/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/611_8.jpg)
தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி.யாக இருந்த ஜாஃபர் சேட், சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார் பிரதீப் பிலிப்!
ஜாஃபர்சேட்டின் இந்த இடமாற்றம் தான் ஐ.பி.எஸ்.வட்டாரங்களில் இப்போதும் பேசுபொருளாக விவாதிக்கப்படும் சூழலில், இதன் பின்னணிகள் குறித்து தமிழக உளவுத்துறை மற்றும் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’தமிழக சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.யாக ஆக வேண்டும் என்பதுதான் ஜாபர் சேட்டின் கனவாக இருந்தது. இதற்காக, பல லாபிகள் மூலம் கடந்த காலங்களில் முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்கவில்லை. சட்ட ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியை டிக் அடித்தது மத்திய அரசு.
அதேசமயம் முதல்வர் எடப்பாடியிடம் மிக அதிகளவில் நெருங்கியிருந்தார் ஜாஃபர். அதனால், சி.பி.சி.ஐ.டி. டிஜிபியாக பவர் ஃபுல் போஸ்டிங்கில் ஜாஃபர் நியமிக்கப்பட்டார். அப்படிப்பட்டவரை, திடீரென டம்மி போஸ்டிங்கிற்கு தூக்கியடிக்கப்பட்டது ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அதிர்ச்சிதான். இதற்கு காரணம், எடப்பாடிக்கு கொடுத்திருந்த சில உத்தரவாதத்தை அவர் நிறைவேற்றவில்லை என்பதுதான்.
அதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீதான புகார்களை வழக்காக மாற்றி திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சி தலைமை விரும்பியதை செயல்படுத்த ஜாஃபர் ஒப்புக்கொண்டு அதற்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில்தான் ஜாஃபருக்கு எதிராக இருந்த பிரச்சனைகளை சரிசெய்து, சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி.யாக கொண்டு வந்தார் எடப்பாடி. ஆனால், சொன்னபடி அவரால் முடியவில்லை.
குறைந்தபட்சம், திமுக எம்.எல்.ஏ.க்களான மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கில் கூட அவர்களை கைது செய்ய முடியவில்லை. இதனால் ஜாஃபர் மீது முதல்வருக்கு அதிர்ப்தி இருந்தது. இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட உயரதிகாரி ஒருவர், ’திமுகவுக்கும் தனக்கும் நெருக்கமில்லை என உங்களிடம் ஜாஃபர் சொன்னதெல்லாம் பொய். இப்போதும் திமுக தலைமைக்கு வேண்டப்பட்டவராகத்தான் இருக்கிறார். திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான பிரச்சனைகளை முன்கூட்டியே திமுக தலைமைக்கு தெரியப்படுத்தி விடுகிறார் அவர்.
உங்கள் ஆட்சியின் ஊழல்களை மாவட்டம் தோறும் எடுப்பதற்காக திமுகவில் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் ஸ்டாலின். அதற்கு, சி.பி.சி.ஐ.டி. அதிகாரி என்கிற வகையில் பல ரூபத்திலும் உதவுவதாகவும் திமுக தலைமைக்கு சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்டவரை வைத்துக்கொண்டு திமுகவுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் சி.பி.சி.ஐ.டி. மூலம் உங்களால் எடுக்க முடியாது என ஏகத்துக்கும் போட்டுக்கொடுத்துள்ளார் அந்த உயரதிகாரி. இதனையடுத்தே முக்கியத்துவமில்லாத போஸ்டிங்கிற்கு தூக்கியடிக்கப்பட்டார் ஜாஃபர் ‘’ என்கிறார்கள் உளவுத்துறையினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)