Skip to main content

வெங்காயத்தையும், பூண்டையும் உரித்தால் ரத்தமா வருகின்றது..? அது என்ன ஆடா, மாடா? - அருள்மொழி கேள்வி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

 

சென்னையில் நடைபெற்ற திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழாவில் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " இன்று நாடு முழுவதும் ஒருவிதமான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மக்களுக்காக பேசுபவர்கள், எழுதுபவர்கள் என அனைவரையும் தற்போது தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் சிறையில் இருக்க வேண்டிய பலபேர் தற்போது வெளியில் இருக்கிறார்கள். அடிக்கடி தொலைக்காட்சிகளில் வந்து அடுத்தவர்களை ஆண்டி இந்தியன், ஆண்டி நேஷனல் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். கார்ப்பரேஷன் வண்டியில் தூக்கிப்போட வேண்டியவர்களை எல்லாம் வெளியில் விட்டுவிட்டு, மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களை எல்லாம் மற்ற மாநிலங்களில் சிறையில் தள்ளுகிறார்கள். அதை எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கின்ற மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கின்றது. இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தார்கள் என்ற உண்மை நிலை ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் நம்முடைய கலாச்சார, பண்பாடுகளை சிதைக்கின்ற வேலைகளில் சிரத்தை எடுத்து செய்து வருகிறார்கள். 
 

gh



தற்போது குழந்தைகளிடம் இவர்கள் விளையாடுகிறார்கள். 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத சொல்கிறார்கள். அதுவும் வேறு பள்ளியில் எழுத சொல்கிறார். கொடுங்கோலன் ஆட்சியில் கூட இவ்வாறு மாணவர்களை சித்ரவதை செய்ய மாட்டார்கள். இந்த இக்கட்டான வயதில் உள்ள மாணவர்களை அடுத்த பள்ளிக்கு சென்று தேர்வெழுத சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தமான செயல். இதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?  இன்றைக்கு நாட்டில் பெரும்பாலானவர்கள் மனநல சிகிச்சைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். அமைச்சரிடம் ஏன் தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி நிதியை வழங்கவில்லை என்றால் சாரி, நாங்கள் எந்த மாநிலத்துக்கும் வழங்கவில்லை என்று கூறுகிறார். நாட்டின் நிலவரம் இந்த சூழ்நிலையில்தான் இருக்கின்றது. 

5ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். என்ன தொழிற்பயிற்சி அளிக்கப்படும். மெக்கானிக் வேலை செய்ய சொல்வார்களா? என்ன தொழில் கற்றுத்தர போகிறார்கள். தேர்வில் ஒரு முறை தோல்வி அடைந்தால் அவர்கள் மீண்டும் வெற்றியடைய மாட்டார்களா? தோல்வி அடைந்த பலரும் வாழ்க்கையில் சாதித்தது கிடையாதா? சிலர் நீங்கள் தான் ஔவையாரையும், திருவள்ளுவரையும் படிக்க வைத்தீர்களா என்று கேட்கிறார்கள். அவர்கள் இருவரும்தான் எங்களின் தாத்தா பாட்டிகள். ஆனால் எங்களின் தாத்தா பாட்டிகள் யாரும் படிக்கவில்லையே. அதற்கு யார் காரணம். எது காரணமாக அமைந்திருந்தது. அவர்களுக்கு அந்த செய்தி தெரியாதா என்ன? அவர்களுக்கு அனைத்தும் தெரியும். தெரியாத மாதிரி நடிக்கிறார்கள். கைநாட்டுகாரர்களின் பேரன் எப்படி மருத்துவராக, பொறியாளராக உருவானான் என்பதே திராவிட இயக்கம் சாதித்ததற்கு போதுமான உதாரணம். அதற்குத்தான் திராவிட இயக்கம் இவ்வளவு அரும்பாடுபட்டது.

இன்றைக்கு குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கு ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா அமைப்பினரிடம் தமிழக அரசு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு சுத்தமான உணவை வழங்குவதாக கூறுகிறார்கள். சுத்தமான உணவை நீங்கள் கொடுப்பீர்கள் என்றால் நாங்கள் என்ன அதில் குப்பையை அள்ளிப்போட்டா சாப்பிடுகிறோம். இல்லை வெங்காய தோலை போட்டு சாப்பிடுகிறோமா? சுத்தமான உணவு என்று இவர்கள் வெங்காயம், பூண்டு இல்லாத உணவை சொல்கிறார்கள். அப்படிப்பட்ட உணவை நீங்கள் சாப்பிடுங்கள், நாங்கள் ஏன் அந்த உணவை சாப்பிட வேண்டும். ஏன் வெங்காயத்தையும், பூண்டையும் அறிந்தால் ரத்தம் வருகின்றதா? அது என்ன ஆடா, மாடா? ஏன் இந்த ஏமாற்று வேலைகளை செய்கிறீர்கள்.