Skip to main content

பாலுமகேந்திரா கையில் எடுத்த ஆயுதம்!

Published on 12/02/2020 | Edited on 13/02/2020

 

 

b


கேமரா கவிஞர் என்று கொண்டாப்படும் பாலுமகேந்திரா இலங்கையில் பிறந்த தமிழர்.  ஆனாலும், அவர் ஈழப்பிரச்னை பற்றி எதையும் அவர் தனது படைப்புகளில் பதிவு செய்ய வில்லை என்ற விமர்சனம் உண்டு.   இது குறித்த கேள்வி ஒன்றுக்கு,  ’’பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. ஆனால், அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விசயம் இது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார் தான். அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே?’’என்று பதிலளித்திருக்கிறார். 

 

’’சாவதற்குள் ஈழப்பிரச்சனை பற்றி ஒரு திரைப்படத்தை எடுத்துவிட வேண்டும்.  அதுதான் எனது கடைசி படைப்பாக இருக்க வேண்டும்’’ என்றும் சொல்லிவந்தார்.  அது கடைசிவரை நடக்கவே இல்லை.  

 

சிங்களர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதை சிறு வயதிலேயே அறிந்தவர் பாலுமகேந்திரா. கவிஞர் காசிஆனந்தனும், கேமரா கவிஞர் பாலுமகேந்திராவும் இலங்கை மட்டக்களப்பில் இருந்த போது பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் இணைபிரியா நண்பர்கள். கல்லூரியிலும் இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.  அழியாத கோலங்களில் வரும் மூன்று சிறுவர்களின் ஒருவர் காசி ஆனந்தன் என்று பாலுமகேந்திராவே சொல்லியிருக்கிறார்.

 

b

 

“நானும் பாலுமகேந்திராவும் எங்கள் ஊரில் இனக்கலவரம் பெரிதாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் எங்கள் வீட்டிலிருந்து நான் சைக்கிளை எடுத்துகொண்டு வருவேன்.  நான் ஓட்டுவேன் பின் இருக்கையில் பாலு மகேந்திரா இருப்பார். இருவரும் அப்படித்தான் ஒருநாள் சைக்கிளிலேயே சென்று,  இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது, கொடியேற்றக்கூடாது என்று புறக்கணிப்புப் போராட்டம் செய்தோம். அப்போது ஒரு கல்லூரியில் மட்டும்  கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதை அறிந்த நானும் பாலுவும் அங்கு சைக்கிளில் சென்றோம்.  பாலு மகேந்திரா சைக்கிளில் இருந்து கொண்டே கல்லூரியை நோக்கி கை குண்டை வீசினார்.  கல்லூரி சேதமடைந்து பலர் படுகாயம் அடைந்தனர். அதைப் பற்றி நாங்கள் கவலைப் படவில்லை’’ என்று காசி ஆனந்தன் சொன்னதாக ஒரு பதிவு இருக்கிறது.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இது குறித்து ஒரு விழாவில் பேசியுள்ளார்.


’’நம்பிக்கையோடு இருப்போம்.  தன்னம்பிக்கை ஒளிதான் ஒருநாள் விடியலைத்தரும்’’என்று இனக்கொடுமையிருந்து மீள கடைசிவரை இன உணர்ச்சியாள ராய் பாலுமகேந்திரா இருந்தார் என்பது உண்மையே. 

 

b

 

1939 மே 19 ஆம் நாள் இலங்கையில் மட்டக்களப்பு அருகிலுள்ள அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா, லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை படித்தார். 1971இல் ஒளிப்பதிவுக் கலையில் தங்கப் பதக்கம் பெற்றார்.  அதன் பின்னர்  ’நெல்லு’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார்.  அப்படத்துக்கு 1972 ல் சிறந்த ஒளிப்பதிவுக்கான கேரள மாநில விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

 

மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களுக்கு தொடர்ந்து  ஒளிப்பதிவு செய்தார். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியானது.   கன்னடத்தில் 1977இல் ’கோகிலா’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  தமிழில் 1978ல் ‘அழியாத கோலங்கள்’ மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தார்.   ’’வீடு’, ‘சந்தியாராகம்’, ‘மூன்றாம் பிறை’, ’மூடுபனி’, ‘ரெட்டை வால் குருவி’, ’மறுபடியும்’, ‘ஜூலி கணபதி’, ’வண்ண வண்ண பூக்கள்’ என ரசிகர்களுக்கு நல்ல விருந்து வைத்தவர். 

 

ஊட்டியில் எந்தப்பக்கம் கேமரா வைத்தாலும் அழகாக இருக்கும் என்பார்கள்.  அதிலும், இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்தும் பாலுமகேந்திராவின் படைப்புகளில் ஊட்டியும் ஒரு கதாபாத்திரங்களாகவே இருக்கும்.  

 

b

இந்த ஒளிக்கலைஞரின் ஒளி 13.2.2014 அன்று மறைந்தாலும், திரையுலகில் அவரது படைப்புகள் என்றும் அழியாத கோலங்கள்.

 

Next Story

"பாலுமகேந்திரா தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்திய கருத்து நனவானது" - தமிழக முதல்வருக்கு சீனு ராமசாமி நன்றி

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

seenu ramasamy thanked cm stalin

 

இயக்குநர் சீனுராமசாமி கடைசியாக  விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'மாமனிதன்' படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படம் பல சர்வேதேச திரைப்பட விருதுகளையும் வாங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மாதம்பட்டி ரங்கராஜை வைத்து இயக்கவுள்ளார். இப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ளது. 

 

ad

 

இந்நிலையில் சீனுராமசாமி 'சினிமா ரசனை கல்வி' திட்டத்தினை செயலாற்றியது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு அரசு பாடநூல் தலைவர் ஐ.லியோனி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமா ரசனை கல்வி’ வாழ்வுக்கு நெருக்கமான யதார்த்த சினிமா. நம்மை உயர்த்தும் ரசனையில் மேம்பட வைக்கும் சினிமா கலையை மாணவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இயக்குநர் பாலுமகேந்திரா சினிமா ரசனைக் கல்வியைத் தொடங்க வேண்டுமென தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார். நானும், நாங்களும் இக்கருத்தினை வலியுறுத்தினோம். இன்று அது நனவானது.

 

நல்ல சினிமாவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாகப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக தமிழக அரசுப் பள்ளியான சென்னை, விருகம்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் மாதந்தோறும் ஒளிபரப்பப்படுகிறது. சினிமா வாயிலாகக் குழந்தைகளை ஆளுமைத் திறன் மிக்கவர்களாகத் திகழ வைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் என என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

“அவங்க இரண்டு பேர் இல்ல, அடுத்து நான்தான்”- நண்பர்களை நினைத்து கலங்கிய பாரதிராஜா

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பல படங்களில் வில்லன், முக்கிய கதாபாத்திரம் என்று அசத்திக்கொண்டிருக்கிறார் பாரதிராஜா.
 

barathiraja

 

 

இந்நிலையில் மீண்டும் ஒரு மரியாதை என்றொரு படத்தை பாரதிராஜா பல வருடங்கள் கழித்து இயக்கி, நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து நமக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “பாலுமகேந்திரா, பாலச்சந்தர் இவர்களுடலான உங்களுடைய கலந்துரையாடல் எப்படி இருக்கும்? ”என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாரதிராஜா, “இது கேட்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. அவர்களை பின்னோக்கி பார்க்கும்போது, நான் உணர்ச்சி வசப்படுகிறேன். அவர்களெல்லாம் போய்விட்டார்கள் என்று யோசிக்கும்போது கஷ்டமாக இருக்கும். அடுத்தது நானாக இருப்பேன். 

பாலுமகேந்திரா என்னுடைய நண்பன் ‘பாலு’ என்று நான் அழைப்பேன்,  ‘பாரதி’ என்று அழைப்பார். என்னை தமிழ் சினிமா துறையில் பாரதி என்று அழைப்பவர்கள் பாலச்சந்தர், பாலுமகேந்திரா, செல்வராஜ் என்ற எழுத்தாளர் இவர்கள்தான். மற்றவர்களெல்லாம் இயக்குனர் சார் என்பார்கள் இல்லையென்றால் அப்பா என்று அழைப்பார்கள். 

நானும் பாலு சாரும் ரொம்ப காமெடியா பேசிப்போம், நீங்கள் முதலில் போவீர்களா? இல்லை நான் போவேனா பாரதி என்று கேட்பார். அதற்கு நான், நம்ப இருவரில் யார் முதலில் போவார்கள் என்று தெரியாது. நீங்கள் முதலில் போனால் ஈமைச் சடங்கிற்கு கண்டிப்பாக வருவேன். உங்களுடைய சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் வித்தியாசப்படும், அதற்கு உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், நான் உங்களை கண்டிப்பாக தோளில் சுமப்பேன் என்று சொன்னேன். 

அவர் உடல்நிலை சரியில்லாதபோது அவரை சந்தித்துவிட்டு இறைவனை பார்த்து அவர் உயிருடன் இருந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டேன். அந்த சமயம் பார்த்து நான் கொழும்பு வரை சென்றிருந்தேன். அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வந்தவுடன் எப்படியோ விமானத்தை பிடித்து, இங்கு வந்துவிட்டேன். பெசன் நகருக்கு எடுத்து சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள். எப்படியோ தோளில் ஒரு முறை சுமந்து, அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என்றார்.