Advertisment

'ஒரு ரூபாய்க்கு ஆப்பம்'-பாட்டியின் மனிதாபிமானம்

'Appam for one rupee' - Grandma's humanitarianism

Advertisment

ஆப்பம் ஒன்றின் விலை ஒரு ரூபாய். இந்த விலைவாசியில் நம்ப முடிகிறதா?. நம்பித்தானாக வேண்டும் என்று நிரூபித்திருக்கிறார். ஆப்பம் வியாபாரம் செய்கிற 77 வயதான பாட்டி ராஜம்மாள்.

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் தெற்கு ஓரமுள்ள ஓடைப் பகுதித் தெரு அந்தத் தெரு முனையில் காலை 6.30 மணிக்கெல்லாம் அடுப்பைப் பற்ற வைத்து விடுகிறார் அந்தத் தெருவின் வயது முதிர்ந்த பாட்டி. அரை மணிப் பொழுதில் சுடச்சுட மணக்கிற சுவையான ஆப்பம் ரெடி.

சட்டி நிறைய அமுக்கி வைக்கப்பட்டது அத்தனையும் ஒரு மணி நேரத்தில சடுதியில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. பள்ளிக்கூடம் செல்கிற குழந்தைகள், அந்த வழியாக வயல் வெளி வேலைக்குச் செல்கிற தொழிலாளர்கள் தான் பாட்டியின் ரெகுலர் கஸ்டமர்கள்.

Advertisment

ஒரு ஆப்பத்தின் விலை ஒரு ரூபாய் தான். எத்தனை கிராக்கிகள், டிமாண்ட் இருந்தாலும் ஒரு ரூபாய் விலை என்கிற லட்சுமணன்கோட்டைத் தாண்டியதில்லை மீறியதில்லை ராஜம்மாள் பாட்டி.

தற்செயலாக அந்தப் பக்கம் போக நேர்ந்த நாம் தொடர்ந்து காலையில் அந்தப் பாட்டியின் தொழில் திறமை விற்பனையை நோட்டமிட்டிருந்தோம். அவரது வியாபார நேரம் முடிந்தது பிறகே அவரிடம் பேச்சுக் கொடுத்ததில்.

'Appam for one rupee' - Grandma's humanitarianism

''என்னய்யா ரெண்டு நாளா நா ஒங்களப் பாக்கேம். ஆப்பம் வேணுமா வித்து ஆய்ப்போச்சேய்யா. இனிமே நாளைக்குத் தான். எத்தன மோகமிருந்தாலும் காலைல ஏழிலிருந்து ஒம்போது வரைக்கும் தேன் எம் யாவாரம்'' என்றவரிடம், பாட்டி ஆப்பம் தான் நல்லாப் போவுதே வெலயக் கூட்டுனா என்ன என்று நாம் கேட்டவுடனே நம்மை ஒரு மாதிரியாகப் பார்த்தவர்.

''பேராண்டி அந்த மாதிரி ஆளு நான் இல்ல. என்கிட்ட சல்லிசு வேலை. ஆப்பம் வாங்கிச் சாப்புடுறவுக பசியாறுனா எனக்குத் திருப்தி தான்யா ஒரு நிம்மதி.

நான் இப்பநேத்து பண்ணல ரொம்பக் காலமாப் பண்றேம்யா..'' என பெருமூச்சு விட்டவர் ''எம் வீட்டுக்காரர் கண்ண மூடி பல வருஷமாச்சு. எனக்கு ரெண்டு பசங்க கல்யாணமாகி குடித்தனமாயிட்டாக. பேரன் பேத்திக இருக்காக எம் பசங்களுக்கு நான் பாரமா இருக்கக்கூடாதுனுதான் எனக்குப் புடிச்ச இந்த ஆப்பம் வியாபரத்தில எறங்குனேம்.

அப்பல்லாம் வியாபாரத்த ஆரம்பிக்கும் போது ஆப்பம் வெலய அரையணாவுல தான் வித்தேன். அப்புறமா 5 பைசா வெல வச்சு, பின்னால 50 பைசா வாக்குனேன். வெலவாசி தானத் தப்பாப் போயிட்டதால வெலயக் கூட்ட மனமில்ல. அதனால ஒரு ரூபாய்ல தரமானதாக் குடுக்கேம்.

'Appam for one rupee' - Grandma's humanitarianism

வெல அதிகமாய்ட்டாலும் பரவால்லண்ணு தரமான புழுங்கல் அரிசி, பச்சரிசிய வாங்கி நனையப் போட்டு ஊற வைச்சி மாவட்டிக் புளிக்க வைச்சி கையால பக்குவமாப் பெனைஞ்சிறுவேம். மண்டவெல்லாம் சில சேர்மானங்களச் சேத்து பக்குவப்படுத்தி காலைல ஆப்பம் செய்ய ஆரம்பிச்சிறுவேம். நல்ல ஆப்பம் பஞ்சு போல மெல்லிசா இருக்கும். ருசியாகவும் இருக்கும். பள்ளிக்கூடம் போற பிள்ளைங்க. இந்தப் பக்கமா காட்டு வேலைக்குப் போறவுக ஏறெழட்டுன்னு வாங்கிட்டுப் போய் பசியாறுவாக. அந்த மொகத்தப் பாத்தப் பாத்தப்பதான்யா எம் மனசு நிம்மதியாவும்.

ஒரு நாள்தயார் பண்ணலன்னா ஆப்பப்பாட்டி எங்கன்னு தேட ஆரம்பிச்சிறுவாக. அந்த அளவுக்கு என் மேல அவுகளுக்குப் பாசம். யிந்த வியாபாரத்தில் எனக்கு தினமும் 50 யில்ல 75 கெடைக்கும். ஏழை பாளைக தான்யா என்னோட சொத்து சொந்தங்க. அவுகள நம்பித்தான் நான் இருக்கேன். ஆப்பம் சாப்பிட்டு மனசு குளிரனும். அதுக்காகவே நா வெலயக் கூட்டப்பிடாதுன்னு வைராக்யமா இருக்கேன்.

'Appam for one rupee' - Grandma's humanitarianism

என்னோட கொறைப் பொழுதும் கழிஞ்சு என் சடலம் கீழ விழுற வரைக்கும் எனக்கு ஆப்பத் தொழில் தான் தெய்வம்யா. இதுல கெடைக்கிறது. அரசாங்கமும் எனக்கு பென்சனா ஆயிரம் ரூவா குடுக்கு எங்காலம் வரைக்கும் கட்டை கீழ் விழுற வரைக்கும் இது போதும்யா'' என்றார் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி.

'வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் பத்தும் மூலதனம்'என்று உணர வைப்பவர். நகரங்களிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் ஆப்பத்தின் விலை முப்பது ரூபாய் அதே ஆப்பம், தெருவோரம் உள்ள பாட்டியிடம் ஒத்த ரூபாய்க்குக் கிடைக்கிறது சுடச் சுட.

food appam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe