Skip to main content

அயனாவரம் சிறுமி ‘வன்புணர்வு’!  உண்மையை ஒத்துக்கொண்ட அந்த நான்கு பேர்!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
c321


சென்னை அயனாவரத்தில் அப்பார்ட்மெண்டில் வசித்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதான 17 பேரில் நான்கு பேர் பல்வேறு சூழல்களில்  ‘பாலியல் வன்புணர்வு’  செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

கடந்த ஜூலை 15 ந் தேதி சிறுமியின் தாய் கமிஷனர் அலுவலகத்தில் எழுதிக்கொடுத்த புகாரின்படி அதிரடியாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா, அபார்ட்மெண்டில் வேலை செய்துவந்த லிஃப்ட் ஆபரேட்டர், ப்ளம்பர், செக்யூரிட்டி உள்ளிட்ட 17க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தார். 
 

அதற்குப்பிறகு, சிறுமிக்கு அரசு கே.எம்.சி. மருத்துவமனையில் இரண்டுமுறை உடல்-மன ரீதியான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. தடயங்களை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட 17 பேரையும் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறது காவல்துறை.

 

​    ​child


 

இதில், ஒரு சிலர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று வாக்குமூலம் கொடுத்ததோடு சிறையில் தற்கொலை செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், அயனாவரத்தை சேர்ந்த லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், கொளத்தூரைச் சேர்ந்த ப்ளம்பர் சுரேஷ், செக்யூரிட்டி அபிஷேக் உள்ளிட்டவர்கள் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உண்மைதான் என்று தற்போது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். 
 

மேலும், இவர்களுடன் இணைந்து யார் யார் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்பதை விசாரித்துக்கொண்டிருக்கும் காவல்துறையோ, “சிறுமியின் பெற்றோர் வளர்ப்பு பெற்றோர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரித்து அறிக்கை கொடுக்கவேண்டிய குழந்தைகள் நலக்குழுமத்திடமே சிறுமியை பேசவிடாமல் தடுத்துவிட்டார் அப்பா. அதனால், இச்சிறுமியின் வளர்ப்பு  பெற்றோர்களிடமும் விசாரணை நடத்த இருக்கிறோம்” என்கிறார்கள்.
 

இதுகுறித்து, அயனாவரம் மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகாவை தொடர்புகொண்டபோதும், மெசேஜ் அனுப்பியபோதும் லைனில் வரவில்லை. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ரவிக்குமார் 20 வருடங்களுக்கு முன்பே தனது வீட்டில் குடியிருந்த தம்பதியின் 5 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ததையும் அது ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் ஆகி சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள் என்பதையும் நக்கீரன் தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமியை சீரழித்த கொடூரன்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்.     
 

 

 

 


                -