Skip to main content

சுர்ஜித்தின் கையை மட்டும் தானே எடுத்தீர்கள்..? கொதிக்கும் அருணன்!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சுர்ஜித் மீட்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் நீங்கள் கருத்து தெரிவித்து இருந்தீர்கள். உயிரோடு மீட்க முடியாத குழந்தையை, பிணமாக மீ்ட்டது எப்படி?  நள்ளிரவில் நடந்தது என்ன? என்று ட்விட்டரில் சந்தேகம் எழுப்பி இருந்தீர்கள். அந்த கருத்துக்காக ட்விட்டரில் எதிர்வினைகளையும் நீங்கள் சந்தித்தீர்கள். சுர்ஜித் மீட்பு நடவடிக்கை அரசியலாக்கப்படுகிறதா?

சரியான முறையில் அது அரசியல் ஆக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். குறை சொல்வதற்கு என்று அரசியல் செய்வது என்பது வேறு, தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டுவது என்பது வேறு. ஒரு இரண்டு வயது குழந்தை துடிதுடித்து இறந்து போகிறது. இந்த விஞ்ஞான உலகத்தில் அந்த குழந்தையை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. அவனை முறையாக மீட்க நம்மிடம் கருவிகள் இல்லை என்கிறார்கள். இதனை எப்படி கடந்து செல்ல முடியும். இதை கேட்பதை விட அரசியல்வாதிகளுக்கு என்ன அரசியல் இருக்கப்போகிறது. அரசியல் என்றால் எம்.பி, எம்.எல்.ஏ ஆவது மட்டும் கிடையாது. நான் ஏன் அந்த பதிவை போட்டேன் என்றால், சுர்ஜித்தின் இழப்பு தனிப்பட்ட வகையில் என்னை பாதித்தது. ஏனென்றால் அதே வயதுடைய பேத்தி எனக்கு உண்டு. அதனால் அந்த குழந்தையின் இழப்பை பற்றிய வலி தெரியும். குழந்தை விழுந்த அந்த மூன்று நாட்களும் நான் அந்த சம்பவத்தை தொலைக்காட்சிகளில் உற்று நோக்கி வந்தேன். குழந்தையை மீ்ட்க புதுபுது முயற்சிகளில் ஈடுபடுவதாக அரசு தரப்பில் தெரிவித்தார்கள். ஆனால் அவற்றை முறையாக செய்தார்களா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. இயந்திரத்தை வைத்து பாதி தோண்டுகிறார்கள், பிறகு நிறுத்திவிட்டு மாற்று ஏற்பாட்டை செய்கிறீர்கள்.
 

cஅப்படி என்றால் இதில் செலவிடப்பட்ட நேரம் விரயம் தானே? முறையான திட்டமிடல் இல்லை என்பதே எங்களின் குற்றச்சாட்டு. எத்தனை நாள் வேலை செய்தீர்கள் என்பதல்ல பிரச்னை. என்ன சாதீத்திர்கள் என்பதே கேள்வி. அந்த விதத்தில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்தது என்றுதான் கூற வேண்டும். மீட்பு பணி நடைபெற்று கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சி ஒளிப்பரப்பு  நிறுத்தப்படுகிறது. நள்ளிரவில் உடலை மீட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஒரு கவரில் குழந்தையை எடுத்து வருவது போன்ற காட்சிகள் அடுத்தநாள் தொலைக்காட்சிகளில் வந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். பல நாட்களாக போராடி மீட்க முடியாமல் சிரம்மப்பட்ட மீட்புபடையினர் எப்படி சில மணி நேரங்களில் உடலை மீட்டார்கள். இது மட்டும் எளிதாக மீட்க முடிந்ததன் மர்மம் என்ன?  அதுவும் முழு உடலை மீட்கவில்லை என்று சில தொலைக்காட்சிகளில் மீட்புப்படையினர் கூறியதை நாம் கேட்டிருப்போம்.

கையை ஏர் லாக் செய்திருந்ததால் அதன்வழியாக மீட்டோம் என்று அதில் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். உடலை கூட மீட்க முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோமா? என்ற கேள்வி இயல்பாகவே நாம் அனைவருக்கும் எழும். நாங்கள் கையை மட்டும்தான் மீட்டோம் என்று ஏன் இதுவரை அரசாங்கம் தெரிவிக்கவில்லை. சிறுவனின் பெற்றோர் ஆழ்துளை கிணற்றுக்கு மாலையிட்டு வணங்குவதே அரசாங்கம் இந்த விஷயத்தில் பொய் சொல்கிறது என்பதை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள போதுமானது. இரவு பகலாக மீட்பு நடவடிக்கை நடந்தால் அதை பாராட்ட வேண்டும் என்பது கட்டாயம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எதிர்த்து கேள்வி கேட்டால், அதுவும் எதிர்கட்சி தலைவரை பார்த்து நீங்கள் என்ன விஞ்ஞானியா? என்று முதல்வர் கேட்கிறார். ஒரு விஷயத்தில் சந்தேகத்தை எதிர்கட்சிகள் எழுப்பினால் அதற்கு உரிய பதிலை சொல்லாமல் அவர்களை விமர்சனம் செய்வது என்பது எந்தவிதத்தில் நியாயம். தவற்றை சுட்டிக்காட்டத் தானே எதிர்க்கட்சிகள். அரசை பற்றி யாரும் பேசவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகநாட்டிற்கு உகந்ததா. முறையான ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிரைகாப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதைப்பற்றி சொன்னால் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் சொல்பவரை தாக்குகிறார்கள். இது ஆரோக்கியமான ஜனநாயகம் இல்லை என்பதே என்னுடைய எண்ணம்.

 

 

 

 

 

Next Story

அன்புத் தம்பி சுர்ஜித் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்.. ஒன்றிணைந்த 3 ஆயிரம் மாணவர்கள்...

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் வில்சன் பழைய ஆழ்குழாய் கிணற்றுக்குள் தவறி விழுந்து மத்திய, மாநில அரசுகள் உள்பட பல்வேறு தன்னார்வலர்களும் 80 மணி நேரம் 600 பேர்கள் வரை போராடியும் இறுதியாக துண்டு துண்டுகளாக சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இனியும் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள், பயன்பாட்டில் இல்லாத பழைய ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேமிப்பு தொட்டிகளாகவும், பயன்படுத்த முடியாத கிணறுகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சில நாட்களில் ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் பாதுகாப்பாக மூடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறினார்.   

 

tree plantation in puthukottai on rememberance of surjith

 

 

இந்த நிலையில் தான் சுர்ஜித் பலியாகி ஒரு வாரம் கூட முடியாத நிலையில் ஹரியான மாநிலத்தில் ஒரு 5 வயது குழந்தை ஆழ்குழாய் கிணறுக்குள் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  

இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் சுர்ஜித் நினைவாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள 'நமது நண்பர்கள்' இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்குவதுடன் சுர்ஜித் நினைவாக மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டனர். 

அந்த நிகழ்ச்சி இன்று அறந்தாங்கி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அதிகாரி திராவிடச்செல்வம், நமது நண்பர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  

அப்போது மாணவர்கள், "ஆழ்குழாய் கிணறு ஆபத்தானது.. அதன் அருகில் செல்ல மாட்டோம்.. எங்கேனும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதையோ, நிற்பதையோ கண்டால் அவர்களை அவர்களின் வீட்டில் கொண்டு போய் சேர்ப்போம். மூடப்படாத ஆழ்துளைக் கிணறு மற்றும் குழிகளைக் கண்டால் பெரியவர்களிடம் கூறுவோம். பெரியவர்களின் துணை இல்லாமல் ஆறு, குளம், குட்டை, கிணறு பகுதிகளுக்கு செல்லமாட்டோம். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் அனுமதி இல்லாமல் பள்ளி வளாகத்தைவிட்டு செல்லமாட்டோம். அன்புத் தம்பி சுர்ஜித் நினைவாக எங்கள் வீட்டில் ஒரு மரக்கன்று நட்டு வளர்ப்போம்" என்று அறந்தாங்கி, ஆவணத்தான்கோட்டை, வடக்கு, மேற்கு, ராஜேந்திரபுரம், குருந்திரகோட்டை, திருநாளூர், பூவைமாநர் மற்றும் பல கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் பள்ளி  மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதுடன் நமது நண்பர்கள் இயக்கம் கொடுத்த விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் மரக்கன்றுகளை பெற்று வீடுகளில் நட்டுள்ளனர். 

இதே போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மரக்கன்றுகளை நடவும், சுர்ஜித் நினைவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் திட்டம் உள்ளது என்றனர் நமது நண்பர்கள் குழுவினர். 

 

 

Next Story

நான் சுஜித் பேசுகிறேன்…. கல்வெட்டை திறந்து வைத்த கலெக்டர்!!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், திண்டிவனம் நெடுஞ்சாலையில் தென் அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு நவம்பர் 1ந்தேதி மாலை சென்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அங்கிருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில், திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார், மாணவ – மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர்.
 

sujith inscription


பின்னர், நான் சுஜித் பேசுகிறேன் என்கிற தலைப்பில் ஒரு கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் சுஜித் போர்வெல்லில் தான் விழுந்து துடித்து இறந்தது பற்றி குறிப்பிடுவது போல் இருந்தது அனைவர் மனதையும் உருக்கியது.

பின்னர் பள்ளிக்கு அருகில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து ஆழ்துளை கிணறு மூடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதோடு, அந்த ஆழ்துளை கிணறு மழைநீர் சேகரிப்பாக மாற்றப்பட்டு, பாதுகாப்பாக மூடும் பணிகளை செய்யச்சொன்னார்.
 

sujith inscription


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, "திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்ததை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 5804 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு, அதில் மழைநீர் சேகரிப்பாக மாற்றக் கூடியதை மாற்றியும், பயன்படுத்த முடியாத ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூடும் பணிகளும் முடிவடைந்துள்ளது. இப்பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உள்ளாட்சி நிர்வாகம் (நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள்), வருவாய்த் துறை, காவல் துறை மூலமாகவும், மேலும் பொதுமக்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டது. 

மேற்கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 1800-425-3678 மற்றும் 04175-233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், எனது கைபேசி 94441 37000 எண்ணிலும் தொடர்பு கொண்டும், வாட்ஸ்அப் தகவலாகவும் தெரிவிக்கலாம்" என்றார்.