Advertisment

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Arun Rakesh is the young man who cycled around the world

Advertisment

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன.

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம்.

Advertisment

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம்.

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக்குறித்தவழிகாட்டுதல் நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள்நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூடதங்க நேர்ந்திருக்கிறது.

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு.ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tourists Tour
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe