அ.தி.மு.க.வில் வலிமையற்ற தலைமை இருப்பதால், பா.ம.க.வை அழிக்க அ.தி.மு.க. நினைக்காது. ஆக, வலிமையாக மத்தியிலுள்ள பா.ஜ.க.வால் மட்டுமே பா.ம.க.வை அழிக்க முடியும். அதற்கான அசைண்மெண்டை பா.ஜ.க. ரகசியமாக துவங்கி விட்டதாகவே எங்களுக்குத் தகவல் வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க.வை குறிவைத்துதான் கடுமையாக பேசியிருக்கிறார் ராமதாஸ்.

anbumani ramadoss

இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தார் ராமதாஸ். ஆனால், பா.ஜ.க. தலைமைக்கும் ராமதாசுக்கும் மீடியேட்டராக செயல்பட்ட ஆடிட்டர், அமைச்சர் பதவி கிடைக்காது என சமீபத்தில் ராமதாசிடம் தெரிவித்து விட்டார். அந்த விரக்தியில் இருந்த டாக்டர் ராமதாசால், சந்தனக்காடு வீரப்பனின் மகள் வித்யாராணியை பா.ஜ.க. மகளிரணியின் துணைத்தலைவராக பா.ஜ.க. தலைமை நியமித்ததையும் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், பா.ம.க.வின் முன்னணி நிர்வாகிகள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பா.ஜ.க. இப்படி பல காரணங்களால்தான் கொந்தளித்திருக்கிறார் ராமதாஸ். அதனால், பா.ஜ.க.வுடனான தேனிலவு ராமதாசுக்கு கசந்து விட்டது'' என பல்வேறு பின்னணிகளைச் சுட்டிக்காட்டுகிறார் சி.ஆர்.ராஜன்.

இதுகுறித்து பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனிடம் கேட்டபோது, "பா.ஜ.க.வுடன் பா.ம.க.வுக்கு எந்த நெருடலும் இல்லை. கூட்டணி உறவு ஆரோக்கியமாக இருக்கிறது. பா.ஜ.க.வும் எங்களைப் பற்றி எந்த மாறுபட்ட கருத்தையும் சொல்லவில்லை. அய்யாவின் செயற்குழு பேச்சு, எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்களைப் பற்றியது. அரசியல் சார்ந்ததல்ல. அய்யா ராமதாஸ், சமூகப் போராளி. கொள்கை சார்ந்த அரசியலே அவருடையது. பா.ம.க.வின் வலிமை பா.ஜ.க.வுக்கு தெரியும். பா.ஜ.க.விடம் எந்த எதிர்பார்ப்பும் பா.ம.க.வுக்கு கிடையாது. கூட்டணியில் பிளவு ஏற்படாதா எனத் திட்டமிடுபவர்களின் எதிர்பார்ப்புகள் நடக்காது'' என்கிறார் அழுத்தமாக.

http://onelink.to/nknapp

ஆனால், பா.ம.க.வின் ஒரு அங்கமான பசுமைத் தாயகம் அமைப்பின் பொதுச்செயலாளர் அருள் ரத்தினத்தின் முகநூல் பதிவு பா.ஜ.க.வை சீண்டுவதாகவே இருக்கிறது. தனது முகநூல் பக்கத்தில், "வன்னியர்களுக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமென பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை எச்.ராஜா, துக்ளக் குருமூர்த்தி ஆகியோர் ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா? என்பதை விளக்க வேண்டும். பகிரங்கமாக ஆதரிக்க மறுத்தால், அடியாள் வேலைக்கு மட்டும் வன்னியர்கள் வேண்டும்; ஆபீசர் வேலைக்கு வன்னியர்கள் வேண்டாம் எனக் கருதுவதாக எடுத்துக்கொள்ள வேண்டும்' எனக் காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும், பா.ம.க.வைப் போல வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.க.வும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அழுத்தமாக பதிவிடுகிறார் அருள்ரத்தினம். இவரது பதிவுகளை, அன்புமணியின் குரலாகவே பா.ம.க.வினர் பார்ப்பதால், பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளை சோசியல் மீடியாக்களில் பதிவு செய்து வருகின்றனர் பா.ம.க.வினர். இதனால், தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பு எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

Alliance anbumani ramadoss pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe