Skip to main content

அண்ணாமலை யாத்திரையில் பணிப் பெண்கள்? - அம்பலப்படுத்தும் மூத்த நிர்வாகி

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

bjp annadurai interview about Annamalai Yatra

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை குறித்துப் பல்வேறு தகவல்களை பாஜக முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

“அண்ணாமலை கர்நாடகாவில் ஒரு போலீஸ் அதிகாரியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். பாஜக அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது. அரசியலில் ஜொலிப்பதற்கு அனுபவமும், மக்களை அரவணைத்துச் செல்லும் தன்மையும் மிக முக்கியம். அனைவரும் தலைவராகிவிட முடியாது. அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவராக அறிவித்ததை பாஜகவில் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. குறுகிய காலத்தில் இவர் தலைவரானதை யாரும் விரும்பவில்லை.

 

பாஜகவை மறைமுகமாக வளர்த்து விடுவதே திமுக தான். இந்த பாதயாத்திரையில் இவரால் திமுக ஊழல் செய்துள்ளது என்று மட்டும் தான் பேச முடியும். மணிப்பூர் குறித்து இவரால் பேச முடியுமா? விலைவாசி உயர்வு குறித்து பேச முடியுமா? இவர்கள் செய்த எந்த நல்ல விஷயம் குறித்தும் இவர்களால் பேச முடியாது. அண்ணாமலையை சுற்றி ஒரு குரூப் இருக்கிறது. அவர்களைத் தாண்டி மற்ற தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாமலையை சந்திக்க முடியாது. இவர்களுக்கு ஓட்டலில் யாரும் ரூம் கொடுக்க மாட்டார்கள். அதனால் சொகுசு வேனில் ஊர்வலம் செல்கிறார்கள். இவர்களுக்கு பணிவிடை செய்வதற்கு பணிப் பெண்களும் இருக்கிறார்கள்.

 

மதுவை ஒழிக்கிறேன் என்று இங்கு பேசுகிறார்கள். ஆனால் பாண்டிச்சேரியில் பாஜக மது ஆலை வைத்திருக்கிறது. இவர்கள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் மது இருக்கிறது என்பது போல் இவர்கள் பேசுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் மதுவை ஒழித்து முன்மாதிரியாக பாஜக இருக்கலாமே? சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலிவரதன் என்பவர் கட்சியைச் சேர்ந்தவர்களிடமே அசிங்கமாகப் பேசினார். அவர் மேல் அண்ணாமலை ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? இதுபோல் கே.பி. ராமலிங்கம் என்பவரும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசினார். அவர் மீதும் நடவடிக்கை இல்லை.

 

பாஜகவில் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் இந்த நடைபயணம் தேவையற்றது என்று தான் நான் நினைக்கிறேன். இதனால் பாஜக வளராது. முதலில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். மணிப்பூரில் கலவரத்தை நடத்தியதே பாஜக தான். திமுகவை மிரட்டுவதற்காகத் தான் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு அமித்ஷாவை அழைத்து வந்தார்கள். பிரதமர் வர மறுத்துவிட்டார். இந்த யாத்திரையை வைத்து கணக்கு காட்டி மத்திய பாஜகவிடம் பணம் பெறுவதற்குத் தான் இது பயன்படும். இதனால் கட்சியை வளர்க்க முடியாது.

 

முதலில் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர்ந்ததா என்பதை மக்களிடம் அண்ணாமலை கேட்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறைந்துள்ளது. ஆனால் முன்பெல்லாம் மீனவர்களுக்கு படகாவது திரும்பக் கிடைத்தது. இப்போது படகையும் அவர்கள் திரும்பக் கொடுப்பதில்லை. இதற்கு இறப்பதே மேல் என்று அவர்கள் நினைக்கின்றனர். விவசாயிகளின் வயிற்றில் அடித்து என்எல்சி நிர்வாகம் என்ன சாதிக்கப் போகிறது? இது கண்டிக்கத்தக்கது. மிகப்பெரிய பாவம். மணிப்பூர் போல தவறுக்கும் காரணமாக இருந்துவிட்டு கண்டனமும் தெரிவிக்கும் வேலையைத் தான் இதிலும் பாஜக செய்கிறது. மக்களை இவர்கள் முட்டாளாக்க நினைக்கின்றனர்” என்றார்.