Skip to main content

முடிவுக்கு வந்த பங்களாதேஷ் மாணவர் போராட்டம்! - வன்முறைக்குத் திருப்பியது யார்?

பங்களாதேஷில் மேம்பட்ட சாலைப் பாதுகாப்புச் சட்டம் கேட்டு, 
பத்து தினங்களாக நடைபெற்று வந்த மாணவர் போராட்டம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
 

Bangladesh

 

 

 

ஜூலை 29-ஆம் தேதி டாக்காவின் பிரதான விமான நிலைய சாலையில் நடந்த ஒரு சாலை விபத்துதான், நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த ஒரு போராட்டத்தின் தொடக்கம். பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரு பேருந்துகளுக்கு இடையிலான போட்டியில் மாணவன் ஒருவனும் மாணவி ஒருத்தியும் பலியாக, பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தில் இருந்துதான் போராட்ட நெருப்புக்கான பொறி பிறந்தது.
 

 

 

சாலைவிபத்தில் இரண்டு பேர் இறப்பது என்பதென்ன அத்தனை பெரிய சம்பவமா? அப்படி வேறெங்குமே நடப்பதில்லையா என கேட்கலாம். உலக வங்கி அமைப்பு பங்களாதேஷில் ஆண்டுக்கு 4,000 பேர் சாலைவிபத்தில் இறப்பதாகக் கூறுகிறது. 2017-ஆம் ஆண்டில் மட்டும் சாலைவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,397 பேர். உலகத்திலேயே சாலைவிபத்துக்கு பேர்போன மோசமான நாடுகளில் ஒன்றாக பங்களாதேஷ் கருதப்படுகிறது.
 

ஆக, இதற்குமுன்பும் சாலைவிபத்தில் மாணவர்களும், பொதுமக்களும் இறந்துபோயிருப்பதுதான் மாணவர்களைச் சீண்டியது. சாலைவிபத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும் எனக்கேட்டும், போக்குவரத்து, சாலைவிபத்து தொடர்பான சட்டங்களில் திருத்தம் வேண்டுமெனவும் கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டுபவர்கள் முறையான உரிமம் வைத்திருக்கிறார்களா என சோதனையிடும் அளவுக்குச் சென்றனர் மாணவர்கள்.
 

Bangladesh

 

வெகுவேகமாக நாடு முழுவதும் பரவிய இந்தப் போராட்டம் விரைவிலேயே வன்முறையை நோக்கித் திரும்பியது. கடைசி மூன்று நாட்களில் முகத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், போராட்டத்தில் பங்கேற்றோரை தாக்கத் தொடங்கினர். இந்நிலையில் காவல்துறையும் கண்ணீர்ப் புகைக்குண்டு, லத்தி சார்ஜில் இறங்கியது.
 

 

 

இதுவரை நடந்த மோதல்களில் மாணவர்களும் பொதுமக்களும் பத்திரிகையாளர்களுமாக 150 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலை ஐ.நா.வும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கின்றனர். ஆளுங்கட்சியின் கட்சி அலுவலகத்தில் நான்கு மாணவிகளை பிணையக் கைதிகளாக காவல்துறை பிடித்துவைத்திருப்பதாக, பங்களாதேஷ் நடிகை நவ்ஷபா அகமத் வதந்தி பரப்பியதாக, போலீஸ் கைதுசெய்துள்ளது. போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கவந்த பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை மூன்று தினங்களுக்குள் கைதுசெய்யவேண்டுமென அரசுக்கு கெடுவிதித்துள்ளன ஊடக அமைப்புகள். 
 

போராட்டம் முடிவுக்குவருவதை விரும்பாத இடதுசாரி சார்புள்ள மாணவர் இயக்கங்கள், மாணவர்கள்மீதான தாக்குதலைக் கண்டித்து போராட வரும்படி அழைப்புவிடுத்துள்ளதாக அரசு ஆதரவாளர்கள் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர். தலைநகரில் வாரக்கணக்கில் நடக்கும் போராட்டத்தால் ஆளுங்கட்சியின் இமேஜுக்கு பாதிப்பு என இணையத் தொடர்பை துண்டித்துவிட்டு, மாணவர்களின் மீது தாக்குதலில் இறங்கியது ஆளுங்கட்சிதான் என எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது. 

 

Bangladesh


 

 

போக்குவரத்து விதிகளை தெரிந்தே மீறி விபத்துக்கு காரணமாகும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும்படி சட்டத்திருத்தம் செய்யப்படும் என உறுதியளித்து பங்களாதேஷ் பிரதமர் ஹஸீனா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
 

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எந்த நாட்டவரானாலும் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்றுதான். அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும் போராட்டத்தை, வன்முறையாக மாற்றும் வித்தை அரசியல் கட்சிகளுக்கு கைவந்த கலை என்பதை நினைவில் வைத்துக்கொண்டே போராட்டத்தை நடத்துவதுதான் அது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்