Advertisment

"சட்டமன்ற விடுதியிலிருந்து விடைபெறும் போது..." - மு.தமிமுன் அன்சாரி MLA.,

ttttt

Advertisment

மறக்க முடியாத பல அனுபவங்களுடன் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து இன்று (28.04.2021) விடைபெறுகிறேன்!

சென்னை புதுக்கல்லூரியில் பயின்றபோது, அந்த மாணவர் விடுதி எனக்கு ஒரு போதி மரமாக இருந்தது,

கல்வி, மார்க்கம், இலக்கியம், அரசியல், போராட்டம் ஆகியவற்றை அந்த பாசறையில் விவாதங்களாக ஆக்கி என்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள அந்த நாட்கள் உதவியது.

Advertisment

2016, மே மாதம் நான் சட்டமன்ற உறுப்பினராகி வந்ததும், இந்த விடுதியில் B-கட்டிட தொகுப்பில், 9-மாடியில் D-அறையில் தங்கினேன்.

ttttt

ஐந்து ஆண்டுகால அனுபவங்களுடன், இன்று எனது உடைமைகளை எடுத்து கொண்டு, சாவியை ஒப்படைத்தபோது ஏதேதோ எண்ண அலைகள் என் மனதில் மோதியது.

அங்கு 2-ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட ஒரு சிறிய நூலகத்தை ஏற்படுத்தி இருந்தேன். அதைக் கலைத்து புத்தகங்களை அட்டைப் பெட்டிகளில் அடுக்கியபோது, அதுதான் எனது மொத்த உடைமைகளில் 80% சதவீதமாக இருந்தது.

இந்த விடுதி வளாக அறைகளில். என் அறையில் மட்டும்தான் நூலகம் இயங்கியது. பல கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வருகைதந்து, நூல்களை எடுத்துச் செல்வார்கள்.

அங்கு வருகை தரும் மற்ற பலரும் நூல்களை பார்வையிட்டு, அதில் தங்களுக்கு பிடித்தவற்றை படம் எடுத்துக்கொண்டு, அதை வாங்கும் நோக்கில் விபரங்களை குறித்துக் கொள்வார்கள்.

இந்த அறைக்கு பல MLA நண்பர்கள் சுலைமானி (பால் கலக்காத இளகிய தேனீர்) அருந்த விரும்பி வருவார்கள். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்து விட்டு செல்வார்கள்.

நண்பர்கள் தனியரசு, கருணாஸ் ஆகியோர் அதிக நேரங்களை செலவிட்டதும் இந்த அறையில்தான்.

எத்தனையோ அரசியல், சமூக, இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள், தொண்டு இயக்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகள், தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இங்கு வந்து உரையாடி சென்றிருக்கிறார்கள்.

தேசிய, சர்வதேச பிரச்சினைகள், திராவிட இயக்கம், தமிழ் தேசியம், ஃபாசிச அபாயம், சமூக நீதி ஆகியவை குறித்த விவாதங்கள் இங்கு நிறைய நடந்திருக்கிறது.

பல மக்கள் போராட்டங்கள் தீர்மானிக்கப்பட்டதில் இந்த அறைக்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக காவிரி விவகாரம் பற்றியெறிந்தப்போது, சென்னையில் IPL கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற முற்றுகை போராட்டத்தின் 'கரு' இங்குதான் முடுக்கிவிடப்பட்டது. அது நாட்டையே உலுக்கியதை அனைவரும் அறிவர்.

பல அரசாணைகளை வெளியிட வைத்த பத்திரிக்கை அறிக்கைகளும், சட்டமன்ற உரைகளும் இந்த விடுதியில் தான் எழுதப்பட்டது.

அதில் ஒன்று, டெல்லியில் உள்ள தமிழ் நாடு இல்லங்களின் பெயரை மாற்றிய தகவல் வந்த அரை மணி நேரத்தில் மூவர் அணி சார்பில் நானும், தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளியிட்ட கண்டன அறிக்கையாகும்.

அந்த அறிக்கை ஏற்படுத்திய அதிர்வால் அடுத்த சில மணி நேரங்களில் அந்த பெயர் மாற்றும் முடிவு திரும்ப பெறப்பட்டது.

தமிழக அரசியலை உலுக்கிய பல பேட்டிகள் இங்குதான் எடுக்கப்பட்டன. அதனாலேயே இனி விடுதியில் யாரும் பேட்டி அளிக்க கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ttttt

'நீட்' தேர்வுக்கு எதிராக அன்புத் தங்கை அனிதா இந்த அறைக்கு தன் தோழிகளுடன் வந்து, இரத்தத்தால் கையெழுத்திட்ட பதாகையை தந்து கண்ணீருடன் உரையாடியதை மறக்கவே முடியாது.

பல பத்திரிக்கை நண்பர்கள், படைப்பாளிகள், திரைக் கலைஞர்கள், அரசியல் புள்ளிகள், சமுதாய பிரமுகர்கள் இங்கு வந்து உரையாடி , தங்களது பல ஆலோசனைகளை தந்து சென்றிருக்கிறார்கள்.

எத்தனையோ விளிம்புநிலை மக்கள், ஆதரவற்றவர்கள், போராடி களைத்து போனவர்கள் உரிமையுடன் இங்கு வந்து கதவை தட்டி தங்களது கோரிக்கை மனுக்களை கையில் அளித்திருக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு வருபவர்கள், வெளியூர்களில் இருந்து வேலைக்கு நேர்காணல் வருபவர்கள், தூரப் பகுதிகளிலிருந்து தேர்வு எழுத வரும் மாணவர்கள், வெளிநாடு புறப்பட விமான நிலையம் செல்லும் முன்பு ஓய்வெடுக்க விரும்புபவர்கள் என பலரும் மஜக-வினரின் பரிந்துரையோடு வந்து தங்கி விட்டு சென்றிருக்கிறார்கள்.

தொகுதிவாசிகள், மஜக-வினர் மட்டுமின்றி, பலரும் தங்கி பயனடைந்த அன்பின் இல்லமாகவே இது திகழ்ந்தது.

மக்களுக்கு குரல் கொடுக்கும் களப் போராளிகள் இந்த விடுதிக்கு அவ்வளவாக வந்ததில்லை, வர விரும்புவதும் இல்லை, நான் அவர்களை எல்லாம் அழைத்து வந்து இங்கு உரையாடுவது உண்டு.

அவர்களில் கடைசியாக வந்து சென்றவர் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள். கடந்த மார்ச் முதல் வாரத்தில் வந்து எப்படியாவது நீங்களும், தனியரசும் மீண்டும் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அது எங்களை போன்றவர்களுக்கு மகிழ்வளிக்கும் என்று அன்புடன் வலியுறுத்தி சென்றார். அவரது அன்பு மறக்க முடியாதது.

மஜக நிர்வாகிகள் அடிக்கடி ஒன்றுகூடும் மையமாகவும், அவர்களின் அரண்மனையாகவும் இது இருந்தது.

சக சட்டமன்ற உறுப்பினர்கள் இது விடுதி அறையா? மணக்கும் விருந்தோம்பல் அறையா? என கேட்டதுண்டு. மதியம் வருகை தரும் எல்லோருக்கும் விருந்துணவு நடைபெறும்.

கட்சி சார்பற்று பலரும் கூடி மகிழும் இணக்கமான இடமாகவே இருந்தது.

விடியற்காலை பொழுதுகளில் இங்கு நடைபயிற்சி போவது ஒரு சுகம்.

காங்கிரஸ் கட்சி MLA நண்பர்கள் ராஜேஷ், பிரின்ஸ், ஊட்டி கணேஷ் மற்றும் தனியரசு என ஒரு 'நடைப்பயிற்சி தோழமை' மறக்க முடியாதது

ttttt

மாலை நேரங்களில் அங்கு உள்ள பூங்காவில் குயில்களும், பறவைகளும் நடத்தும் இன்னிசை கச்சேரி அலாதியானது. அதற்காகவே அங்கே உட்காரச் சொல்லும்!

நான் 'ஹவுஸ் கமிட்டி' உறுப்பினர் என்பதால், இந்த விடுதி வளாகத்தை அழகுபடுத்தி, தரப்படுத்துவதில் பல திட்டங்கள் போட துணையாயிருந்தேன். அந்த பணிகள் இப்போது துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இனி வருபவர்கள் அதை பயன்படுத்துவார்கள்!

ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து, இங்கிருந்து புறப்படும் போது அதன் நிர்வாகிகள், பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் நன்றி கூறி, ரமலான் நோன்பு கஞ்சியை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

இன்று விடை பெறும் போது அவர்கள் அன்பு மிகுதியில் நெகிழ்ந்து விட்டார்கள்!

வாழ்க்கை சுவராஸ்யமானது. அதில் பொது வாழ்வு என்பது வித்தியாசமான அனுபவங்களை தரக்கூடியது.

அதில் எந்த நினைவுகளும் மறப்பதில்லை!

பயணங்களும் முடிவதில்லை.

nagai MLA THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe