Skip to main content

கட்சிக்காரங்களுக்குத்தான் கடன் தள்ளுபடியா? கலங்கும் விவசாயிகள்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

"வெல்லம் திங்கிறது ஒருத்தன்… விரல் சூப்பறது இன்னொருத்தனா'… என சொலவடை சொல்வார்கள். தமிழக அரசின் பயிர்க்கடன் விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளதென கொந்தளிக்கின்றனர் விவசாயிகள்.

 

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பலனடைவார்கள் எனவும் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பலமுறை இதனை வலியுறுத்தியபோது, மறுத்து வந்த அ.தி.மு.க அரசு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடன் தள்ளுபடி என அறிவித்ததில் அரசியல் நோக்கம் இருந்தாலும், இனியாவது விவசாயிகளின் வாழ்வு மலர்ந்தால் நல்லதுதான் என்பதே பொதுவான பார்வை. ஆனால் விவசாயிகளிடம் மாறுபட்ட பார்வை உள்ளது.

 

மன்னார்குடி ரெங்கராஜன், பி.ஆர்.பாண்டியன் போன்ற விவசாயிகளின் பிரதிநிதிகள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருந்தாலும், இதில் உள்ள அரசியல் நோக்கத்தையும் மறுப்பதற்கில்லை என்கிறார்கள் விவசாயிகள். வரலாறு காணாத வகையில் வெளுத்துவாங்கிய நிவர் புயலாலும், புரெவி புயலாலும் பேரழிவைச் சந்தித்த டெல்டா விவசாயிகளுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல மார்கழி மாதம் பெய்த தொடர் கனமழையில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மொத்த நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுவிட்டது. வேதனையில் தவித்த விவசாயிகள் தற்கொலை நிலைக்குச் சென்றனர்.

 

ddd

 

இப்படிப்பட்ட நிலையில், அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்திருக்க வேண்டும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு. கேட்பதற்கு இனிப்பாகத் தெரிந்தாலும் “உண்மையான விவசாயிகளைவிட, விவசாயிகளின் போர்வையில் ஆளுங்கட்சியினரே முழுப்பலனையும் அனுபவிக்கப் போகிறார்கள்'' என குமுறுகிறார்கள் விவசாயிகள். அதற்கேற்ப, அறிவிப்பு வெளியானதும் உண்மையான விவசாயிகளைவிட அ.தி.மு.க.வினரும் அவர்களின் ஆதரவுக் கட்சியினரும், பெரும் முதலாளிகளுமே பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். காரணம், அவர்கள்தான் பெருமளவில் கடன் வாங்கியுள்ளனர். குறு, சிறு விவசாயிகள் இந்த அறிவிப்பினால் தங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது எனத் தெரியாமல் உள்ளனர்.

 

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறுகையில், "ஐந்து ஆண்டுகளாகவே கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கப்படுவதில்லை. அ.தி.மு.க.வினரே பயனடைந்தனர். 80 சதவிகித விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக தேசிய மற்றும் வணிக வங்கிகளிலும், கந்துவட்டி அடகுக் கடைகளிலுமே கடன் வாங்கியுள்ளனர். 20 சதவிகிதம் விவசாயிகள்தான் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். அந்த 20 சதவிகிதத்திலும் ஆளும் கட்சியினரும், அவர்களின் பின்புலம் உள்ளவர்களும், மிகவும் வசதி படைத்தவர்களும், வரி ஏய்ப்பு செய்து கணக்குக் காட்டுவதற்காக விவசாயம் செய்பவர்களும்தான் அதிகளவில் கடன் பெற்றுள்ளனர். அவர்களுக்குத்தான் தற்போதைய தள்ளுபடி சாதகமாக இருக்கும். ஏற்கனவே பல வழிகளில் ஊழல் செய்து பணம் சேர்த்தது போதாது என பயிர்க்கடன் தள்ளுபடியாகும் என ஆளாளுக்குப் பல லட்சம் ரூபாய் கடன்பெற்று தற்போது பலனடைகிறார்கள். விவசாயத்தை மட்டுமே முழுநேர வாழ்வாதாரமாகக் கொண்ட உண்மையான விவசாயிகளில் பெரும்பாலானோருக்கு இந்த அறிவிப்பினால் பலன் இல்லை. தேசிய மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்கிறார் வேதனையுடன்.

 

ddd

 

திருவாரூர் மாவட்டம் கொத்தங்குடி பகத்சிங் கூறுகையில், "சாகுபடிக்காகத்தான் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது என்கிற நிலையை, கடந்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு மாற்றிவிட்டது. கூட்டுறவு சங்கங்கள் முழுவதும் அ.தி.மு.க.வினரின் கட்சி அலுவலகமாகவே மாறிவிட்டன. அ.தி.மு.க.வினர் மட்டுமே கடன் பெற்றுள்ளனர். அ.தி.மு.க.வினரே நிர்வாகத்தில் இருப்பதால் சாகுபடியே செய்யாமல் சும்மா கிடக்கும் நிலங்களுக்கும் குறுக்கு வழிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். சிறு, குறு விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சி வந்த காலம்முதலே கடன் கிடைக்காமல் போய்விட்டது. இதுவரை மூன்றுமுறை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பாதிக்குப் பாதியாவது விவசாயிகள் இருந்தனர். இந்த முறை முழுப்பலனையும் அ.தி.மு.க.வினரே அனுபவிக்கப் போகிறார்கள்'' என்கிறார்.

ddd

 

தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த விவசாயி கக்கரை சுகுமாறன் கூறுகையில், "தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகக் குழுவில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க.வினர்தான் பதவி வகிக்கிறார்கள். குறிப்பாக சொசைட்டி தலைவர், துணைத்தலைவர், இயக்குனர் உள்ளிட்ட எல்லா பதவிகளையும் அ.தி.மு.க.வினரே கைப்பற்றி வைத்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் எந்த முறைகேடுகள் நடந்தாலும் கேள்வி கேட்க சம்பிரதாயத்திற்குக்கூட ஆள் கிடையாது.

 

கடன் சங்கத்தின் விதிப்படி விவசாயி குடும்பத்திற்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்தான் பயிர்க்கடன் கொடுக்கணும். ஆனால் நிர்வாகக் குழுவில் உள்ள அ.தி.மு.க.வினர், குடும்பத்தில் உள்ள பலரது பெயரிலும், பினாமிகள் பெயரிலும் பல லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார்கள். தற்போதும் வாங்கியுள்ளார்கள். பயிர்க் கடன் வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா அடங்கல் வாங்கிக் கொடுக்கணும். அதையும் மீனியலுக்கு நூறு, இருநூறு லஞ்சம் கொடுத்து எத்தனை விதமாக, யார் யார் பெயரில் வேண்டுமானாலும் சிட்டா அடங்கலைப் பெற்று ஒரே நிலத்துக்குரிய சர்வே நம்பரைப் பயன்படுத்தி பல தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள்.

 

சாகுபடி செய்யாமல் சும்மா கிடக்கும் நிலங்களையும் அவர்கள் விட்டுவிடவில்லை. வெளியூர்களில் இருப்பவர்களின் நிலங்களின் சர்வே நம்பரைப் பயன்படுத்தி குத்தகைக்குச் சாகுபடி செய்கிறோம் என்று கூறி பயிர்க் கடன் வாங்கியுள்ளனர். இது போல பல வழிகளில் மோசடிகள் நடந்துள்ளன. அவர்களின் கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உண்மையான விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை, கடன் தள்ளுபடி பயன்களும் கிடைக்காமல் போகிறது'' என்கிறார்.

 

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர்களுள் ஒருவரான காவிரி தனபாலன் கூறுகையில், "கரோனா, நிவர் மற்றும் புரெவி புயலாலும் மார்கழி மாதம் எதிர்பாராமல் பெய்த தொடர் மழையாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடுமையான மன உளைச்சலில் இருந்தார்கள். பெரும்பாலான விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துவிட்டனர் என்பதை உணர்ந்து, இந்த நேரத்தில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியிருப்பது மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பிற்காக அரசுக்கு நன்றியைக் கூறுகிறோம். ஆனால் உண்மையான விவசாயிகள் பலனடைந்துள்ளார்களா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ததோடு தேசிய மற்றும் வணிக வங்கிகளில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புயல், மழை பாதிப்பு என்பது அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவானதுதான்.

 

தமிழகத்தில் ஒரு கோடி ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கப் பங்களிப்பு என்பது நூறு ஏக்கருக்கு கடன் கேட்டால், 11.33 க்குத்தான் டெல்டாவில் கிடைக்கிறது. மற்ற ஏரியாக்களில் 9 ஏக்கருக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆக 20 சதவிகிதம் மட்டுமே கூட்டுறவு மூலம் கடன் கிடைக்கிறது. அதையும் ஆளும் கட்சியினரே பெற்றுவிடுகின்றனர். மற்ற 80 சதவிகிதம் விவசாயிகள் கந்துவட்டிக் கடை, மற்ற அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற்றுள்ளனர். தற்போதைய அறிவிப்பில் உள்ள 16.43 லட்சம் பேரில் 14 லட்சம் பேர் அ.தி.மு.க.வினரே மறைமுகமாக பலனை அனுபவித்துள்ளனர். மற்ற அனைவருமே கண்ணீர்க் கடலில் மிதக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழக அரசும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்கிறார்.

 

 

Next Story

லஞ்சம் கேட்டதால் விவசாயி தீக்குளிப்பு; தி.மலையில் பரபரப்பு

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
 Farmer tried to set himself on fire after asking for bribe; There is excitement in T. Malai

தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் விவசாயி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் தனது நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

ஊதிரம்பூண்டி கிராமத்தில் விவசாயி ராமகிருஷ்ணனுக்கு நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு ஏக்கரில் ஆட்டுப் பண்ணை வைத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தேவனாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி என்பவரிடம் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிராம நிர்வாக அலுவலர் கிடப்பில் போட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மீண்டும் விவசாயி ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் காந்தியை நேரில் சந்தித்து தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அதெல்லாம் கொடுக்க முடியாது, பணம் தந்தால் தான் வேலை நடக்கும் என சொன்னதோடு ஒருமையில் பேசியதால் மனமுடைந்த விவசாயி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உடலில் தீப்பற்றி எரிந்ததை கண்டு தீயை அணைத்து உடனடியாக வாழையிலை, வாழை சாறு உள்ளிட்டவற்றை உடல் மீது ஊற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விவசாயி ராமகிருஷ்ணன் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி கொடுக்க மறுத்ததால் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் விவசாய நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 வீராணம் ஏரி நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Farmers are happy as Veeranam lake is full

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெருகிறது. 

இதனால் இந்த வட்டப் பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள கீழ் அணையில் தேக்கப்பட்டு அதிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏரி நிரப்பப்படும்.

இந்த ஏரியிலிருந்து தொடர்ந்து தண்ணீர் சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதமாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் கடும் வெயில் காரணமாகவும் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டதாலும் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஏரி வறண்டது. சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிடும் வகையில் தமிழக அரசு சிறப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி கடந்த மாதம் 17ம் தேதி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கீழணைக்கு வந்து சேர்ந்தது. அன்றே கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 

வெள்ளிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பியது. கீழனையில் இருந்து ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி  விஎன்எஸ்எஸ்  வடிகால் மதகு வழியாக விநாடிக்கு150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 9 அடி ஆழம் உள்ள கீழணையில் 4.1 அடி வரை தண்ணீர் உள்ளது. ஏரி நிறைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய பாசனத்திற்கும் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.