Skip to main content

அதிமுகவின் பிளவு... ஆட்டோசங்கருக்கு லாபம்! - ஆட்டோசங்கர் #9  

Published on 24/06/2018 | Edited on 30/06/2018
auto sankar 9அந்த அதிகாரிக்குத் தங்கய்யா என்பதற்குப் பதில் தகரய்யா என்று பெயர் வைத்திருக்கலாமோ!'. மனசுக்குள் அருவருப்பு. விபச்சாரத் தொழிலை   நான் நடத்துவதாவது? குமட்டிக்கொண்டு வந்தது! போலீஸ் அதிகாரி பேசினது நெஞ்சுள் நெருப்பு மூட்டினது. கொடிய விஷம் கொண்ட பாம்பை 'நல்ல (!) பாம்பு' என்பது மாதிரிதானோ தீயவர்களை உற்பத்தி பண்ணும் கொடிய ஸ்தலத்தை காவல்(?)துறை என்பதும்?

போலீசே ஆரம்பத்திலே இரண்டு பெண்களைக் "கருணையோடு' தந்து கலர்ஃபுல் தொழிலுக்கு உதவி புரிந்தது. போதையில்லாமலே தலை சுற்றினது. அந்த இரண்டு பெண்கள் உதவியுடன் தேடினோம். ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் இரண்டு பெண்கள்  கிடைத்தார்கள், பெத்தடின் ஊசிக்காக... வழி தவறிப்போன இவர்களோடு இரண்டு, மெள்ள நான்கானது. அப்புறம் எண்ணிக்கை பத்தானது... 88ஆம் வருடம் நான் கைது செய்யப்பட்டபோது என் வசம் இருந்த பலான பெண்கள் இருபத்தி ஐந்து பேர்கள்! வந்து போனவர்கள் எண்ணிக்கை பல  நூறுகள்.

 

 


உபத்திரா தேவி! பெயருக்கு ஏற்ப பார்ப்பவர் மனசை உபத்திரவம் செய்கிற பேரழகி... என்னிடம் இருந்த பெண்களில் ஒருத்தி! நெஞ்சைச் சீண்டுகிற அழகு; சிரிக்கும்போது தென்படும் அடுக்கு தவறாத பல்வரிசை அவள் எழிலுக்கு ஜீவன். அந்த உபத்திராதேவி சுடலையின் மனதை ரொம்பவும்  சோதித்திருக்கிறாள். தனது காதலை அவளிடம் சொல்வதா, வேண்டாமா? - சுடலையின் மனதுக்கும் மனசாட்சிக்கும் மத்தியில் மல்யுத்தமே  நடந்திருக்கிறது. ஒரு நாள் தயங்கித் தயங்கி சொல்லியே விட்டான் சுடலை.

 

 

sudalai"உ... உபத்திரா ஒன்று சொன்னா கோவிச்சுக்க மாட்டியே..?''

அவள் குறும்பாகச் சிரித்தாளாம்.

"கோவிச்சிக்கிற மாதிரி எதுவும் சொல்ல மாட்டீங்களே?''

அவன் காதலை தெரிவிக்க விழுந்து விழுந்து சிரித்த அவள்,

"காதலிக்கிறீங்களா...! என்னையா? நல்லகூத்து!''

"விளையாட்டா தெரியுது உனக்கு! நான் சீரியஸா சொல்றேன்!''

அவளை மெள்ள மெள்ள மூளைச் சலவை செய்திருக்கிறான் சுடலை.

"அதெல்லாம் சரி... நான் எப்படி இங்கேயிருந்து வரமுடியும்? ஐயாயிரம் ரூவா அட்வான்ஸ் வேற சங்கரண்ணா கிட்ட வாங்கியிருக்கேன். அதைக் கழிக்காம எப்படி வரமுடியும்?''

"சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிடுவோம்''

"வெளியே போய் பிழைக்கிறதுக்கு பணம்?''

"திருட வேண்டியதுதான்... சங்கர்கிட்டேயிருந்து!'' என்று நன்றி மறந்து சொல்லியிருக்கிறான் சுடலை. இதெல்லாம் எனக்கு அப்போது தெரியவே தெரியாது.

 

 


தெரிந்திருந்தால் விபச்சாரத் தொழிலுக்கு இறக்கிய போலீஸ் அதிகாரிக்கு ராகம் தாளத்தோடு பல்லவியும் தேவைப்பட்டதால் அந்த நடிகையை  ஏற்பாடு செய்வதற்காக சுடலையைக் கூப்பிட்டிருப்பேனா?

"அவளுக்கு ரேட் என்ன?''

"பத்தாயிரம் ரூபா''

"சரி... நீ போய் பணம் கொடுத்து அவளை சவேரா ஓட்டலுக்கு நாளைக்கு வரச்சொல்லிடு!'' என்றேன் சுடலையிடம். சுடலையின் கண்களில் சந்தோஷச்சுடர் தெரிந்ததை கவனிக்கத் தவறிவிட்டேன்.

 

 

mgr deathசுடலை பணத்தைத் திருடிக்கொண்டு ஓடினதைவிட, என்னிடமிருந்த ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு சென்றதைவிட, அதிகாரிக்கு நடிகை  அனுப்பப்பட்டிருக்க வேண்டிய கடமையில் மண் விழுந்து கெட்டபெயராகிவிட்டதே என்ற ஆத்திரம். "ராஸ்கல்... அவனைத் தேடுங்கடா...' என  எடுபிடிகளுக்குக் கட்டளையிடத்தான் முடிந்தது.

பாபுவின் தலைமையில் ஒரு பட்டாளம் எங்கெங்கோ தேடிற்று. சுடலையைப் பிடிப்பதில் என்னைவிட தீவிர ஆர்வமாயிருந்தான் பாபு. பாபுவுக்கும்  சுடலைக்கும் சாதாரணமாகவே அடிக்கடி உரசல் வரும். முதல் தளபதியாக இருப்பது யார் என்பதில் பதவிச் சண்டை... இப்போது சுடலை பொது எதிரி. என்னைவிட அவனோட கணக்கைத் தீர்த்துக்கொள்ள துடித்தான். எவ்வளவு தேடியும் சுடலை கிடைத்தபாடில்லை!

எம்.ஜி.ஆர். மரணத்தின்போது தமிழ்நாடே திமிலோகப் பட்டது. அரசியல் சதுரங்கத்தில் கன்னா பின்னாவென காய் நகர்ந்தது. ரெண்டு பக்கமும் 'ராணிகளின்' ராட்சத ஆட்டம்! எம்.எல்.ஏ.க்களை பங்கு போட்டுக்கொள்வதில் பயங்கர அமளிதுமளி. ஆர்.எம்.வீ. தொண்ணூறுக்கு மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர ஓட்டல்களில் கட்டிக்காத்தார். மற்றொருபுறம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கோஷ்டி. பணம் தண்ணீராக வாரியிறைக்கப்பட்டது.

 

 


நேற்றுவரை ஒரே தலைமையின் கீழ் இயங்கிய ரத்தத்தின் ரத்தங்கள் இன்று வேண்டாதவர்களாகிப் போனார்கள். ஒருவர் மீது மற்றவர் அழுக்கு அறிக்கைகளை வாரி இறைத்தனர். அந்த யுத்தகளத்தில் ஒரேயொருவரை ரெண்டு கோஷ்டியிலுமே மதித்தனர். அந்த நபரைப் பார்த்ததும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடினர். ரெண்டு பக்கமும் வேண்டியவரான அந்த நபர்...? அடுத்த பகுதியில் சொல்கிறேன்... 

முந்தைய பகுதி:

விலை மாதுக்களை காக்கப் போய், நான் விபச்சாரியான கதை... ஆட்டோ சங்கர் #8

அடுத்த பகுதி:

"எங்களை மனுஷங்ககிட்ட அனுப்புங்க அண்ணா..." - கதறிய விலைமாது! - ஆட்டோ சங்கர் #10 

  

 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Former Minister MR Vijayabaskar appears in court

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். 

Former Minister MR Vijayabaskar appears in court

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே பிரகாஷ் வாங்கல் காவல் நிலையத்தில் ஏற்கனவே  எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர்  மீது அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (19.07.2024) ஆஜர்படுத்தப்பட்டார். 

Next Story

‘போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Government should take action on time basis EPS Emphasis

கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை சிரமத்திற்குள்ளாக்கி தனது நிர்வாகத் திறமையின்மையை நாள்தோறும் வெளிக்காட்டி வருகிறார். கடந்த மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியில் நடைபெறக்கூடிய சமூக விரோதச் செயல்களை சுட்டிக்காட்டினால், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  நான் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்த பின்னரும் காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல் வைத்திருப்பது, நாள்தோறும் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களின் மூலம் நிரூபணமாகிறது.

யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை. ஆனால், திமுக ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில்கூட 'நாங்கள்தான் செய்தோம்' என்று தானாகவே முன்வந்து சிலர் சரணடைந்துள்ளதும், அதில் ஒருவரைச் சென்னை மாநகர் காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும். 

Government should take action on time basis EPS Emphasis

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும்.

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும்; பிப்ரவரி மாதம் 64 கொலைகளும்; மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும்; மே மாதம் 130 கொலைகளும்; ஜூன் மாதம் 104 கொலைகளும்; ஜூலை 17-ஆம் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது மதுரையில் 40 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 35யும், விருதுநகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

Government should take action on time basis EPS Emphasis

'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இருமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன். கையில் அதிகாரம் இருக்கிறது என்ற மமதையில் தொடர்ந்து காவல் துறையை தங்களின் சுயநலத்திற்காக இந்த ஆட்சியாளர்கள் ஏவல் துறையாக பயன்படுத்துவார்களேயானால், 'அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாகும்' என்பதை நினைவூட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.