Skip to main content

பாரத் பெட்ரோலியத்தின் இயக்குனர் தமிழிசை அவர்களே பெட்ரோல் விலை பற்றி பேசுங்கள்!

Published on 04/05/2018 | Edited on 05/05/2018

தற்போது அதிர்ச்சியளிக்கும் விஷயம் கர்நாடக மாநில தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்படாமல் உள்ளன என்பதுதான். கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப தினசரி பெட்ரோல், டீசல் விலைகள் மாறும் எரிபொருள் விலை என்ற புதிய முறை அமுல்படுத்தப்பட்டது.  

tamilisai

 


இதன்படி தினமும் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றங்களை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வந்தன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அறிவித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் ஏப்ரல் 24-ஆம் தேதியிலிருந்து விலையை அறிவிக்காமல் உள்ளன. அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி விலையே தொடர்கின்றது.
பெட்ரோல், டீசல் தினசரி விலை மாற்றங்கள் அறிவிக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துள்ளனர். நிதியமைச்சக அதிகாரிகளோ எண்ணெய் விலை அறிவிப்பு விஷயத்தில் நிதியமைச்சகம் எதுவும் செய்ய முடியாது. அது நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முடிவு என்று கூறுகின்றனர். இது வடிவேலு சொன்ன மாதிரி சின்னபுள்ளதனமாக இருக்கு.


இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த பெட்ரோல், டீசல் விலையை நிறுத்தி வைக்கும் முடிவானது மத்திய அரசின் அழுத்தத்தால்தான் எடுக்கப்பட்டது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. குஜராத் தேர்தலிலும் இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையை திட்டமிட்டு குறைத்தது. டிசம்பர் 14-ஆம் தேதி தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலை உயரத் தொடங்கியது. அப்போது எண்ணெய் நிறுவனங்கள் விலை குறைக்கச் சொல்லி மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆக பி.ஜே.பி அரசு தேர்தல் வெற்றிக்காக பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் தலையிடுகிறது வெளிப்படையாக தெரிகிறது. குஜராத் தேர்தலின்போது பெட்ரோல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலைப்படி ஏறிக்கொண்டிருக்கும்போது, மாறும் எரிபொருள் விலைக்கு எதிராக செயற்கையாக விலையை குறைத்தனர். இதனால் தேர்தலில் வெற்றி பெற்றாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்தியாவில் மத்திய அரசே திட்டமிட்டு தேர்தலுக்காக எரிப்பொருள் விலை நிர்ணயத்தில் தலையிடுவது எந்த விதத்தில் சரியானது. அரசே இப்படி செய்தால் தனியார் எண்ணெய் நிறுவனங்களான ரிலைன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன், பிரிட்டீஸ் பொட்ரோலியம் இதே வேலையை செய்யாதா. 

 

petrol




இப்போது கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் உள்ளது. இன்னும் சில மாதங்களில்  கச்சா எண்ணெய் விலை இறங்க வாய்ப்புள்ளது. அப்போது நேர்மையான முறையில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இப்போது கூறப்படும் பெட்ரோல் விலை இறங்காது என்ற வாதம் தவறானது. கடந்த ஆண்டுகளில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பல ஏற்ற, இறக்கங்களை பார்த்துள்ளது. 2002 செப்டம்பர் மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 26.70.பைசா. 2003 ஜனவரி ரூ. 33.50 பைசா. 2005 செப்டம்பர் மாதம் ரூ. 43.50, அடுத்த ஆண்டான 2006 செப்டம்பர் மாதத்தில் ரூ. 46.50. 2008 செப்டம்பர் ரூ. 50.60, அடுத்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் 2009 ஜனவரி மாதம் பெட்ரோல் விலை ரூ. 40.60 பைசா. 2012 மீண்டும் கச்சா எண்ணெய் ஏறுமுகமாக மாறியதால் அந்த ஆண்டு செப்டம்பர் ரூ. 68.50, மீண்டும் கச்சா எண்ணெய் சரிவினால் 2014 ஜூலை மாதம் ரூ. 54.70. 2008 டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத வகையில் விலை வீழ்ச்சியடைந்தது. அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பெட்ரோல், டீசல் விலை குறைக்காமல் ஏமாற்றி விட்டது. இப்போது முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் பெட்ரோல், டீசல் விலை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அடுத்து ஏறுமுகத்தில் கச்சா எண்ணெய் விலை மாறியதால் இந்த ஆண்டின் உச்ச விலையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.20 பைசாவானது. இப்படித்தான் பெட்ரோல் விலை பல ஆண்டுகளாக ஏறி இறங்கி வருகிறது.

 
இதில் வேடிக்கை என்னவென்றால் நமது அண்டை நாடுகளை விட இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.50.67 பைசா (விலை நிர்ணயம் செய்வது பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் கார்ப்பரேசன்), வங்காளதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.68.47 பைசா (விலை நிர்ணயம் செய்வது வங்காளதேசம் பெட்ரோலியம் கார்ப்பரேசன்), நேப்பாளில் பெட்ரோல் விலை ரூ.66.69 பைசா (விலை நிர்ணயம் செய்வது நேப்பாளம் ஆயில் கார்ப்பரேசன்), இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.49.67 பைசா (விலை நிர்ணயம் செய்வது சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன்). நமது நாட்டின் எரிபொருள் விலையில் நேர்மையின்மை வைத்துக் கொண்டுதான் வல்லரசு கனவை கண்டுகொண்டிருக்கிறோம். பா.ஜ.க மாநில செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் இப்போது பாரத் பெட்ரோலியத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அனைத்து பரபரப்புகளுக்கும் பேட்டி தரும் இவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி பேசுவாரா?