Skip to main content

"பாஜகவுக்கு கட் அவுட் , காங்கிரஸூக்கு கெட் அவுட்" குஜராத்தில் 32 வருட காங்கிரஸ் சாதனை முறியடிப்பு

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

கத

 

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜகவே இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக வெளியாகி வருகிறது. குஜராத்தில் அதிகபட்சம் 120 இடங்களில் வரை பாஜக கைப்பற்றும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. இதுவரை ஆறு முறை தொடர்ந்து ஆட்சியிலிருந்தாலும் இதுவரை கண்டிராத வெற்றியை முதல் முறையாக பாஜக பெற்றுள்ளது. 

 

கடந்த தேர்தலில் தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம் என்று காங்கிரஸிடம் போராடி 99 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 160 தொகுதிகளில் முன்னணியிலிருந்து வருகிறது. காங்கிரஸ் 77 இடங்களில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில் மாநிலத்தில் இந்த முறை பாஜகவால் துடைத்தெறியப்பட்டுள்ளது. இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறுவதற்கே அங்கே காங்கிரஸ் போராடி வருகிறது. குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பாஜகவுக்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்ததே தவிர இத்துணை பிரமாண்ட வெற்றி கிடைக்கும் என்று பாஜக தரப்பே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். 

 

குறிப்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததைப் போல் குஜராத்தில்  நடைபெறாது என்று என்ன நிச்சயம் இருக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் வரலாற்று வெற்றியை ஈட்டி பதிலடி கொடுத்துள்ளது பாஜக. குஜராத்தில் பாஜக எப்போது பெறும் வெற்றியை விட இந்த முறை பல்வேறு சாதனையுடன் கூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆறு முறை பாஜக தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி செய்திருந்தாலும் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 150 தொகுதிகளைக் கடந்து பாஜக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இத்தகைய வரலாற்று வெற்றியை இதற்கு முன்பு 1985ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 149 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி இந்த சாதனையைச் செய்திருந்தது. ஆனால் அந்த சாதனையைப் போகிற போக்கில் கடந்து வரலாற்று வெற்றியை இந்த முறை பாஜக செய்துள்ளது. சுமார் 32 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை இந்த முறை பாஜக முறியடித்திருக்கிறது. அதே வேளையில் குஜராத்தில் காங்கிரஸ் சரிவு 1990ம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலிலிருந்தே ஆரம்பிக்கிறது. யாரும் தொட முடியாத வெற்றியை 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற காங்கிரஸ் கட்சி 90ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்குச் சென்றது. 

 

ஜனதா தளம் 77 தொகுதிகளில் வெற்றிபெற்று முதல் இடத்திலும், பாஜக 67 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்திலும், 33 இடங்களில் வெற்றிபெற்று கடைசி இடத்திற்கும் சென்றது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வு என்னவென்றால் 38 லட்சம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி சாத்தியமானது.  34 லட்சம் வாக்குகள் பெற்ற பாஜக 67 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதைப்போலவே 37 லட்சம் வாக்குகள் பெற்று ஜனதா தளம் 77 இடங்களில் வெற்றிபெற்றது. எனவே இன்றைக்கு மட்டும் அல்ல, கடந்த 35 ஆண்டுகளாகக் குஜராத்தின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக என்பதை விடக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்துள்ளதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

 

அதன் நீட்சியாகவே இந்த தேர்தல் முடிவுகள் இருப்பதை உணர முடிகிறது. ஆனாலும் பாஜகவின் இந்த வெற்றி என்பது மற்றொரு முறை வேறு எந்த மாநிலத்திலும் எதிர்காலத்தில் அவ்வளவு எளிதில் பெற முடியாத வெற்றியாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த வெற்றி மூலம் இந்தியாவில் இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து 7 முறை ஒரு மாநிலத்தில் ஆட்சியிலிருந்து சாதனை புரிந்திருந்தது. அந்த சாதனையை தற்போது பாஜக சமன் செய்துள்ளது. எனவே இந்த வெற்றி என்பது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பூஸ்ட் ஆக இருக்கும் என்று பாஜகவினர் கூறுவதை நம்மால் கேட்ட முடிகிறது. எனவே குஜராத் வெற்றி அடுத்த ஆண்டு நடைபெறும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு புதிய உற்சாகத்தை வழங்கும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது.