Skip to main content

நான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

admk


கரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் இருக்கும் தமிழகத்தில் அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோடிகள் மதிப்புள்ள ஒரு வீட்டைக் கட்டி கிரகப் பிரவேசம் செய்துள்ளார்.

 

பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கத்துக்கும் திருப்போரூருக்கும் இடையே அமைந்துள்ள ஊர் தையூர் எனும் பட்டியலின மக்கள் அதிகம் வாழும் கிராமம். இங்கு ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அதற்குப் பின்புறம் கோமான் நகர் என்கிற நகர் உள்ளது. அங்கே சொகுசு வீடுகள் அமைந்துள்ளன. அந்த வீடுகளை ஒட்டிச்செல்லும் கிராமச் சாலையில் சென்றால் வரிசையாக பளபள என மின்னும் குடியிருப்புகள் வருகிறது. அவையெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த 56 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் குடியிருப்புகள்.

 

அதில் மிகப் பிரம்மாண்டமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரியாக இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு மதுவிலக்குத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் அவரது கணவர் ராஜேஷ்தாஸ் ஆகியோர் கட்டியிருக்கும் பிரம்மாண்டமான வீடு. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பண்ணை வீட்டைப் போல பிரிட்டீஷ் அரண்மனை கட்டிடக் கலையுடன் அமைந்த அந்த வீட்டிற்குச் சமீபத்தில்தான் கிரகப் பிரவேசம் நடந்துள்ளது.
 

house


கரோனா ஊழல்கள் அம்பலப்படும் சூழலில், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், பிரம்மாண்டமான வீடு கட்டியிருக்கிறார் என செய்திகள் வந்ததும் நேரில் சென்று, வீட்டை படம் எடுக்க முயலும்போதே அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் நம்மை படம் எடுத்தார்கள். நமது அடையாள அட்டையையும் வாங்கிப் பார்த்தார்கள். நாம் இது யாருடைய வீடு எனக் கேட்டோம். கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் உடைய கார் அங்கே நின்றிருந்தது. நம்மை போலீஸ்காரர்கள் விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள். நாம் அங்கிருந்து வெளியேறி மறுநாள் அதிகாலையில் சென்றோம். அருகில் குடியிருக்கும் கிராமவாசிகளிடம் அந்த வீட்டைப் பற்றி விசாரித்தோம்.

 

இதுபோல ஒரு வீட்டை யாராலும் கட்ட முடியாது. இந்தக் கிராமத்துச் சாலைகளில் மிகப்பெரிய லாரிகளைக் கொண்டு வந்து, ஒன்பது ஆண்டுகளாக இந்த வீடு கட்டப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் தனியாக ஒரு பெரிய நீச்சல்குளம், உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம், செயற்கையாக உருவாக்கப்பட்ட குளம், அதில் மீன்கள்- பறவைகள். அந்தக் குளத்தின் நடுவில் அமர்வதற்கு இருக்கைகள், இவற்றோடு கூடுதலாக இன்னொரு வீடு, இதுதவிர பாதுகாவலர்கள் தங்குவதற்குத் தனி அறை, மழை நீர் தேங்கும் தையூர் ஏரிக்கரையில் வீட்டிற்குள் நீர் புகாதபடி கூழாங்கற்களைப் பரப்பி இரண்டரை ஏக்கர் நீளத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என சகல வசதிகளும் இருக்கிறது.

 

house


பீலா ராஜேஷ், ஜார்க்கண்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தபோது அங்கிருந்து கட்டிடப் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டு வேலை ஆரம் பிக்கப்பட்டது. அதன்பிறகு மெதுவாகத் தமிழகத்தைச் சார்ந்த கட்டிடப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். கரோனா காலத்தில் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கிருஸ்தவரான பீலா ராஜேஷ் - ராஜேஷ்தாஸ் தம்பதியினர் இந்து பிராமணர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக பூஜை நடத்தினர். அதன் பிறகு ராஜேஷ்தாஸ் கரோனா காலம் முடியும்வரை அந்த வீட்டிலேயே தங்கினார். பீலா ராஜேஷ் தனது மகள்களுடன் அவ்வப்போது அங்கு வந்து செல்வார். வெளியாட்கள் அந்தப் பக்கம் போனாலே திருப்பி அனுப்புவார்கள். பணியில் உள்ள ஆர்டர்லிகளுக்குக்கூட கரோனா நேரத்தில் வீட்டு உணவு கிடைக்கவில்லை என விவரித்தனர். இந்த நகரில் உள்ள சாலைகளைத் தார்ச் சாலையாக்குவதற்கு அ.தி.மு.க.-வின் முன்னாள் எம்.பி.-யான மரகதம் குமரவேல் கணவர் கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். அவர் சரளைக்கற்களை நகரம் முழுக்க உள்ள சாலைகளில் கொட்டிவிட்டு வேலையை முடிக்காமல் பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்காகக் கட்டப்படும் குடியிருப்புச் சாலைகளைப் போட எடுத்திருக்கும் கான்ட்ராக்ட்டை கவனிக்கச் சென்று விட்டார். பீலாராஜேஷ் வீட்டுக்குப் பக்கத்தில் அருப்புக்கோட்டை கல்லூரியின் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர் குடியிருக்கிறார். அவர் ஒருநாள் "நாங்கள் வயதானவர்கள் இங்கே குடியிருக்கிறோம். இங்கிருக்கும் சாலைகளை மேம்படுத்த முடியுமா?'' எனக் கேட்டுள்ளார். அவரிடம், சாலைகளை போட மூன்று லட்ச ரூபாய் கொடுக்குமாறு ராஜேஷ்தாஸ் கேட்கவே, அவர் வாயடைத்துப்போனார். அதேநேரம் காஞ்சிபுரம் கலெக்டர் அவரது வீட்டுக்கு வந்து சென்றார் என்கிறார்கள் கிராம வாசிகள்.

 

அந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்றரை லட்ச ரூபாய்க்கு விலை போகிறது. ராஜேஷ்தாஸ் பீலா தம்பதியினர் 350 சென்ட் நிலம் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றரை லட்சம் சதுர அடிகள் கொண்ட பண்ணை வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். எப்படியும் அதன் மதிப்பு 150 கோடி ரூபாயைத் தொடும் என்கிறார்கள் அந்தக் கிராமத்தில் நில வணிகத்தில் ஈடுபடும் வணிகர்கள். இந்த நிலம் தையூர் ஏரியின் பின்புறம் அமைந்துள்ள விவசாய நிலமாகும். பெரும்பாலும் தலித்துகளுக்கே சொந்தமாக இருந்த இந்த நிலத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் சென்ட்டுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து 1990-களில் வாங்கினார். அதன் பிறகு அந்த நிலம் ரியல் எஸ்டேட்டுக்காக சாலைகள் விரித்து மனைகளாக மாற்றப்பட்டது. அந்த மனையில் முதலில் வாங்கியவர் ராஜேஷ்தாஸ் - பீலா தம்பதியினர்.

 

அவர்களைத் தொடர்ந்து சென்னையின் புகழ்பெற்ற காசா கிராண்ட் என்கிற கட்டுமான நிறுவனம் நிலத்தை வாங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மொத்தம் 56 ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் அங்கு நிலங்களை வாங்கினர் எனச் சொல்லும் நில வணிகர்கள் தற்போது டி.ஜி.பி.யாக இருக்கும் ராஜேஷ்தாஸின் சொந்த மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த திரிபாதி வாங்கிய நிலத்தையும் நமக்கு காட்டினார்கள்.

 

ராஜேஷ்தாஸ் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் திரிபாதி, இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி அதில் சாதாரணமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருந்தார். அந்த வீட்டையும் படம் எடுத்தோம். அப்பொழுது அங்கு பாதுகாவல் வேலையில் இருந்த ஒரு போலீஸ்காரர் நம்மை தடுத்தார். அவர் டி.ஜி.பி. திரிபாதியின் வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு ஆய்வாளருக்கு போன் செய்து அவரை நம்மிடம் பேச வைத்தார்.

 

ias

 

நாம் இது டி.ஜி.பி. யின் வீடுதானே எனக் கேட்டதற்கு ஆம் எனச் சொன்ன அவர், எதற்காகப் படம் எடுக்கிறீர்கள் என்றார். நமது நோக்கத்தைச் சொன்னோம். அதன் பிறகு அவர்கள் நம்மை விட்டு அகன்றுவிட்டார்கள்.

 

டி.ஜி.பி. திரிபாதியின் கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் குடியிருக்கும் நாகப்பன் என்பவரிடம் பேசினோம். "டி.ஜி.பி. இங்கு ஓய்வெடுக்க வருவார். கிராமத்து மக்களிடம் எளிமையாகப் பேசுவார். ஆனால், ராஜேஷ்தாஸ் ஸ்டிரிக்ட்டாக இருப்பார்'' என்றார். அந்தக் கிராமத்துச் சாலையில் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி தண்ணி அடிப்பது போன்ற உற்சாகமான செயல்களில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அதையும் படமாக்கிக்கொண்டு திரும்பினோம்.

 

இதுபற்றி பீலாராஜேஷின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவர், "எனக்கும் என் கணவருக்கும் தையூர் பக்கத்தில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. அதை 2000-ஆம் ஆண்டு எனது அப்பா கொடுத்த பணத்தில் நாங்கள் வாங்கினோம். அதைச் சமீபத்தில்தான் கட்டி முடித்தோம். எனக்குக் கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறது. அதுதவிர இந்த வீடு என்னுடைய சொத்தாகும். இதை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் அரசாங்கத்தில் அனுமதியைப் பெற்றுதான் நானும், என் கணவர் ராஜேஸ் தாஸும் கட்டினோம். அதைப் பற்றி எழுதப்போகிறீர்களா? நான் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் நொந்துபோயிருக்கிறேன். இப்பொழுது அதைப் பற்றி எழுதாதீர்கள்'' என்றார்.

 

நாம், "நீங்கள் சுகாதாரத்துறை பதவியில் இருந்து மாற்றப்பட்டாலும், வணிகவரித்துறை செயலாளர் என்கிற உயர்ந்த பதவிக்குத்தான் சென்றுள்ளீர்கள். எனவே இதில் நொந்து போவதற்கு என்ன இருக்கிறது'' எனக் கேட்டோம். அதற்கு அவர், "என்னைப் பற்றி வந்த தவறான விளம்பரங்கள் என்னை பாதித்துள்ளன'' என்றார். அவரது கணவர் ராஜேஷ்தாஸை தொடர்பு கொண்டோம்.
 

http://onelink.to/nknapp


"ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் வீடுகள் மற்றும் சொத்துகள் வாங்குவது புதிய விஷயம் அல்ல. சென்னைக்கு மிக அருகில் நெற்குன்றத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடு கட்டியிருக்கிறார்கள். 1999 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் இரண்டு லட்ச ரூபாய் என இந்தப் பகுதியில் நிலங்கள் விற்கப்பட்டது. அப்பொழுது நான் இந்த நிலத்தை வாங்கினேன். அதன் பிறகு ஏழு வருடமாகக் கட்டிடம் கட்டும் பணியைச் செய்தேன். இதற்காக HDFC வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். அதற்கான மாதத் தவணையை நான் கட்டி வருகிறேன். இந்தச் சொத்து முழுமையாக நான் வாங்கிய, எனக்கு சொந்தமான சொத்து. இதற்கும் பீலா ராஜேஷ்க்கும் தொடர்பு இல்லை.

 

அந்த வீட்டிற்கு எனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தவிர எந்தப் பெண்ணும் விருந்தினரும் வந்ததில்லை. காஞ்சிபுரம் கலெக்டர் 22 அதிகாரிகளுடன் வந்தார். அவருக்கு கூல்டிரிங்ஸ் தவிர நான் எதையும் தரவில்லை. 'நக்கீரன்' நிருபர் கதிரைதுரை 1992ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தாக்கப்பட்டபோது அங்கு பயிற்சி எஸ்.பி.யாக இருந்தேன். அன்று கதிரை துரையைத் தாக்கிய ஆறுமுக நயினார், அன்றைய அமைச்சர் கண்ணப்பனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். ஆறுமுக நயினாரைக் கைது செய்யச் சொன்ன ஆய்வாளர் ஓடிவிட்டார். நான் நேரடியாகப் போய் அவரை கைது செய்தேன். கதிரை துரையின் உயிரைக் காப்பாற்றினேன். ஆகவே என்னைப் பற்றி நல்ல செய்திகளை எழுதுங்கள்'' என அட்வைஸ் செய்தார். 'நக்கீரன்' நிருபரும் புகைப்படக் கலைஞருமான கதிரைதுரை ஆளுங்கட்சியினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையிலும் காவல்துறை அதிகாரியான ராஜேஸ்தாஸ் துணிச்சலுடன் செயல்பட்டதை 'நக்கீரன்' பலமுறை பதிவு செய்துள்ளது. நாமும் சரியென சொல்லிவிட்டு போனை வைத்தோம். அவர் சொன்னதையும் அப்படியே பதிவிட்டுள்ளோம். செய்திகளை எடைபோடுபவர்கள் மக்கள்தானே!


 

Next Story

உணவு கொடுக்காததால் ஆத்திரம்; மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 The tragic decision taken by the husband by incident his wife for not being given food;

உத்தரப்பிரதேசம் மாநிலம், சீதாபூர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராம். இவருக்கு பிரேமா தேவி (28) என்ற மனைவி இருந்தார். பரசுராம், அங்குள்ள பகுதியில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (18-03-24) பரசுராமின் மனைவி பிரேமா தேவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், பரசுராமின் வீட்டுக் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு பரசுராம் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார்.

வீட்டில் மர்மமான முறையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் இறந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், வழக்கம்போல் விவசாயம் பார்த்து நேற்று மதியம் வீட்டுக்கு வந்த பரசுராம், தனது மனைவி பிரேமா தேவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் சாப்பாடு தயாராகவில்லை என்று பிரேமா தேவி கூறியுள்ளார். மேலும், சாப்பாடு தயார் செய்ய நேரம் அதிகமானதால், பரசுராம் கோபமடைந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த பரசுராம், அங்கு இருந்த கத்தியை எடுத்து பிரேமா தேவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரேமா தேவி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு பதற்றமடைந்த பரசுராம், மனைவியைக் கொலை செய்ததற்காக சிறை செல்ல நேரிடுமோ என்று பயந்து வீட்டுக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. சாப்பாடு செய்ய நேரம் அதிகமானதால் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இளம்பெண் தற்கொலை; மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The woman's parents in law were burned to incident by relatives for Teenage incident in u.p

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்ஷிகா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு அன்ஷிகாவிடம், வரதட்சணை கேட்டு அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்து போன அன்ஷிகா, நேற்று (18-03-24) இரவு தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர், அன்ஷிகாவின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அன்ஷிகாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களுடன் அன்ஷு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அன்ஷிகா குறித்து அன்ஷு குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் மோதலாக உருவாகியது. இதில் ஆத்திரமடைந்த அன்ஷிகாவின் உறவினர்கள், அன்ஷுவின் வீட்டிற்குத் தீ வைத்தனர். இதில் வீட்டுக்குள் இருந்த அன்ஷுவின் குடும்பத்தினர் மாட்டிக்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருப்பினும், அன்ஷுவின் தந்தை ராஜேந்திர கேசர்வானி (64) மற்றும் தாய் ஷோபா தேவி (62) ஆகியோர் பற்றி எரிந்த தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவர் உடலையும் போலீசார் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.