Skip to main content

பா.ம.க.வால் லாபமா..? யோசிக்கும் எடப்பாடி..! ரஜினியை நோக்கி ராமதாஸ்!

eps

 

தேர்தல் களத்தில் கவனம் குவிக்க தொடங்கிவிட்டன அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள். இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கிப் பயணிக்க காய்களை நகர்த்தியபடி இருக்கின்றன.

 

டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்திற்கும், ரஜினியின் போயஸ் தோட்டத்திற்கும் அரசியல் உறவு ஏற்பட்டிருப்பதாக அறிந்துள்ள மாநில உளவுத் துறை, அதனை ரஜினி தரப்பில் உறுதி செய்துகொள்ள களத்தில் குதித்துள்ளது.

 

இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "நாடாளுமன்ற தேர்தல் போல, வருகிற சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கான எண்ணிக்கையையும், போட்டியிடும் தொகுதிகளையும் முதலில் பேசி ஒப்பந்தம் போட்டுக்கொள்ள டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க போகின்றன என்பதை உறுதி செய்த பிறகு, அந்த கட்சிகளிடமிருந்து எண்ணிக்கையையும் எதிர்பார்க்கும் தொகுதிகளின் பட்டியலையும் பெற்றுக் கொண்டு தோழமைக் கட்சிகளிடத்தில் முரண்பாடுகள் இல்லாத வகையில் தமிழகம் முழுவதும் பரவலாக சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்றே முதல்வர் எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். அதனால், பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் வட தமிழகத்தில் மட்டுமே இருக்க போவதில்லை.

 

rajini

 

கூட்டணி கட்சிகள் தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே தொகுதிகளை கேட்குமானால் அப்படி ஒதுக்க அ.தி.மு.க. தலைமை தயாராக இல்லை. பரவலாக தொகுதிகளை பெற்றுக்கொள்ள சம்மதிக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைக்கப்படும் என திடமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. இதற்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தால் அவர்களுக்கான சீட்டுகளின் எண்ணிக்கை பெரியளவில் குறைக்கப்படும் என்றும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. அதாவது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டுகளை வாரிக் கொடுப்பதற்கு பதிலாக, திமுகவை நேரடியாக நிறைய இடங்களில் எதிர் கொள்ளலாம் எனவும் ஆலோசித்திருக்கிறார்கள்.

 

இந்த விபரங்களெல்லாம் தெரிந்ததால்தான், நாடாளுமன்ற தேர்தல்போல அ.தி.மு.க. கூட்டணியில் சாதித்துக்கொள்ள முடியாது என்கிற மனநிலைக்கு வந்துள்ளது பா.ம.க. தலைமை. இதனையடுத்தே, ரஜினியுடன் பா.ம.க. கூட்டணியை 100 சதவீதம் ராமதாஸ் உறுதி செய்துவிட்டார் என பாமக தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. ஆனால், ரஜினி தரப்பில் இதனை உறுதிசெய்துகொள்ள எங்களுடைய அதிகாரிகள் பல்வேறு சோர்ஸ்களில் முயற்சிக்கின்றனர். அதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை'' என்று விவரிக்கிறார்கள் உளவுத்துறையினர்.

 

இது குறித்து பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, "ரஜினியுடன் நல்ல நட்பில் இருக்கிறார் அன்புமணி. அவருடன் கூட்டணி குறித்து ஏற்கனவே அன்புமணி பேசியுமிருக்கிறார். ஆனால், ரஜினியுடன் கூட்டணி வைக்க அன்புமணி விரும்பியபோதும் அதற்கு முழு மனதுடன் சம்மதிக்காத ராமதாஸ், தற்போது, ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியானால் அவருடன் கூட்டணி வைக்க க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

 

pmk

 

ராமதாஸிடமிருந்து க்ரீன் சிக்னல் விழுந்துள்ளதை அடுத்து ரஜினியுடன் பா.ம.க. தரப்பிலிருந்து பேசப்பட்டிருக்கிறது. அதாவது, ரஜினியின் "தர்பார்' படத்தை ஈழத்தமிழர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் தான் தயாரித்தது. ரஜினியுடன் சுபாஸ்கரனுக்கு நல்ல நட்பு இருக்கிறது. அந்த லைக்கா நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், ஏற்கனவே ரஜினிக்கு தமிழ்குமரனை அறிமுகப்படுத்தி வைத் திருக்கிறார் சுபாஸ்கரன். அந்த வகையில், தமிழ்குமரன் வழியாக ராமதாஸ் எடுத்த முயற்சிக்கு ரஜினியிட மிருந்து நல்ல பதில் கிடைத்துள்ளது. இதனால், ரஜினியுடன் பாமக கூட்டணி உறுதியாகி விட்டது. உறுதி செய்யப்பட்டதால்தான், அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக மெல்ல மெல்ல விமர்சனங்களை வைக்கத் துவங்கியிருக்கிறார் ராமதாஸ்'' என்று சொல்கின்றனர்.

 

பா.ம.க.வின் மேலிடம் தொடங்கி இரண்டாம் நிலை தலைவர்கள் வரை, ரஜினி யுடன் பாமக கூட்டணி பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவே எதிரொலிக்கின்றன. இதனை பொது வெளியிலும் பரப்பி வருகிறது பாமக.

 

அதிமுக கூட்டணியில் பாமக தொடருமா என்பது குறித்து அதிமுக சீனியர் எம்.பி. ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, "அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள், அ.தி.மு.க.வை அவ்வப்போது உரசிப் பார்த்தாலும் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதுபோல காட்டிக்கொள்கின்றன. ஆனால், அவைகளுக்கு செக் வைக்கும் வகையில், அதிமுக கூட்டணி தொடர்கிறது என்பதை உறுதியாக சொல்லாமல், தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவு செய்யப்படும் என்றே சொல்லி வருகிறார் எடப்பாடி. எங்களைப் பொறுத்தவரை இப்போதைய கூட்டணி கட்சிகளால் பெரியளவில் அதிமுக வுக்கு லாபமில்லை என நினைக்கிறோம். இதனை இப்போதே வெளிப்படையாகப் பேசினால், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட வர்கள் ஆட்சியை கடுமையாக விமர்சிப்பார்கள். அதனால், இப்படியுமில்லமால் அப்படியுமில்லாமல் தேர்தல் நேரத்தில் கூட்டணி என்கிற ஸ்லோகத்தை பயன்படுத்துகிறார் எடப்பாடி.

 

பா.ம.க.வுடன் கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடி வைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த 18 தொகுதிகளின் இடைத்தேர்தலை முன்னிறுத்தியே வைக்கப்பட்டது. ஏனெனில் அந்த 18 தொகுதிகளில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், அரூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய 9 தொகுதிகள் வட தமிழகத்தில் இருந்தன. பாமகவுடன் கூட்டணி வைப்பதன் மூலம் பெரும்பான்மையான தொகுதிகளை கைப் பற்றி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கிற திட்டத்தில் ராமதாஸுடன் கைக்குலுக்கினார்.

 

அந்தவகையில் வட தமிழகத்தில் செல்வாக்கு என சொல்லும் பாமக, அந்த 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்திருக்க வேண்டும். ஆனால், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், அரூர் ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது. அதுவும் கூட, சோளிங்கரில் தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் முதலியார் கேண்டிடேட்டை நிறுத்த, அ.தி.மு.க. வன்னியர் கேண்டிடேட்டை நிறுத்தியதால் வெற்றி கிடைத்தது. ஒரு வன்னியரை தி.மு.க. நிறுத்தியிருந்தால் சோளிங்கரும்கூட அ.தி.மு.க. கோட்டை விட்டிருக்கும்.

 

அதேபோல, அரூரும் பாப்பிரெட்டி பட்டியும் தர்மபுரி மாவட்டத்தில் வருகிறது. தர்மபுரி எம்.பி. தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி பின்னடைவை சந்தித்திருப்பதால், பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளின் அ.தி.மு.க. வெற்றியில் பா.ம.க.வின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இது மட்டுமல்ல, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதனால், பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்தால், சேலம் எம்.பி. தொகுதியை ஜெயித்து விடலாம். அது நமக்கு கௌரவமாக இருக்கும் என நினைத்தார் எடப்பாடி. ஆனால், சேலத்தில்கூட அ.தி.மு.க.வை வெற்றிபெற வைக்க பாமகவின் செல்வாக்கு பயன்படவில்லை.

 

அதேபோலத்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும். ஆக, பா.ம.க.வால் எந்த கோணத்திலும் லாபமில்லை என எடப்பாடி உள்பட அ.தி.மு.க. தலைவர்கள் பலரும் உணருகிறோம். இதைத்தான் சீனியர்களிடம் விவாதிக்கிறார் எடப்பாடி! அந்த வகையில், அதிமுக கூட்டணியில் பா.ம.க. இருக்க விரும்பினால் அதிமுக ஒதுக்கீடு செய்வதை டாக்டர் ராமதாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு சம்மதித்தால் மட்டுமே பாமகவுடன் கூட்டணி நீடிக்கும். மற்றபடி, ரஜினியுடன் கூட்டணி உறுதி என பாமக தரப்பில் பரப்புவது தேர்தலில் சீட் பேரத்தை கூடுதலாக்க செய்யப்படும் யுக்தியே தவிர வேறில்லை'' என்கிறார் மிக அழுத்தமாக!

 

ரஜினிக்கு நெருக்கமான குடும்ப வட்டாரங்களில் விசாரித்தபோது, "அரசியலுக்கு ரஜினி வருவது உறுதியானதுதான். தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து கட்டமைப்புகளும் தயாராகத்தான் இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வர மாட்டார், வர மாட்டார் என்கிற விமர்சனங்கள் வருவதை ரஜினி விரும்புகிறார். அதுதான் கட்சி ஆரம்பிக்கும் வரை தமக்கு நல்லது என நினைக்கிறார் ரஜினி. இப்போதே கட்சி துவக்குவதை உறுதிப்படுத்தினால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் கருத்து சொல்ல வேண்டியதிருக்கும். அதற்கு மாற்று விமர்சனங்கள் வரும். லாவணிகளை அவர் விரும்பவில்லை. அதனால், தேர்தலுக்கு முதல் 3 மாதத்தில் கட்சி துவக்கினால், ஏக் தம்மில் தமிழக அரசியலை தம் பக்கம் திருப்பி விடலாம் என்பதே அவரது கணக்கு. ஆனால், இதுவரை கூட்டணி குறித்த எந்த உறுதி மொழியையும் எந்த அரசியல் தலைவருக்கும் அவர் கொடுக்கவில்லை'' என்கிறார்கள் உறுதியாக.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்