Skip to main content

பயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தின் தொடர்ச்சியாக துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த 9-ந் தேதியிலிருந்து நடந்துவரும் இந்த கூட்டத்தொடர் எவ்வித விறுவிறுப்புமின்றி நகர்வதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வதில்லை. அடிக்கடி வெளியே சென்று பொழுதுபோக்கி வருகின்றனர்.
 

admkஓரிரு சம்பவங்கள் தவிர எவ்வித சுவாரஸ்யமும் கடுமையான விவாதங்களும் இல்லாத நிலையில், அடுத்த முறை யார் ஆட்சி அமைப்பது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் கடந்த 17-ந் தேதி ஏற்பட்ட மோதல் சட்டமன்றத்தை பரபரப்பாக்கியது. இந்த மோதலின் இடையே தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபத்தை காட்டினார் எடப்பாடி.

கடந்த 17-ந் தேதி உள்ளாட்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் பேசிய சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி, "உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில்களில் 243 இடங்களையும், ஒன்றிய கவுன்சில்களில் 2,100 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் நடத்தியிருந்தால் நாங்கள்தான் ஜெயித்திருப்போம். நேரடியாக இருந்த மேயர் தேர்தலை எதற்கு மறைமுக தேர்தலாக மாற்றினீர்கள்? அப்படின்னா, ஜெயிக்கமாட்டோம்ங்கிற பயம்தானே! ஆனா, 2021 சட்டமன்றத்தேர்தலிலும் நீங்களே ஜெயித்து ஆட்சிக்கு வரப்போவதாகச் சொல்லுகிறீர்கள். இந்த ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே காட்டியிருக்கிறது'' என்றார்.

 

dmkஅதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க எத்தனித்த போது, தானே பதில் சொல்ல எழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, "பயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. எங்களுடைய செல்வாக்கு மக்களிடத்தில் எப்போதும் சரியவில்லை. உங்களால் நிறைவேத்த முடியாத பல கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்தீர்கள். அதில் மயங்கி உங்களுக்கு வாக்களித்தனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு உண்மையை உணர்ந்துகொண்டதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் உங்களுக்கு தோல்வியை தந்தார்கள். எங்களுக்கு வெற்றி கிடைத்தது. மக்கள் செல்வாக்கு எங்களுக்கு கூடியிருக்கிறதே தவிர, குறையவில்லை'' என்றார்.


எடப்பாடியின் இந்த குற்றச்சாட்டை உடனே எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின், "விரைவில் வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம். நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 2021-ல் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்'' என்று பதிலடி தந்தார். ஆனால், இதற்கு அசராத எடப்பாடி, "சட்டமன்றத் தேர்தலில் (2021) சொல்ல வேண்டியதை நாடாளுமன்ற தேர்தலின்போது எதற்கு சொன்னீர்கள்? ஆட்சியில் இல்லாத நிலையில் எப்படிச் சொன்னீர்கள் ? இடைத்தேர்தலிலேயே மக்கள் எங்களுக்குத்தான் வெற்றியை தந்திருக்கிறார்கள். அதே மனநிலையுடன் சட்டமன்றத் தேர்தலிலும் எங்களைத்தான் ஆதரிப்பார்கள்'' என்றார் ஆவேசமாக.

எடப்பாடி இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறுக்கிட்டு சில வார்த்தைகளைச் சொல்ல... அதனால் கோபமடைந்த எடப்பாடி, ""உங்களுக்கு என்னதான் பிரச்சனை? நான் பேசும்போது எதுக்கு குறுக்கிடுகிறீர்கள்? இதெல்லாம் தவறுங்க...'' என கடுமையாக கோபத்தைக் காட்ட அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களிடையே ஏகத்துக்கும் அமளி ஏற்பட்டது. எடப்பாடியின் கோபத்தை கண்டு ஸ்டாலினும் துரைமுருகனும் அதிர்ச்சியடைந்தனர். எடப்பாடியின் கோபத்துக்கு தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் ஆவேசம் காட்ட, "ஆட்சி அமைக்கப்போவது நீங்களா? நாங்களா?' என்கிற ரேஞ்சுக்கு சபையில் கூச்சல் அதிகரித்தது.


உடனே இதில் தலையிட்ட சபாநாயகர் தனபால், ""முதல்வர் பேசும்போது உறுப்பினர்கள் அமைதி காப்பது மரபு. இதை நீங்கள் கடைப்பிடிப்பிடிப்பதாக தெரியவில்லை. உங்களுக்கு இது இறுதி எச்சரிக்கை. மீண்டும் இதேமாதிரி நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்'' என ஆஸ்டினை கண்டித்தார். அப்போது எழுந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே 2, 3 முறை அவரை கண்டித்து இறுதி எச்சரிக்கையும் செய்திருக்கிறீர்கள் என நினைவுபடுத்த... "ஆஸ்டினை இன்று ஒரு நாள் சபையிலிருந்து வெளியேற்றுகிறேன்' என்று உத்தரவிட்டார் தனபால்.

இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினின் பதிலுக்கு பதில் சொல்வதை மீண்டும் தொடர்ந்தார் எடப்பாடி. அப்போது, ஆஸ்டினை சபையிலிருந்து வெளியேற்ற காவலர்கள் உள்ளே நுழைந்தனர். அதனைக்கண்டு எழுந்த துரைமுருகன், ""ஆஸ்டின் நடந்து கொண்டது தவறுதான். அவர் மீதான நடவடிக்கையை கைவிடலாம்'' என சொல்ல, "இனியும் அதேபோல் நடக்காது என எதிர்க் கட்சித்தலைவரும் துணைத்தலைவரும் உத்தரவாதம் தந்தால் பரிசீலிக்கலாம்'' என்றார் ஓ.பி.எஸ். இதனையடுத்து துரைமுருகன் உத்தரவாதம் தர, ஆஸ்டின் மீதான தண்டனையை நிறுத்தி வைப்பதாகச் சொன்னார் சபாநாயகர்.

இந்த நிலையில், டி.என். பி.எஸ்.சி. ஊழல்களைப் பற்றி விவரித்த தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், ஊழல்களுக்கு பொறுப்பேற்று துறையின் அமைச்சரும் (ஜெயக்குமார்), முதல்வரும் (எடப்பாடி பழனிச்சாமி) ராஜினாமா செய்யவேண்டும்'' எனச் சொல்ல... அமைச்சர்களும் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களும் பதிலுக்கு ஆவேசப்பட, மீண்டும் பதட்டமும் பரபரப்புமானது சட்டமன்றம். கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் பரபரப்பின்றி நகர்ந்த சட்டமன்ற கூட்டத்தில் தற்போது கோபம், ஆவேசம், எச்சரிக்கை, விவாதம், அமளி என சூடு பிடித்துள்ளது.


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்