Skip to main content

எடப்பாடி பழனிசாமி கூறியது அனைத்தும் பொய் - அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையால் பரபரப்பு

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Aruna Jagadeesan Commission says Edappadi Palaniswami statementsTuticorin firing are false

 

எடப்பாடி பழனிசாமி கூறியது அனைத்தும் பொய் என தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கையில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி  20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதே ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

 

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர், அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை  டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என பதிலளித்திருந்தார். இது பெரும் பேசு பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியது. 

 

இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்களை, நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அதன் பிறகு, ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த போராட்டம், வன்முறையாக மாறியதற்கு, சமூக விரோதிகள்தான் காரணம். அது எனக்கு நன்றாகத் தெரியும் என்று உறுதியாக பேசினார். ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு என்ன காரணம், யாருடைய உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த  ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டு கால  விசாரணையில் 3,000 பக்கங்கள் கொண்ட  அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

அந்த அறிக்கையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அருணா ஜெகதீசன் ஆணையம் வழங்கியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை  டிவியில் பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறியது அனைத்தும் பொய். தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அதன் பிறகு,  “சமூக விரோதிகளால் தான் தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டது என தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என அருணா ஜெகதீசன் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி போன்ற பிரபலம், ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அதற்கான ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். தங்களது பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.