ADVERTISEMENT

கரோனா காலத்திலும் கருணைக் கரங்கள் நீள வேண்டும்...  இரத்த தானம் செய்ய முன்வாருங்கள்!!

08:02 PM Jun 14, 2020 | kalaimohan


நிலம் எங்கும் செங்குருதி படர்ந்த முதல் மற்றும் இரண்டாம் போர்களில் உயிரிழப்பு சற்று குறைந்ததற்கு முக்கிய காரணம் இரத்த தானம் என்னும் மகத்தான மருத்துவக் கண்டுபிடிப்பு தான். பின்னர் செஞ்சிலுவை சங்கத்தால் வெற்றிகரமாக ஒரு தன்னார்வ இயக்கமாக வளர்ந்து உலகமெங்கும் பல உயிர்கள் காக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT


தற்போதைய பெருந்தொற்று காலத்தில் நாட்டின் அனைத்து துறைகளுமே கொரோனோவால் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதில் மருத்துவத் துறை மட்டுமே கரோனாவிற்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டு வாழ்தலின் சாத்தியத்தை அதிகப்படுத்தி அனைவருக்கும் நம்பிக்கை அளித்து வருகிறது. ஆனால் மருத்துவத்துறையிலும் கரோனா அல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் பிற நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக இரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பல மருத்துவமனைகள் திணறி வருகின்றன. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நூறு முதல் இருநூறு வரை இருக்கும். பல இரத்த வங்கிகள் இரத்த தானம் அளிக்கும் தன்னார்வலர்களை நம்பியே உள்ளது.

ADVERTISEMENT

கடந்த மூன்று மாதங்களாக கரோனா அச்சத்தால் இரத்ததான முகாம்கள் எதுவும் நடைபெறாத காரணத்தாலும், இரத்தக் கொடையாளர்களும் கரோனா அச்சத்தால் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்ய தயக்கம் காட்டுவதாலும் பல நோயாளிகளின் இரத்தத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மருத்துவமனைகளும், இரத்த வங்கிகளும் மிகுந்த அளவில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கீமோதெரபி எனப்படும் புற்றுநோய் சிகிச்சை முறையில் நோயாளிகளின் இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை திடீரென குறைந்துவிடும் எனவே அவர்களுக்கு இரத்த தட்டணுக்கள் செலுத்தப்படவில்லை என்றால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதேபோல அறுவை சிகிச்சை பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கும் இரத்தம் அளிப்பது இன்றியமையாததாகிறது. அவர்களுக்கான இரத்தத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் உயிரைக் காக்க குருதிக் கொடையாளர்கள் முன்வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை அரசும் ஊடகங்களும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும், மேலும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும்.

இது குறித்து நம்மிடையே பேசிய இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வ அமைப்பான Platelet Club என்ற அமைப்பின் நிறுவனர் Srivasta vema, இந்த ஊரடங்கு காலத்தில் இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைப்பது மிகச் சவாலாக உள்ளதாகத் தெரிவிக்கிறார். மேலும் கூறிய அவர் ஊரடங்கு காலத்தில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட இரத்த தேவைகளுக்கான அழைப்பு, மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் தரப்பிலிருந்து வந்ததாகவும் அதில் 900 இரத்த தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்ததாகவும் தெரிவிக்கிறார். மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்கிய மே மாதம் மூன்றாம் தேதி மட்டும் 76பேர் இரத்தத் தேவைகளுக்காக தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் அதில் பாதிக்கும் அதிகமான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதாகவும் வேதனை கொள்கிறார். அவருக்கு வந்த அழைப்புகளை மருத்துவமனை வாரியாக பட்டியலிட்ட அவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை எக்மோர் குழந்தைகள் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை என பட்டியல் நீீீள்கிறது பெரும்பாலான இரத்தத் தேவைகளை, கொடையாளர்கள் வராததால் பூர்த்தி செய்ய முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். இதற்குக் காரணமாக சென்னையில் அதிகரித்து வரும் கரோனா அச்சத்தால் கொடையாளர்கள் வெளியில் வர யோசிப்பதாக கூறுகிறார்.


மேலும் காவல்துறையினர் மேல் உள்ள அச்சமும் ஒரு காரணமாக கூறுகின்றனர். தொடர்ந்து கூறிய அவர் பெரிய ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்குள் ஒரு அமைைப்பை ஏற்படுத்தி சக ஊழியர்களுக்கு உதவலாம். அதைப்போல உறவினர்களும் கூடியவரை தங்கள் குடும்பத்திற்குள் தானம் செய்யலாம். அத்தனையும் தாண்டி அனைவருமே இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கிகளில் இரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொள்ளலாம். உலக இரத்ததான தினமான (ஜுன் 14) இன்றுமுதல் இரத்த தானம் செய்வது என உறுதி எடுத்துக் கொள்வோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரோனாவிற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். இதை மனித இனம் வென்றே தீரும். ஆனால் எப்போதுமே தங்கள் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் புற்றுநோய் நோயாளிகள் மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற நோய்களுக்கான குருதித் தேவைகள் என்றுமே நிரந்தரமானது. அவர்களின் துயர் நீங்க நம் அனைவரின் கருணைக் கரங்களும் நீள வேண்டும். இதுவரை நிகழ்ந்த அனைத்துப் பேரிடர்களிலும் தழைத்த மனிதம்! தற்போதும் நிலைகொண்டிருக்கும் மனிதம்! இரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் துயரையும் போக்க வேண்டும். இதில் இரத்த தானம் செய்யும் தன்னார்வலர்களுக்கு நிகரான பங்கு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசிடமும், தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி அச்சத்தைப் போக்கும் ஊடகங்களுக்கும் உள்ளது. குருதி தானம் செய்து மனிதம் போற்றுவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT