Skip to main content

100 கோடி ரூபாய் போலி பத்திரப்பதிவு அம்பலம்; வசமாக சிக்கிய நயினார் பாலாஜி - ஜெயராமன்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 Arappor Iyakkam Jayaram interview

 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு வழக்கு குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் விவரிக்கிறார்

 

நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு குறித்த புகாரை முதலில் அறப்போர் இயக்கம்தான் வழங்கியது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்பவரிடமிருந்து விருகம்பாக்கத்தில் 1.3 ஏக்கர் நிலத்தை 46 கோடிக்கு வாங்கினார். அதன் சந்தை மதிப்பு 100 கோடி வரை இருக்கும். சென்னையில் இருக்கும் இந்த நிலத்தை திருநெல்வேலியில் உள்ள சப்-ரெஜிஸ்டரார் அலுவலகத்தில் பதிவு செய்தனர். சட்டப்படி இது தவறு. யாருடைய நிலம் இது என்பதை அவர் சரிபார்த்திருக்க வேண்டும். 

 

இளையராஜா என்கிற நபர் ஏற்கனவே மோசடிகளுக்குப் பெயர் போனவராக இருக்கிறார். பட்டா சரியாக இருந்தால்தான் பத்திரப்பதிவு செய்யவே முடியும். இளையராஜாவின் பெயரில் அந்தப் பட்டா இல்லை. அந்த ஒரு நிலத்துக்கே 15 பதிவுகளும், பணப்பரிமாற்றங்களும் நடந்திருக்கிறது. அந்த சப்-ரெஜிஸ்டரார் இது எதைப் பற்றியும் விசாரிக்காமல் இவர்களோடு சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டார். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்.

 

இப்போது அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தவறே நடக்காமல் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கல் என்று சொல்லலாம். இங்கு நடந்த அனைத்து தவறுகளுக்கும் ஆதாரம் இருக்கிறது. மற்றவர்கள்தான் தவறு செய்தனர், அவை தனக்குத் தெரியாது என்று நயினார் பாலாஜி சொல்கிறார். இவரும் சேர்ந்துதான் அந்த தவறைச் செய்திருக்கிறார். இளையராஜா என்பவர் இதில் மட்டுமல்லாமல், இதுபோல் பல குற்றங்களைச் செய்தவர். விசாரணையில்தான் இது குறித்த அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.

 

நயினார் பாலாஜி தானும் ஏமாற்றப்பட்டதாக சொல்கிறார். ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. திருநெல்வேலியில் பத்திரப்பதிவு செய்ததே இவர்களுக்கு அங்கு செல்வாக்கு இருப்பதால்தான். பட்டா இல்லாத நிலத்தை ஒருவர் விற்க வந்தால் நீங்கள் எதையும் விசாரிக்காமல் வாங்கி விடுவீர்களா? இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று தங்களுக்கான தீர்வைப் பெறுவார்கள். ஆனால் சாதாரண ஏழை மக்களின் நிலை என்ன? அவர்கள் ஏமாற்றப்பட்டால் அவர்களால் கோர்ட்டுக்கு சென்று வாதாட முடியுமா?

 

இந்தத் துறையே ஒரு மாஃபியா துறை போல் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மனிதர்கள்தான். இளையராஜா என்பவரை இவர்கள் கைது செய்திருந்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வந்திருக்கும். இந்த வழக்கு இன்னும் விசாரணை அளவில்தான் இருக்கிறது. அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பதால் குற்றவாளிகள் காப்பாற்றப்படும் சூழலும் இருக்கிறது.

 

 

 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.