Advertisment

பாபர்மசூதி இடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்கிறீர்களா? வாஜ்பாய் பதில் - பகுதி 2

 vajpayee

இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது. தேசிய ஏடுகள் தவிர, வேறு எந்த மாநில மொழி ஏட்டிற்கும் பிரதமர் வாஜ்பாய் அதுவரை சிறப்பு பேட்டி அளித்ததில்லை. 1998 செப்டம்பரில் முதல்முறையாக நக்கீரனுக்கு பேட்டியளித்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Advertisment

நக்கீரன் : நீங்கள் ஒரு கூட்டணி அரசை அமைக்கத் தேவையான ஆதரவை கடந்த பாராளுமான்ற தேர்தலின்போது தமிழ்நாடு தான் தந்தது. இந்த நிலைமைகளுக்கு நேரெதிராக இன்று உங்கள் அரசுக்கான ஆபத்தும் தமிழக்கத்திலிருந்துதான் கிளம்பியிருப்பது போல் தெரிகிறது. தமிழகத்தில் இருந்து முளைவிட்டிருக்கும் நடவடிக்கைகள் இங்கே உங்களின் இமேஜை களங்கப்படுத்தியிருக்கிற நிலையில்... இந்த சூழலை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் ?

Advertisment

வாஜ்பாய் : பா.ஜ.க தலைமையில் மத்தியில் ஒரு கூட்டணி அரசு உருவாக தமிழக மக்கள் அளித்த மகத்தான வெற்றியை மறக்கமுடியாது. தமிழ்நாடு அரசியல் நிலைமைகள் காரணமாக எனது அரசுக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் உறவு பற்றி நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். எங்கள் கூட்டணியில் டாக்டர் ஜெயலலிதா மிகவும் முக்கியமான ஒரு உறுப்பினர்; எங்களிடையே ஏற்படும் எந்த ஒரு பிரச்னையானாலும், அவைகளை பேச்சு வார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொண்டுவிட முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனி ஒரு கட்சியின் ஆட்சி என்ற கட்டத்திலிருந்து மாறி பல்வேறு கட்சிகள் இடம் பெரும் கூட்டணி அரசு என்கிற புதியதோர் யுகம் இபோது இந்தியாவில் பிறந்திருக்கிறது. கூட்டணி அரசியலுக்கு நாம் எல்லாருமே புதியவர்கள்; போதுமான பழக்கமோ பயிற்சியோ இல்லாதவர்கள். நமது ஜனநாயக அனுபவங்களும் பரி சோதனைகளும் புதியதோர் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் புகுந்திருக்கும் நேரம் இது.

வேறு எதையும்விட அரசின் ஸ்திரத்தன்மையே இப்போது மிகவும் முக்கியமாகி இருக்கிறது. நமது நாடு சகலத்துறைகளிலும் வளர்ச்சி பெற்று, ஏழை எளியமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும்; வளப்படுத்த வேண்டும்; நமது நாட்டின் சகல பகுதிகளும் குறிப்பாகப் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பகுதிகள் உட்பட முன்னேற்றம் பெற வேண்டும் என்றெல்லாம் நாம் அனைவரும் காணும் கனவுகள் நனவாக மத்திய அரசின் ஸ்திரத்தன்மை மிகமிக அவசியமாகிறது.

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த நிலைப்புத்தன்மை வாய்ந்த கூட்டணி தேவை. நம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததின் மூலம், நம்மை ஆட்சிபீடத்தில் அமர்த்திய மக்களின் ஆசைகளையும் எதிர்ப்புகளையும் நிறைவேற்றி வைக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு!.

மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்கு ஆளும் கட்சி மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் சில அடிப்படை நெறிமுறைகளை கடைபிடிக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் மக்கள் நல்வாழ்வு முன்னேற்றம் என்கிற இலட்சியம் நிறைவேறும்.

நக்கீரன் : மத்திய மாநில அரசுகளிடையே சுமுகமான உறவு நிலவ வேண்டும் என்பதில் தமிழக மக்கள் எப்போதுமே அக்கறைகாட்டி வருகிறார்கள்; இந்த விஷயத்தில் உங்களது அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்கும் ?

வாஜ்பாய் : நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு கட்சியின் ஆட்சி ஆதிக்கம் என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும், கொள்கைகளிலும், நடை முறைகளிலும் வித்தியாசம் கொண்ட பல கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அரசுகளை நடத்தவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

மத்தியில் எந்தக் கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது; மாநிலங்களின் ஆட்சியில் அங்கம்வகிக்கும் கட்சிகள் எவை என்கிற வித்தியாசங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைப்பது என்ற உயர்ந்த மனோ பாவத்துடன் தேசிய உணர்வுகளுடன் செயல்பட்டால் நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளையும் சிக்கல்களையும்கூட எளிதில் தீர்த்துவிடமுடியும்.

இத்தகைய எங்களது அணுகுமுறைக்கு காவிரி நதிநீர்ப் பங்கீடு பற்றிய பிரச்சனையில் ஏற்பட்ட உடன்பாடு மிகசிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. காவிரி உடன்பாட்டிற்கு தமிழக மக்கள் தந்த ஆதரவை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.

நக்கீரன் : மொரார்ஜி அரசில் பங்கு வகிப்பதற்கு முன்பு, உங்கள் கட்சி 'ஜனசங்' என்ற பெயரில் இயங்கிவந்தது. அந்த 1970களில் ஜனசங்கமாக இருந்தகாலத்தில் "மத்தியில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு நமது கட்சி வளர்ச்சி பெறும்" என்று நீங்கள் எதிர்பார்த்ததுண்டா ?

வாஜ்பாய் : எங்கள் கட்சி மகத்தான வளர்ச்சியைப் பெறும் என்று நம்பியது மட்டுமில்லை; ஒரு நாள் இந்த நாட்டையே ஆளுகின்ற பொறுப்பை மக்கள் எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றும் நான் அன்றே உறுதியாக நம்பினேன். நீங்கள் குறிப்பிடுகிற பாரதிய ஜனசங் 1951 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1977ல் மத்தியில் ஜனதா கட்சியின் ஆட்சி ஏற்பட்டபோது. அது ஜனதா கட்சியுடன் இணைக்குப் பட்டுவிட்டது. அந்தக் காலகட்டத்தில் எல்லாம் காங்கிரசின் ஆதிக்கம் 'தகர்க்க முடியாதது' என்று அனைவரும் பிரமிக்கும் அளவுக்கு இருந்தது.

எனினும் பண்டித தீனதயாள் உபாத்யாயா அவர்களால் தேசியக் கட்சியாக உருவாக்கப்பட்ட எங்களது அமைப்பு முழுக்க முழுக்க மனித நேயத்தையே அடிப்படையாகக் கொண்டது; உயர்ந்த கொள்கையுடனும் ஒழுக்கநெறிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் உருவாக்கப்பட்ட எங்கள் கட்சி தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பலம் வாய்ந்த இயக்கமாக செயல்பட்டதைக் கண்டபோதே "இந்தக் கட்சி எதிர்காலத்தில் மிக சக்தி வாய்ந்த கட்சியாக வளரும்" என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது எனக்கு.

மொரார்ஜி தேசாயின் ஜனதா அரசில் அங்கம்வகித்த பல்வேறு கட்சிகளிலும்கூட எங்களது ஜனசங்கம் தான் மிகப்பெரிய எண்ணிக்கைக் கொண்ட கட்சியாக விளங்கியது என்பதை இந்த இடத்தில குறிப்பிடாமல் இருக்கமுடியாது.

அப்போது நிலவிய அந்த பலம்தான் பின்னர் 1980களிலும் தொண்ணூறுகளிலும் பாரதிய ஜனதா கட்சியின் மகத்தான வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமைந்தது எனலாம்.

நக்கீரன் : பாபர்மசூதி இடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

வாஜ்பாய் : பாபர்மசூதி இடிக்கப்பட்ட 1992ல் மட்டுமல்ல; இன்றும் எப்போதும் என் கருத்து அது வருந்தத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது என்பதுதான். அந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்பது மட்டுமின்றி நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கவும் கூடாது. அத்தகைய சம்பவங்கள் இந்தப் புனித பூமியில் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதும் எனது திடமான கருத்து.

அதேசமயம் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களும் பிறமதத்தினரின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும். பண்டுதொட்டு நிலவிவரும் நமது தேசிய பாரம்பர்யப் பெருமைகளையும் அதன் அடையாளச் சின்னங்களையும் நாம் எல்லோரும் மதிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்தகைய சச்சரவுக்கிடமான உணர்ச்சிவசப்படுதலுக்கு இடமளிக்கக்கூடிய விஷயங்களை நாட்டுமக்கள் அனைவரும் ஒருவரைவொருவர் மதித்து அவரவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுக்கும் மனோபாவத்துடன் அணுகுவதே சரியான தீர்வளிப்பதாக அமையும். எந்த ஒரு சமூகத்தினரானாலும் சரி; அல்லது எந்த ஒரு கட்சியானாலும் சரி; சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. உலகில் ஏற்படும் எந்தப் பிரச்னையானால்தான் என்ன ? பொறுமையுடன் நடத்தப்படும் நேர்மை மிக்க பேச்சு வார்த்தைகள் மூலம் நிச்சயம் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

நக்கீரன் : 1984 பொதுத் தேர்தல் முடிவில் உங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு பாராளுமன்றத்தில் இரண்டே இரண்டு இடங்கள்தானே கிடைத்தன? அப்போது கட்சியின் எதிர்கால வளர்ச்சி குறித்து நீங்கள் என்ன நினைத்தீர்கள் ?

வாஜ்பாய் : அந்தத் தேர்தல் ஒரு அசாதாரணமான விஷேச சூழ்நிலையில் நடைபெற்ற தேர்தல். இந்திராகாந்தி சுடப்பட்டபின் எழுந்த துயரமிகுந்த நாட்களில் நடைபெற்ற தேர்தல் அது. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் பெருத்த அளவில் அனுதாப அலை உருவாகியிருந்தது. அந்த அனுதாப அலை காரணமாக நானும்கூட அந்தத் தேர்தலில் தோற்றுப் போனேன். எனினும் அது தற்காலிகமான நிலவரம் என்றுதான் நான் கருதினேனே தவிர, கட்சியின் எதிர்கால வளர்ச்சி பற்றி அந்த தேர்தலில் என் மனதில் எந்தவித சந்தேகத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை.

நக்கீரன் : உங்களது பழைய கட்சியான ஜனசங்கத்திற்கும் இன்றைய புதிய கட்சியான பாரதிய ஜனதாவுக்கு இடையில் பெரிய அளவிற்கு ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

வாஜ்பாய் : வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் மாறுதல் என்பது எப்போதும் நிகழ்ந்தபடியே இருக்கிறது; அரசியலும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசியலிலும் மாறுதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எந்த அமைப்பானாலும் அது தொடர்ந்து நிலைத்திருக்கவும் மேலும் மேலும் வளர்ச்சியடையவும் அதற்கு உயர்ந்த கொள்கைகள் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு அந்தக் கொள்கைகளை அமல் நடத்துவதில் காலந்தோறும் ஏற்படும் மாறுதல்களை கவனத்தில் கொண்டு செயல்படுவதும் மிகவும் முக்கியமாகிறது.

காலமாறுதல்கள் புதிய சூழ்நிலை ஆகியவைகளையொட்டியே ஜனசங்கமும் பா.ஜ.க.வும் தங்களது கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான செயல்பாடுகளை வகுத்துக்கொண்டன. ஜனசங்கமாக இருந்தபோதைக் காட்டிலும் இப்போது எங்கள் பா.ஜ.க. ஜனசங்கம் கால்பதிக்காத நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வளர்ச்சிபெற்றிருக்கிறது. பல்வேறு தரப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த மக்களிடமும் பரவி அவர்களது ஆதரவை பெற்றிருக்கிறது. சுருங்கச்சொன்னால் ஜனசங்க காலத்தைவிட பா.ஜ.க.வின் வளர்ச்சி பன்மடங்கு அதிகமானது.

vajpayee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe