Skip to main content

தன்னை ஆதரிப்பவர்களைக் கூட கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ் கையெழுத்துப் போடுவதன் ரகசியம் என்ன..? - உண்மையை உடைக்கும் அஸ்பியர் சுவாமிநாதன்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

cv

 

அஸ்பியர் சுவாமி நாதனை அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதிமுகவில் தகவல் தொழில் நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு அதன் முதல் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகாலம் அதிமுகவில் பணியாற்றி வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். பன்னீர்செல்வத்தோடு நெருக்கமாக இருந்த நிலையில், விலகலுக்கு யார் காரணம், வேறு கட்சியில் சேர திட்டம் இருக்கிறதா போன்ற கேள்விகளை நாம் அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...

 

அதிமுகவில் பல ஆண்டுகாலம் இருந்த நீங்கள் தற்போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட விலகியுள்ளீர்கள். அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை இருந்து வருகிறது. இது அதிமுகவில் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

 

அதைப் பற்றி கருத்துச் சொல்ல எனக்கு ஒன்றும் கிடையாது. நான் அந்த கட்சியிலும் இல்லை. எல்லா மீடியாவிலும் கழுவி கழுவி ஊற்றுவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அதிமுகவில் இரட்டை தலைமை ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதை யாரிடம் கேட்டாலும், எந்த தொண்டனை தனியாகக் கேட்டாலும் ஆமாம் என்று தான் சொல்வார்கள். சிலர் இரட்டை தலைமை சிறப்பாக உள்ளதாகச் சொல்வதெல்லாம் உண்மை கிடையாது. இவர்கள் இருவரும் சிறப்பாக செட்டில் ஆகி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் இருவரும் அறிக்கை வெளியிடுவதில் கூட ஒற்றுமை இல்லை. ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒருவர் பெயரிலும், இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை அதிமுக தலைமைக்கழகத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு அனுப்பப்படுகிறது. ஒரு சின்ன சின்ன விஷயங்கள் தான் பெரிய செய்திகளை நமக்குத் தெரிவிக்கிறது. 

 

சசிகலா அவர்கள் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள், அதிமுக கொடி கட்டிய காரில்தான் அவர் பயணிக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் என்றுதான் அறிக்கை வெளியிடுகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

திருமதி சசிகலா அவர்களை பொறுத்தவரையில் அவரை பெரிய ஆளுமையாகத்தான் நான் பார்க்கிறேன். அம்மாவோடு 35 ஆண்டுகாலம் உடன் இருந்திருக்கிறார்கள். எல்லா கஷ்ட நஷ்டத்திலும் உடன் இருந்திருக்கிறார்கள். அனைத்து அரசியல் முடிவுகளிலும் உடன் இருந்து பார்த்திருக்கிறார்கள், பங்காற்றியிருக்கிறார்கள். அந்த கட்சியை அவர் நிழலாக இருந்து வழிநடத்தியிருக்கிறார்கள் என்பதை அதிமுகவில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அந்த உண்மை தெரியும். கார்டனில் என்னுடன் அம்மா ஆலோசனை செய்யும் நேரங்களில் அவர் உடன் இருப்பார்கள். முதலில் எடப்பாடிக்கு இந்த பதவி எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும். உங்களிடம் என் வீட்டை ஒப்படைந்துவிட்டு 5 வருடம் வெளிநாடு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு திரும்பி வந்து பார்த்தால் வீட்டுக்கு சம்பந்தமான அனைத்தையும் வேறு பெயரில் மாற்றி வைத்திருந்தால் என்ன அர்த்தம். 

 

பெரிய நம்பிக்கை துரோகம். பிரதமரை பார்த்துவிட்டு எடப்பாடி பேட்டி அளிக்கிறார், நான் முதல்வரானதுக்கு சசிகலா காரணம் அல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்று.  அவர் எப்படி முதல்வரானார் என்பது உலகத்துக்கே தெரியும். சசிகலா நல்லவரா கெட்டவரா என்ற விவாதமே இங்கே தேவையில்லை. நீங்கள் நியாயமாக நடந்துகொண்டீர்களா என்பதே கேள்வி. அதற்கு எடப்பாடியால் பதில் கூற முடியாது. சசிகலா என்னை முதல்வராக்கவில்லை என்று எடப்பாடி கூறிய அன்று அவரின் நம்பகத்தன்மை கேள்விக் குறியானது. அன்றைய தேதியில் சசிகலா தான் என்னை முதல்வராக்கினார், இன்றைக்கு அவரை என்னால் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூறிவிட வேண்டியது தானே, அதை விட்டுவிட்டு ஏன் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட வேண்டும். இன்றைக்கு அதிமுகவை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்களா என்று தெரியவில்லை. 

 

பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவதில்லை, ஆனால் எடப்பாடியைப் பற்றிப் பேசுபவர்கள் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுகிறீர்கள். சமீபத்தில் கூட பஷீர் என்பவர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து, எடப்பாடியை எதிர்த்துப் பேசினார். ஆனால் அவர் நீக்கப்படுகிறார், அதில் பன்னீர்செல்வம் எப்படி கையெழுத்துப்போடுகிறார் என்று கேள்வி எழுகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

இதைப்பற்றி பல மாதங்களுக்கு முன்பே நான் ஒரு ட்விட் போட்டிருப்பேன். புகழேந்தி நீக்கப்பட்ட போது அவர் பன்னீர் செல்வம் கூடவே தான் அவர் சென்றார். கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது உங்களை கட்சியை விட்டு நீக்கிய கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளேன் என்று கூறுகிறார். அதுதான் எதார்த்தம், கட்சியில் ஒரு கருத்தை பதியவைக்கப் பார்க்கிறார்கள். எடப்பாடியை எதிர்த்துப் பேசினால் கட்சியில் இருக்க முடியாது என்ற மெசேஜ் அனைவருக்கும் சொல்லப்படுகிறது.