Skip to main content

தலித்துகளை மீட்க ஒரு பிராமின்தான் அவதரிக்க வேண்டுமா? - ஆர்டிகள் 15ம் எதிர்வினைகளும்!  

Published on 02/07/2019 | Edited on 03/07/2019

"மஹன்த் என்ன சாதி"

"பிராமின் சார்"

"ஜாதவ் சார்.. நீங்க தலித் தான?"

"ஆமா சார்"

"அந்த பசங்களும் நீங்களும் அப்ப ஒரே சாதியா?"

"அய்யோ இல்ல சார்.. நான் சமர்.. அவங்க பாசிஸ்.. அவங்கள விட நாங்க கொஞ்சம் மேல"

"சரி... நீங்க?"

"நான் கயாஸ்து சார்"

"நான்?"

"பிராமின் சார்.."

"அப்ப மஹன்த்தும் நானும் ஒரே சாதியா?"

"ச்சே ச்சே.. அவர் கொஞ்சம் உயர்ந்த பிராமின்... நீங்க அவர விட கொஞ்சம் கீழ இருக்குற பிராமின்"

"What the f*** is going on here?"

ஆர்ட்டிகள் 15 படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி இது. மொத்த படத்திற்குமான ஒரு சோற்றுப் பதம் இதுவே. அந்தாதுன் புகழ் ஆயுஷ்மான் குரானா நடித்து, மல்க் படமெடுத்து அனுபவ் சின்ஹா இயக்கியிருக்கும் ஆர்ட்டிகள் 15 சென்ற வாரம் வெளியாகி பெரும் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. தனது கரியரின் துவக்க காலத்திலேயே இப்படி ஒரு படத்தில் நடிக்க முன்வந்த ஆயுஷ்மான் குரானாவுக்கு ஒரு சல்யூட்.

 

ayushman kurana



ஒரு கிராமத்திற்குக் கூடுதல் கமிஷனராக பணியேற்று வருகிறான் அயன். அதே நாளில் வெறும் மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக காணாமல் போகிறார்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மூன்று சிறுமிகள். போலீஸ் மிகவும் மெத்தனமாய் அந்த வழக்கை கையாள்வதை அயன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காணாமல் போன பெண்களில் இருவர், ஊருக்கு நடுவே ஒரு மரத்தில் தூக்கில் மாட்டப்பட்டு இறந்து போயிருக்கிறார்கள். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அவர்கள் கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று சொல்கிறது. ஆனால் அந்த ரிப்போர்ட்டை மறைக்க காவல்துறையிலேயே ஒரு சதி நடக்கிறது.

ஆரம்பத்தில் அந்த கிராமத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வருபவனுக்கு, இந்த வழக்கின் வழியாக விரிகிறது அங்கு  நிலவும் கெட்டித் தட்டிப் போன சாதிப் படிநிலைகளும், அது மக்களின் மேல் செலுத்தும் ஆதிக்கமும் வன்முறையும். இதை உணரும் அயன் அந்த வழக்கில் முழுமையாக ஈடுபட்டு, காணாமல் போன மூன்றாவது பெண்ணை கண்டுபிடிக்கவும் இறந்து போன இரண்டு பெண்களின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தரவும் முற்படுகிறான். சாதியின் அதிகாரநிலைகள் மூலம் அயனின் முயற்சிகளுக்கு வரும் தடைகளும் அதற்கு அயனின் எதிர்வினைகளுமே ஆர்ட்டிகள் 15.

ஆர்ட்டிகள் 15ல் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? சுருக்கமாக சொல்வதானால் ஒரு மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக் கூடாது என்பதுதான் ஆர்ட்டிகள் 15. அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை சட்டப்பூர்வமாக நிலைநாட்டும் முக்கியமான ஒரு அரசியலமைப்புப் பிரிவு இந்த ஆர்ட்டிகள் 15. தொடர்ந்து பல்வேறு சாதிய, மத வன்முறைகளை இந்தியா சந்தித்து வரும் சூழலில் நாம் கண்டிப்பாக மறுவாசிப்பு செய்தேயாக வேண்டிய ஒரு பிரிவு ஆர்ட்டிகள் 15.

 

ambedkar



இதை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எழுதி எடுத்ததற்கும், அதில் எந்தவித சமரசங்களும், சமரசங்கள் என்றால் வணிக சினிமா சமரசங்களாகிய பாடல் நடனம் மட்டுமல்ல, சமூக/அரசியல் ரீதியான சமரசங்களும் இல்லாமல், வீரியத்துடன் இந்த களத்தை கையாண்டதற்கும் இந்த படைப்பாளிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தியாவின் சாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்து வரும் படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறிப்பிடால், பொதுவான ஒரு இடத்தில் நின்று, அவர்கள் இவர்கள் என்று பொதுமைப்படுத்தி பாதுகாப்பாகப் பேசும். ஆனால் ஆர்ட்டிகள் 15, நேரடியாக சாதிகள் மீதான விமர்சனங்களை வைக்கிறது. படம் தலித்துகளை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் பிராமின்கள், பிராமின் கட்சியிடம் விலைபோகும் தலித் தலைவன், தொடர் அடக்குமுறைகளால் வன்முறை பாதையை கையிலெடுக்கும் தலித் தலைவன், ’பிராமின் - தலித் ஒற்றுமை தேவை, அதன் மூலம் இந்துக்கள் ஒற்றுமை வளரும்’ என்று மக்களை திசைமாற்றும் கட்சி என தற்கால இந்திய அரசியல் சமூக சூழலை நினைவுபடுத்தும் காட்சிகளை சமரசமின்றி முன்வைக்கிறது. கட்சியின் பெயர்கள் கூட அவற்றின் சின்னங்கள் மூலம் நேரடியாகவே குறிப்பிடப்படுகின்றன. மக்கள் நம்பியிருக்கும் ஒரு சாதிக் கட்சி, தேர்தல்களின் போது அதற்கு எதிராக பேசிவரும் கட்சியோடு இணைவதும், எத்தனை விதமாக இந்த தாவல்களும் கூட்டணிகளும் நடக்கிறது என்பதும், அதனால் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்று மக்கள் குழம்புவதும் ஒரு காட்சியில் சரவெடியாக விளக்கப்பட்டிருக்கிறது.

சாதி எந்தளவுக்கு சமூகத்தில் ஊறியிருக்கிறது என்பதை அயன் அறிந்துகொள்ளும் காட்சிகளும், கிராமம், காவல்நிலையம் என்று அத்தனை மட்டுகளிலும் இருக்கும் சாதிய படிநிலைகளை கண்டு அருவருப்பு கொள்ளும் அயன் காவல் நிலைய நோட்டீஸ் போர்டிலே ஆர்ட்டிகள் 15 ஐ ப்ரிண்ட் எடுத்து ஒட்டிவைப்பதும் மிக நுணுக்கமான காட்சியமைப்புகள். அயனுக்கும் அவன் மனைவிக்குமான சின்ன சின்ன ஃபோன் சம்பாஷனைகளும், அதன் மூலம் சொல்லப்படும் விஷயங்களும் அழகான ஆழமான சித்தரிப்புகள். குறிப்பாக, அரசனை கீழிறக்கிவிட்டால், அடுத்து யாரை அரசனாக்குவது என்று அயன் கேட்பதும், எதற்கு ஒரு அரசன் வேண்டும் என்று அவள் திரும்பிக் கேட்பதும் அட்டகாசம்.

 

 

article 15



பெண்கள் காணாமல் போனதை தொடர்ந்து ஸ்ட்ரைக்கிற்கு செல்லும் தலித்துகளால், போலீஸ் ஸ்டேஷன் சாக்கடை சரிசெய்யப்படாமல் குளம் போல தேங்கி நிற்பதும், சமாதானத்திற்கு பிறகு ஒரு சகமனிதன், அந்த சாக்கடைக்குள் முழுமையாக இறங்கி அதை சுத்தம் செய்வதும் மனதிற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. சினிமா எனும் காட்சி ஊடகத்தை வீரியத்துடன் பயன்படுத்திய இடமாக இதை சொல்லலாம். படம் முடிந்து நாட்களாகியும் கூட, அந்த காட்சி தந்த அதிர்வு இன்னும் மறையவில்லை.

சாதிய ஆதிக்கத்தை பின்பற்றும் சமூகத்தின் வெவ்வேறு அடுக்கில் உள்ளவர்கள் தேவைக்கேற்ப கைகோர்த்துக் கொள்வதும், அதே தேவைக்கேற்ப ஒன்றையொன்று முதுகில் குத்தத் தயங்காததும் வெகு இயல்பான ஜோடனை. அந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு நடந்தது காட்சியாக விரியவில்லை. ஆனாலும் அது நமக்குள் ஏற்படுத்தும் சலனம் அதிகம். படம் முழுக்க இயக்கம் வெகு நுணுக்கத்துடன் சின்ன அதிர்வுகளை ஏற்படுத்தியபடியே பயணிக்கிறது. இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் அந்த அதிர்வை நமக்கும் மிகச்சரியாக கடத்துகின்றன.

பதினைந்து வயதிற்குட்பட்ட தன் பெண் குழந்தையை, ஆதிக்க சாதி வெறியர்கள் இரண்டு மூன்று நாட்கள் அடைத்து வைத்திருந்து, பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். அந்த வலியிலும் அந்த தகப்பன்கள் ஆற்றாமையோடு புலம்புவது, ‘எங்கள் பெண்களை பத்து நாட்கள் வைத்திருந்து கூட விட்டிருக்கலாமே.. ஏன் கொன்றார்கள்’ என்பதுதான். சில வருடங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது என்ன இது செயற்கைத்தனமாக இருக்கிறதே என்று தோன்றியிருக்கும். ஆனால் இப்போது தினம் தினம் சமூக வலைதளங்களில் வெளியாகும் வன்கொடுமை வீடியோக்கள் இந்த காட்சிகள் கற்பனையானது அல்ல எனும் வலியை நமக்குள் விதைக்கின்றன.

 

article 15



நீதி கேட்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டு போராடவில்லை. ஊடகங்களிடம் சென்று பேசவில்லை. கொல்லாமலாவது விட்டிருக்கலாமே என்று கதறும் இந்த தகப்பன்களைத்தான் காவல்துறை குற்றவாளிகள் என சித்தரித்து உள்ளே அடைக்கிறது. அதுவும் என்ன காரணம் சொல்லி? அந்த இரண்டு பெண்களும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதைப் பார்த்த கோபத்தில் அந்த தகப்பன்கள் செய்த ஆணவக் கொலை இது என வழக்கு எழுதப்படுகிறது. தினம் தினம் இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தில், இதை மறுத்து மறந்து வாழ்பவர்கள்தானே நிஜமான ஆன்ட்டி இந்தியர்கள்?

படத்தின் பெரும் பலமாக பல வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் மொத்த படத்திலும் என்னை உலுக்கிய ஒரு வசனம் - நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் இத்தனை வன்கொடுமைகளையும் மறைத்துதான், நம் சினிமாக்களிலும் டிவிக்களிலும் ஒரு சுகமான வாழ்வை காட்டிக்கொண்டிருக்கிறோம், நம்பிக்கொண்டிருக்கிறோம். எத்தனை சத்தியம் புதைந்த வசனம் இது!

துப்புறவாளரின் மகனாக வளர்ந்து போலீஸாகி, ஆதிக்க சாதியினருடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழும் ஒரு தலித், சமூகத்தின் இயல்பே இதுதான் என்று நம்பி சாதியை தக்க வைக்க நினைக்கும் ஒரு போலீஸ், உள்ளுக்குள் எத்தனை வலிகள் இருந்தாலும் ஆதிக்க சாதி அதிகாரிகளிடம் ஒருபோதும் அதை கோபமாக வெளிப்படுத்தாமல் வாழும் காவல்துறை அதிகாரிகள், என்ன பேசி என்ன மாறிவிடப்போகிறது என்று நினைக்கும் ஒருவன் என பலவிதமான பரிமாணங்களுடன் கூடிய கதாப்பாத்திரங்கள் சமூகத்தின் பல அங்கங்களை பிரதிபலிக்கின்றன. அதுவும் இறுதிக்காட்சியில் ‘நீலாம் கடைசி வரைக்கும் கூட்டி பெருக்கிட்டே இருந்துருக்கனும்.. உன்ன எங்களோட ஒன்னா சேர விட்டோம் பாரு’ என்று சொல்லும் ஆதிக்க சாதி அதிகாரியிடம் அந்த தலித் அதிகாரியின் எதிர்வினை... தியேட்டரில் விசில் பறக்கிறது. மனதிற்குள்ளும்.

நாசர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கு சி.பி.ஐ க்கு மாறுவதும், சி.பி.ஐ அதிகாரி குற்றவாளிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து படம் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இருண்மையோடு முடியப்போகிறதோ என்கிற சின்ன பயம் எழுகிறது. ஆனால் ஒரு அழகான நம்பிக்கையோடு, வெளிச்சக் கீற்றோடு முடிந்திருப்பது வெகுசிறப்பு. இதுபோன்ற முடிவுகள்தான் இந்த இழிவிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையை நமக்களிக்கும்.

 

article 15



படத்தின் மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. படம் விமர்சனம் செய்த நபர்கள் படத்தை தடை செய்யச் சொல்லிக் கூட கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை விட்டுவிடுவோம். ஆனால் சில விமர்சனங்கள் படத்தின் கருத்தியலைப் பற்றி, அரசியலைப் பற்றி கேள்வியெழுப்புகின்றன. அதில் பிரதானமானது, தலித்துகளை சாதிக் கொடுமைகளில் இருந்து காப்பாற்றக் கூட ஒரு பிராமின்தான் வரவேண்டுமா, அந்த இடத்தில் ஏன் ஒரு தலித்தை வைத்திருந்திருக்கக் கூடாது எனும் கேள்வி. அந்த ஆபத்பாந்தவன் கூட பிராமினாக இருப்பதே ஒரு சாதியப் பார்வைதானே என்பது அவர்கள் வைக்கும் வாதம்.

நாயகன் அயன் பிராமினாக சித்தரிக்கப்பட்டிருப்பதனால் இந்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு படத்தின் இயக்குனர் அனுபவ் சின்ஹா அருமையான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். ‘The privileged should challenge privilege’ - அதாவது சாதியின் இந்த அனுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே அதை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அனுபவ் சின்ஹா.

மேலும், தலித்துகள் மிகவும் தாழ்த்தப்பட்டு, சமூகத்தின் பல அடுக்குகளினாலும் கொடுமைக்கும் ஆளாக்கப்படும் ஒரு ஊரில், ஒரு தலித் அப்படிப்பட்ட உயர் பதவிக்கு வந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது முற்றிலும் வேறான ஒரு படம். முற்றிலும் வேறான ஒரு களம். முதலில் அங்கு அந்தப் பதவிக்கு அப்படிப்பட்ட ஒருவன் வந்திருக்க முடியுமா, வந்திருந்தாலும் கூட அவன் உத்தரவுகள் மதிக்கப்பட்டிருக்குமா என்பதே கேள்விக்குறிதான். அவன் காவல்துறையில் இருக்கும் சாதிய படிநிலைகளை சமாளிப்பதிலேயேதான் முழு கதையும் சென்றிருக்கும்.

வெளிநாட்டில் படித்த, இந்தியாவின் எந்த ஏற்றத்தாழ்வுகளும் தெரியாமல் வளர்ந்த ஒரு பிராமின், இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திற்கு செல்வதும், அங்கு நடக்கும் சம்பவங்களின் மூலம் அசல் இந்தியாவை கண்டுகொள்வதும், அதற்கெதிராக கேள்வியெழுப்பி எதிர்வினை புரிவதும், அதில் அவனுக்கு வரும் தடைகளும்தான் ஆர்ட்டிகள் 15ன் பேசுபொருள். படிநிலைகளின் உச்சத்தில் இருக்கும் ஒரு பிராமினே கூட இந்த சாதிப் படிநிலைகளை எதிர்க்கும்போது எப்படி ஓரங்கட்டப்படுகிறான் என்பது கூட ஒருவித அரசியல்தானே? தனிமனிதனின் சாதியைத் தாண்டி, ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பின் இருப்புதான் இங்கே பிரதானம் என்பதும், அதை காப்பதற்கு தன்னில் இருந்தே ஒருவனை பலிகொடுக்கக் கூட அது தயங்காது என்பதையும் பேசியிருக்கிறது ஆர்ட்டிகள் 15.

ஒருவனின் சாதியை வைத்து, அவன் தலித் என்று அவனை ஒதுக்குவது எவ்வளவு தவறோ, அதேயளவு தவறு, அவன் சாதியை வைத்து, நீ பிராமின் என்று அவனை ஒதுக்குவது. எதிர்க்கப்பட வேண்டியது சித்தாங்கள்தானே தவிர தனிமனிதர்கள் அல்லர். சாதியால் அடக்குமுறைக்கு ஆளாகி, ஆனால் சமூக அரசியல் லாபங்களுக்காக ஆதிக்க சாதியினருடன் கூட்டு சேர்ந்தால் தாழ்த்தப்பட்டவனாய் இருந்தாலும் அவன் சமூக எதிரிதான். பிறப்பால் ஆதிக்க சாதியாக இருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்வுகளை தட்டிக்கேட்டு அதை களைய கை கொடுக்கிறான் என்றால், பிராமினாய் இருந்தாலும் அவன் நம் தோழனே. பெரியார் சொல்லிக் கொடுத்த பகுத்தறிவு இதுதானே?

அதன்படி பார்த்தால், தற்கால சூழலில் மிக அவசியமான, அத்தியாவசியமான, நாம் பெருமை கொள்ளத்தகுந்த  நேர்மையான ஒரு படைப்பு ஆர்ட்டிகள் 15. இந்திய சினிமா அசல் பிரச்சினைகளை பேச ஆரம்பித்திருக்கிறது. கைதட்டி வரவேற்போம்.