Skip to main content

தாளமுத்துவும் நடராசனும் உயிர் துறந்தது மொழிக்காக மட்டுமல்ல...

anti hindi


‘பேசுற மொழிதான, சொல்ற விஷயம் எந்த மொழினாலும் சென்றடைஞ்சா சரிதான’ என்ற கேள்வி எழலாம் . மொழி போர் என்பது மொழிக்கானது மட்டுமல்ல மொழியின் வழியாக புகுத்தப்படும் கலாச்சார, பொருளாதார, ஆதிக்கங்களுக்கும் எதிரானது. சமீபத்திய அரசியல் சூழலை பார்க்கும்போது, பலருக்கும் ஒரு பயம் இருக்கிறது. ஹிந்தி திணிப்பு மீண்டும் தலை எடுக்குமோ என்று. அதற்கான சில நடவடிக்கைகள் எடுக்கபட்டு அவை நெடுஞ்சாலை மைல்கல்களோடு கருப்பு மை பூசி அழிக்கவும்பட்டது. தமிழ்நாட்டில் இந்த ஹிந்தி திணிப்பு என்பது பல வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கட்டாய ஹிந்தியை எதிர்த்து, நம் இளைஞர்கள் போராடி அதை தடுத்திருக்கின்றனர்.  
 

முதன் முதலில் ஹிந்திக்கு எதிராக போராட்டம் என்று பார்த்தோம் என்றால் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டதுதான்.  1937-1938ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டது.‘இது சாதாரணமான ஒரு வெறும் மொழி திணிப்பு மட்டுமல்ல, இதை எதிர்த்து போராடாமல் விட்டுவிட்டோம் என்றால் வருங்காலத்தில் பல சிக்கல்களை இது கொண்டுவரும்’ என்று பல அரசியல் மற்றும் தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை 1937ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கி.ஆ.பெ.விசுவநாதன் திருச்சி தேவர் மன்றத்தில் நடத்தினார். நீதிக்கட்சியின் தலைவராகியிருந்த பெரியார் போராட்டக் களத்தில் இறங்கினார்.
 

இந்த ஹிந்தி திணிப்பு எதிராக  11.09.1938-ல் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டார். போராட்டங்களில் கலந்துகொண்ட பல தலைவர்களும், பல தமிழறிஞர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில் நடராசன் என்பவர் சிறைக்கு சென்று உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார். இவரைப் போன்றே கைது செய்யப்பட்ட தாளமுத்து என்பவரும் உடல்நலம் குன்றி, மரணமடைந்தார். நடராசனின் இறுதி சடங்கின்போது பேரறிஞர் அண்ணா பேசியது. “அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தை பாருங்கள். தன்னுடைய கலாச்சாரத்துக்காகவும், விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? பல்லாயிரக் கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதிமொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?” என்று உரையாற்றியிருந்தார். இதேபோல தாளமுத்துவின் இறுதிசடங்கில் பேசிய உரையும் பிரசித்துபெற்றது. தொடர் போராட்டத்தினால் முதல் கட்ட கட்டாய ஹிந்தித் திணிப்பு கைவிடப்படுகிறது.
 

இதையடுத்து இரண்டாவது முறையாக ஹிந்தியை கட்டாயம் என்று அப்போதைய தமிழக அரசு ஆணையிட்டது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அந்த சமயத்திலும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் ஓங்கி இருந்ததால், அதுவும் கைவிடப்பட்டது.
 

மூன்றாம் கட்டமாக 1952ல் தொடங்கி 1965ஆம் ஆண்டு வரை ஹிந்தியை கட்டாயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, 1964-65ல் தீவிரமடைந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் போராடினர். முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு காரணமாக இருந்த ராஜாஜி, போராட்டத்தின் நியாயத்தை கண்டு அவரும் அதில் பங்கேற்றார்.  மாநிலம் முழுக்க முக்கியத் தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, அனல் பறக்கும் பேச்சுக்களால் தமிழ்நாட்டை அதிரச் செய்த்தனர். போராட்டத்தை தடுக்க அப்போது ஆட்சியில் இருந்த அரசு, பல ஆயிரம் போலீஸ்களை, இந்திய இராணுவ வீரர்களையும் களத்தில் இறக்கியது. இருந்தாலும் போராட்டத்தில் உள்ளவர்கள் உணர்வு ரீதியாக போராடியதால், எதற்கும் அஞ்சாமல் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர்.  போராடிய தலைவர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டதால், அடுத்து இந்த போராட்டத்தை யார் எடுத்து நடத்துவது என்ற நிலை உருவாகியபோது. மாணவர்கள் அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவப் பிரதிநிதிகளை சந்திக்க அப்போதைய முதலமைச்சர் மறுத்ததும், மதுரையில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீதான தாக்குதலும் மாணவர்களை மேலும் வேகப்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் நாற்பதாயிரம் போலீஸார்கள், ஐந்தாயிரம் ராணுவ வீரர்களை குவித்தது அப்போதைய தமிழக அரசு. நாற்பது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், பலர் உயிரிழந்தனர். ஆனாலும், மாணவர்கள் பின்வாங்கவே இல்லை.
 

anti hindi


1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வயலுக்கு போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு, திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, தமிழ் வாழ்க.. ஹிந்தி ஒழிக என்று முழக்கமிட்டபடி தீக்குளித்தார். இதையடுத்து விராலிமலை சண்முகம், கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்தும், விஷமருந்தியும் கட்டாய ஹிந்தித் திணிப்பைக் கைவிடக் கோரி தற்கொலை செய்து கொண்டனர். தங்களின் எதிர்ப்பை, கருத்தை கடிதமாக எழுதி வைத்து விட்டும் சென்றனர். இந்த தியாகிகளின் உயிர்த்தியாகம், மாணவர்களின் போராட்டம், களத்தில் அஞ்சாமல் நின்ற தலைவர்கள் என்று தமிழ்நாடே போர்க்கோலமாகியது. இவற்றால் கட்டாய ஹிந்தி என்கிற முடிவைக் கைவிட்டனர். இந்த போராட்த்தின் விளைவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முதன் முதலாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டத்திலிருந்து இந்த இறுதி போராட்டம் வரை பலர் தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகங்களை நினைவு கூரும் வகையில் ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
 

இந்த போராட்டம் தற்போது பலரால் ஹிந்திக்கு எதிரான ஒன்று என்று சாதாரண போராட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனால் நம் மாநிலம் இழந்ததும், பெற்றதும் எராளம். தமிழ் மொழி எந்த மொழிக்கும் எதிரி கிடையாது. ஹிந்தி என்ற மொழியை விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால்  ‘வேறொரு மொழியை கட்டாயமாக்கி ஒரு மாநிலத்தின் தாய் மொழியை அழிக்க நினைப்பது என்ன மாதிரியான செயலாகும்’என்பதே இம்மாபெரும் வரலாற்று போராட்டத்தின் அடித்தளமாக அமைந்த எண்ணமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.