Advertisment

அபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்..."பிக்பாஸ்'' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை!

அரவிந்த்

விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் "பிக்பாஸ்-3' ஆரம்பித்து 50 நாட்களாச்சே, இன்னும் எதுவும் ஏடாகூடமா நடக்கலையே, நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.ரேட்டிங் ஏறலையேன்னு பார்த்தோம். நடந்துருச்சு. மதுமிதா மூலம் நடத்திட்டாய்ங்க' என்கிறார்கள் இதையெல்லாம் எதிர்பார்த்திருந்த பார்வையாளர்கள். "பிக்பாஸ்-1'க்கு மக்களிடம் இருந்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் "பிக்பாஸ்-3'க்கு ஆரம்பத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூட இந்த நிகழ்ச்சியை நடத்த ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அவரே நினைத்துப் பார்க்காத பெரிய தொகையை தருவதாக பிக்பாஸின் ஓனரான எண்டிமோல் நிறுவனம் சொன்னதும்தான் ஒத்துக்கொண்டார் கமல்.

Advertisment

big boss

அதேபோல் பிக்பாஸ்-1, 2-ஐ போல 3-ல் பெரிய பிரபலங்கள் யாருமே இல்லாததால், ("என்னங்க இது, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முக்கால்வாசி பேர் 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகள் மாதிரி இருக்காங்க' என பொதுமக்களே கமெண்ட் அடித்தனர்) முதல் இரண்டு வாரங்களுக்கு நிகழ்ச்சி டல்லடித்தது. இப்படி டல்லடித்த நேரத்தில்தான் தனது குழந்தை விவகாரம் சம்பந்தமாக வனிதா விஜயகுமாரை விசாரிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் போலீஸ் போனது, நிகழ்ச்சியும் பரபரப்பானது. அடுத்த சில நாட்களில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வனிதா, அந்த வீட்டிற்குள் இருக்கும் அபிராமி ஒரு சைக்கோ, மதுமிதா ஒரு முட்டாள்''’என ஓப்பனாக பேட்டி கொடுத்தார். நிகழ்ச்சி மேலும் சூடு பிடித்தது. பேட்டி கொடுத்த அடுத்த வாரமே, பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்டாக எண்ட்ரியான வனிதா, போட்டியாளராகி ஆச்சர்யப்படுத்தினார். அதேபோல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நடிகைகள் சிலர் இத்துனூண்டு சைசுக்கு டிரஸ் போட்டு, வலம் வந்ததால் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் செய்துவிட்டது.

big boss

Advertisment

அதற்கடுத்து "தென்னிந்திய அழகிப் போட்டி நடத்துவதாகச் சொல்லி பலரிடம் பணத்தை கலெக்ஷன்பண்ணி ஏமாற்றிவிட்டார் மாடலிங்கிலும் சினிமாவிலும் இருக்கும் மீரா மிதுன். இப்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்தார், ஜோ மைக்கேல் என்பவர். இவர் யாருன்னா மீரா மிதுனுக்கு கொடுத்த தென்னிந்திய அழகிப் பட்டத்தைப் பறித்து, அதே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தர்ஷனின் காதலியும் மாடலிங்குமான சனம் ஷெட்டிக்கு கொடுத்தவர்.

big boss

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற மாநகர போலீசார், "10 நாட்களுக்குள் ஆஜராகி பண மோசடி புகார் சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும்' என நோட்டீசைக் கொடுத்துவிட்டுத் திரும்பினர். அடுத்த மூன்றாம்நாளே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன், “""டைரக்டர் சேரன் என்னை தவறாக கையாண்டார் என சொல்லமாட்டேன். ஆனால் இதற்கான கர்மாவை சேரன் ஒருநாள் எதிர்கொண்டே ஆகவேண்டும்''’என ஒரு தினுசாகப் புகார் கிளப்பினார்.

big boss

அடுத்ததாக பஸ்ஸில் பயணிக்கும் பெண்கள் குறித்து, தனது அனுபவம் சார்ந்த சர்ச்சைக் கருத்து ஒன்றைச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பிய "பருத்தி வீரன்'’ சரவணன், சேரனை ஒருமையில் பேசி சலசலப்பைக் கிளப்பினார். இதைப் பார்த்துக் கொதித்துப்போன முன்னணி டைரக்டர்கள் பலர், "பிக்பாஸ் வீட்டைவிட்டு சேரன் உடனடியாக வெளியேற வேண்டும்' என குரல் கொடுத்தனர். பெண்கள் குறித்த சரவணனின் சர்ச்சைக் கருத்திற்கு வெளியில் இருந்து கண்டனம் தெரிவித்த நடிகை கஸ்தூரியும் அடுத்த சில நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியானார். இப்படியெல்லாம் சட்டை கிழியாமல் சண்டை நடந்துகொண்டிருந்தபோதுதான் காமெடி நடிகை "ஜாங்கிரி' மதுமிதா, தனது கையைக் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பகீர் கிளப்பியிருக்கிறார்.

big boss

ஆன்மிகம், கடவுள் வழிபாடு என அமைதியாக இருந்த மதுமிதா, தனக்கு வழங்கப்பட்ட டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தார். சாண்டி, தர்ஷன், முகின் போன்ற சக போட்டியாளர்களால் பலமுறை கேலிக்குள்ளாக்கப்பட்ட மதுமிதாவுக்கு சேரனும் கஸ்தூரியும் ஆதரவாக இருந்தனர். மதுமிதாவின் தமிழ்ப் பற்று, தமிழ்க் கலாச்சாரம், போட்டியாளர்கள் பலரால் எரிச்சலாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சக போட்டியாளர்களே மதுமிதாவை வெளியேற்றுவதற்கு ஆதரவாக இருந்தபோதும், மக்களின் வாக்களிப்பால் காப்பாற்றப்பட்டு வந்தார் மதுமிதா. "இது தமிழ் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிதானே, தமிழிலேயே பேசுங்க' என ஷெரினிடமும் அபிராமியிடமும் அடிக்கடி சொல்வார் மதுமிதா. ஒரு நாள் நதி நீர்ப் பிரச்சனை பற்றி பேச்சு வந்த போது, “வருண பகவான் கூட கர்நாடகா போல. அதனால்தான் தமிழ்நாட்டில் மழைகூட பெய்யமாட்டேங்குது''’என்றதும் அருகே இருந்த ஷெரின், ""நான் கூட கர்நாடகாதான்'' எனச் சொன்னதும் அங்கே மோதல் வெடித்திருக்கிறது.

இந்த சமயம் உள்ளே புகுந்த வனிதா, மதுமிதாவைப் பார்த்து, "என்ன பெருசா தமிழ், தமிழ்ங்குற. உனக்கு மட்டும்தான் தமிழ் உணர்வு இருக்கா, மத்தவங்களுக்கு இல்லையா?''’என சவுண்ட் விட்டதும், ""தமிழுக்காக என் உயிரையும் கொடுப்பேன்''’என உணர்ச்சிப்பூர்வமாக பதிலடி கொடுத்திருக்கிறார் மதுமிதா. சும்மா பப்ளிசிட்டிக்காக சீன் போடாத, உயிரைக் கொடு பார்க்கலாம்'' என வனிதா உசுப்பேற்றியிருக்கிறார். வாக்குவாதம் முற்றி, கொந்தளித்த மதுமிதா, கத்தியை எடுத்து இடது கையை அறுத்துக்கொண்டார். மற்ற போட்டியாளர்கள் அமைதியாக இருக்க, சேரனும் கஸ்தூரியும் பதறியடித்து ஓடிவந்து, மதுமிதாவுக்கு கட்டுப் போட்டுள்ளனர். உங்களது தமிழ் உணர்வை அகிம்சை வழியில் காட்டியிருக்கலாமே''’என மதுமிதாவிற்கு ஆறுதல் கூறினார் கமல். ஆனாலும் மதுமிதாவின் இந்த செயல் பிக்பாஸ் சட்டத்திற்கு எதிரானது என்பதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா, விஜய் டி.வி.யின் வழக்கறிஞர் பிரசாந்த் மூலம் மதுமிதா மீது கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். ""பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா, எங்களது ஒருங்கிணைப்பாளர் டீனாவுக்கு வாட்ஸ்-அப் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனக்குச் சேரவேண்டிய சம்பளப் பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்’’ என மிரட்டும் தொனியில் இருக்கிறது மெசேஜ். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்பதுதான் அந்தப் புகார். கிண்டி இன்ஸ்பெக்டர் சந்துருவும் உடனே வழக்கு பதிவு செய்து, சி.எஸ்.ஆரும் கொடுத்துவிட்டார்.

தற்கொலை முயற்சி, போலீஸ் கேஸ் என பரபரப்புக்குள்ளாகியிருக்கும் நடிகை மதுமிதா, கடந்த 22-ஆம் தேதி மாலை மீடியாக்களைச் சந்தித்தார். ""எனக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கிப் பணம் 22 லட்சத்தைத்தான் கேட்டேனே தவிர தற்கொலை மிரட்டல் விடுக்கவில்லை. அவர்கள் கொடுத்த புகாரால் நானும் எனது குடும்பமும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். இனிமேலாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்'' என்றார். சுற்றிலும் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தாலும், "பிக்பாஸ்' வீட்டுக்குள் மர்மங்களுக்குப் பஞ்சமில்லை என்றார்.

actor abirami tv show kamalhassan bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe