Skip to main content

சுரங்கம் வெட்டினால் தீக்குளிப்போம் என்ற விவசாயிகளின் கதறலை  தொடர்ந்து அமைச்சர் பேச்சுவார்த்தை!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தை பூமிநாதன் என்பவர் ஒப்பந்தம் எடுத்து சுரங்கம் தோண்டி வருகிறார். இந்த  சுரங்கத்தில் அனுபவமில்லாத ஆபரேட்டர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி திருமானூர் அருகே உள்ள பெரிய பட்டாக்காடு கிராமத்தைச் சேர்ந்த 24 வயதே நிரம்பிய சுப்பையன் மகன் வினோன்மணி என்பவர் ஹிட்டாச்சி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென சுரங்கம் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தை மூடியது இதுகுறித்து  தகவலறிந்து மைன்ஸ் மேனேஜர் முரளி  அங்குள்ள ஊழியர்கள் மூலம் மற்றொரு ஹிட்டாச்சி எந்திரத்தை கொண்டுவந்து மண்ணைத் தோண்டி மண்ணிற்குள் புதைந்த ஹிட்டாச்சி எந்திரம் மற்றும் ஓட்டுநரை மீட்டனர். 

 

ariyalur cement factory issue

 



அதன் பின்னர் வினோன்மணியனை அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வினோமனியின் மாமன் மனோகரன் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து நடந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் அரியலூர் அருகில் ஏற்கனவே அரசு சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. அறவே வளாகத்தில் 809 கோடி செலவில் அதே பகுதியில் விரிவாக்கம் செய்து புதிய ஆலை ஒன்று அரசு நிறுவியுள்ளது. இந்த ஆலையை கடந்த 1-11-2019 அன்று முதலமைச்சர் கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்த ஆலையிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து. இதற்கு தேவையான சுண்ணாம்புக்கல் தோண்டுவதற்காக ஆனந்தவாடி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஆலை சிமிண்ட் தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளது. இதற்கு சிமெண்ட் தயாரிப்பதற்காக ஆனந்தவாடி என்ற ஊரில் 300 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது.

 

 ariyalur cement factory issue

 



சுண்ணாம்புக்கல் தோண்டுவதற்கு இதில் இருந்து சுண்ணாம்பு கல் தோண்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்  இதற்காக  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில்  கருத்து கேட்பு கூட்டம் கடந்த 24-10-2019 அன்று மாவட்ட ஆட்சியர் டி.ரத்னா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடன் அங்கிருந்த கிராமமக்கள் எழுந்து நின்று இங்கு சுரங்கம் வெட்ட அனுமதிக்க கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்த்து முழக்கமிட்டனர். சுரங்கம் வெட்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், கிராம சாலை குறுகியதாக உள்ளதால் லாரிகள் செல்லும் போது நடந்து செல்பவர்கள் ஒதுங்க கூட இடம் இல்லை என அவர்கள் வேதனையுடன் கூறினர்.

அவர்களை போலீசார் சமரசம் செய்து உட்கார வைத்தனர். அதனை தொடர்ந்து பேசிய விவசாயி நல்லத்தம்பி சிமெண்ட் ஆலைகளால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களிடம் இருந்த விவசாய நிலங்களை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருந்தோம். அதனை சிமெண்ட் ஆலைகள் பிடிங்கி கொண்டன.அதற்காக. ஒரு சென்ட்க்கு 2300 ரூபாய் கொடுக்க முன்வந்தனர். அதனை வாங்க மறுத்ததால் கூட்டுறவு வங்கிகளில் செலுத்தினார்கள். அவற்றையும் அவர்கள் கடனுக்காக எடுத்து கொண்டனர். இதனால் நாங்கள் பிழைக்க வழியின்றி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். எங்களது காலம் போய் எங்களது பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ முடியுமா என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். நல்ல சாலை இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. சிமெண்ட் ஆலையில் வேலை தருகிறோம் என்றனர். ஆனால் வேலைவாய்ப்பு தரவில்லை. எனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உடனடியாக வேலை தரவேண்டும். இல்லை என்றால் அனைவரும் தீக்குளிப்போம் என்று கதறி அழுதபடியே மாவட்ட ஆட்சியரை பார்த்து பேசினார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு இளைஞர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள். இங்கே சுரங்கம் வெட்ட அனுமதி தரக்கூடாது என்று பேசினார்கள். அதனை தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர் ராஜராஜன் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செய்தது போல அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைவிடப்பட்ட சுரங்கங்களை மூடி காடுகளாகவும், நீர்த்தேக்கமாக மாற்றவேண்டும் , சோலார் மின் உற்பத்தி நிலையங்களாக ஆக்கவேண்டும் என்று பேசினார். 

 

 ariyalur cement factory issue

 



அதனைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சுரங்கம் தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் மக்களின் கடுமையான எதிர்ப்பு இருந்ததை நேரில் பார்த்த மாவட்ட ஆட்சியர் ரத்தனா இது சம்பந்தமான அறிக்கையை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளார். அதில் மக்களின் எதிர்ப்பு பலமாக உள்ளது. அவர்கள் ஆதரவு இல்லாமல் சுரங்கம் தோண்டும் பணி செயல்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அறிக்கை அனுப்பியதையடுத்து தமிழக முதல்வர் ஆலோசனையின்படி தொழில்துறை அமைச்சர் சம்பத்தை அரியலூருக்கு நேரடியாக  அனுப்பி அப்பகுதி கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முறையில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் சம்பத் அரசு கொறடா ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் ராம ஜெயலிங்கம், குன்னம் ராமச்சந்திரன், ஆட்சியர் ரத்தினா ஆகியோர் தலைமையில் 1ம் தேதி இரவு ஆட்சியர் அலுவலகத்தில் ஆனந்தவாடி கிராம முக்கியஸ்தர்களை வரவழைத்து விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஆனந்தவாடி கிராம மக்களுக்கு படிப்படியாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், சிமெண்ட் சுண்ணாம்பு சுரகங்களில் இருந்து கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அவை செல்வதற்கு என தனிபாதைகள் அமைத்து தரப்படும், குடிதண்ணீர் சாலை வசதி மருத்துவமனை அங்குள்ள பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க செய்து தரப்படும், கிராம மக்களுக்கு எந்த விதபாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் சுரங்கப் பணிகள் நடைபெறும் என இப்படி பல்வேறு வாக்குறுதிகளை அமைச்சர் சம்பத் அளித்தார்.

 



ஏற்கனவே கிராமக்கள் தங்கள் குடும்ப அட்டை ரேஷன் கார்டுகளை ஆட்சியரிடம் ஒப்படைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் அமைச்சர் சம்பத் கிராம மக்கள் கொடுத்த குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகளை கிராம மக்களிடம் திரும்பி கொடுத்தார். பின்னர் அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளனர். இது ஆனந்தவாடி கிராம மக்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வரும் 5-ஆம் தேதி முதல் சுரங்கம் தோண்டும் பணி துவங்கி நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான உஞ்சினி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் கல்மண் தோண்டும்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட தால் பொக்லைன் ஆப்பரேட்டர்  இறந்துபோனதையடுத்து அந்த சுரங்கத்தை மாவட்ட ஆட்சியர் தடை செய்துள்ளார்.

இப்போது அங்கு பணிகள் நடைபெறவில்லை. மாவட்ட ஆட்சியர் மாவட்ட மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருவது  ஓரளவு ஆறுதலாக உள்ளது என்கிறார்கள். மாவட்டம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் இயக்கப்படுகின்றன. இவைகளுக்காக சுண்ணாம்புக்கல் எடுத்துச்செல்ல பலபகுதிகளில் சுரங்கம் தோண்டும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தவிர அரசு புறம்போக்கு நிலம், ஏரி குளங்கள், ஓடைகள், வண்டிப் பாதைகள் என நிறைய ஆக்கிரமிப்பு செய்து அதில் சுரங்கம் தோண்ட படுகிறது.

இவைகள் பற்றி வருவாய் துறை ஆய்வு செய்து அவர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும். மேலும் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் அதிகரித்தபடியே உள்ளது. ஆனால் அதற்கான சாலை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. மேலும் சுரங்கம் தோண்டுவதற்காக வைக்கப்படும் காட்சிகள் ராட்சவெடிகள் வெடிக்கும்போது அக்கம்பக்கம் வீடுகளில் எல்லாம் அந்த அதிர்வினால் விரிசல் விடுகிறது.

இரவுபகல் தூங்க முடியவில்லை. அரசு நிர்ணயித்துள்ள விதிகளை மீறி மிகவும் ஆழமாக சுரங்கம் தோண்டப்படுகிறது. சுரங்கம் தோண்டி  முடிக்கப்பட்ட இடங்கள் அப்படியே கிடக்கின்றன. அவைகளை சீர்படுத்த வேண்டும். கனகர வாகனங்கள் செல்வதற்கான நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவைகளை அந்த வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை. கண்ட கண்ட நேரங்களில் அதிலும் பள்ளி கல்லூரி அலுவலகம் செல்லும் நேரங்களில் வாகனங்களை இயக்கி ஓட்ட கோவில் அருகே டவுன் பஸ் மீது சிமென்ட் லாரி மோதி 15க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

அதேபோல் அரியலூர் அருகே பள்ளி வேன் மீது லாரி மோதி மாணவர்கள் இறந்தனர். இப்படி பல நூற்றுக்கணக்கான மனித உயிர்களை விபத்துக்கள் மூலம் அவ்வப்போது சாகடிக்கிறார்கள். அதேபோல் சிமெண்ட் ஆலைகள் மூலம் இருந்து வெளிவரும்  மாசுகள் மூலம் இம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. சுற்றுச்சூழல் துறை இதை கருத்தில் கொண்டு முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும் என்கிறார் சமூக ஆர்வலர் பொன்பரப்பி ராயர். இம்மாவட்டத்தில் சிமெண்ட் அலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தாங்கிக் கொள்ள முடியாமல் புதுப்பாளையம் உஞ்ஜினி, செட்டித்திருக்கோணம், சோழன் பட்டி, கங்கை சேரி இப்படி பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது மக்கள் போராட்டங்கள் மறியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் அரியலூர் மாவட்டத்தில் வாழ முடியாது. அரசு எங்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிறார்கள் அரியலூர் மாவட்ட மக்கள்.   

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.