Skip to main content

"ஆட்சி கலைப்பு பேச்சு" அரசியல் முதிர்ச்சி சிறிதும் இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார் - ராம சுப்பரமணியன் பேட்டி!

 

jk

 

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. ஒவ்வொரு துறை சார்பான விவாதங்களில் அந்தந்த அமைச்சர்கள் பதிலளிப்பதோடு, துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இதில் அரசின் செயல்பாடுகள் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்தும் மூத்த அரசியல் ஆய்வாளர் டாக்டர் ராம சுப்பிரமணியன் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்மடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு துறை சார்பாக அறிவிப்புகள் தினந்தோறும் வெளியாகிறது. தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர் பாபு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மொட்டை அடிக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் திருமணம் செய்தால் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 


முதலில் என்னுடைய நன்றிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உயர்திரு சேகர் பாபு அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 112 அறிவிப்புகளை அவர் வழங்கியிருக்கிறார். நீங்கள் வருவதற்கு முன்னரே அதை நான் தயாராக வைத்திருக்கிறேன். நான் ரொம்ப ஆச்சரியப்படுகிறேன். எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனித்து அவர் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் அவருக்குத் தெரியாத கோயில்களே இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பக்கமும் அவர் பார்வையை செலுத்தியுள்ளார். இதெல்லாம் அவர் அமைச்சரான பிறகு ஆய்வு செய்து தெரிந்துகொண்டதா? இல்லை அதற்கு முன்னரே அவருக்குத் தெரியமா? என்று ஆச்சரியப்படுத்துகிறது. இந்த அறிவிப்புகளில் என் மனதுக்குப் படித்த சில விஷயங்களை முதலில் கூறுகிறேன். 

 

முதலில் வடலூர் வள்ளல் பெருமான், நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஞானி; மிகப்பெரிய பொக்கிஷம். 19ஆம் நூற்றாண்டில் இருந்தவர் அவர். அவரைப் பற்றி இப்போது அனைவருக்கும் தெரியவில்லை. குறிப்பிட்ட சில லட்சம் பேருக்கு மட்டுமே தெரிகிறது. அவருடைய கருத்துகள் அருமையானவை. அவர் எழுதிய திருவருட்பா, திருவாசகத்துக்கு இணையாக போற்றப்படும் ஒன்றாக இருக்கிறது. மதமான பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும், அந்த மதம், இந்த மதம் என்று தற்போது கூத்தடிக்கிறார்களே, அதற்குத்தான் அப்போதே அவர் இப்படி கூறியிருக்கிறார். அவருக்கு தற்போது சிறப்பு செய்திருக்கிறார்கள். மலைக்கோட்டை, திருக்கழுகுன்றம் முதலிய இடங்களில் ரோப் கார்கள் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார். இது எவ்வளவு பாராட்டப்பட வேண்டிய விஷயம். என்னை மாதிரியான ஆட்கள் அங்கு போக வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முட்டி வலி பிரச்சனை இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்துதான் அவர் இத்தகைய முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவருக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

விபூதி, குங்குமம் கண்டிப்பாக பூசியிருக்க வேண்டும். ஆனால் தற்போது தரமான விபூதி, குங்குமம் கிடைப்பதில்லை. சில விபூதிகளைப் பூசினால் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. அதையும் தாண்டி சிலருக்குப் புண் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. தற்போது அமைச்சர் தரமான விபூதி, குங்குமம் கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். தேர் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நம்முடைய திருவாரூர் தேர் ஓடுகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். தற்போது 18 முக்கிய கோயில்களின் தேர் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். பல கோயில்களில் திருப்பணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய நன்றிகளைக் கூற கடமைப்பட்டுள்ளேன். 

 

இந்த ஆட்சி இந்துக்களுக்கு நல்லது செய்கிறது என்று நீங்கள் கூறும் இந்த வேளையில், சென்னையில் இன்று திமுக ஆட்சி இந்து விரோத ஆட்சி என்று கூறி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்

 

இந்து முன்னணியை திரு. ராமகோபாலன் ஆரம்பித்த நாளில் இருந்து அதனை எனக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் அதனுடைய உறுப்பினர் என்று கூட என்னை நீங்கள் சொல்லலாம். எத்தனையோ முறை அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆக, விநாயகர் விழா என்பது ஒரு எழுச்சி விழாதான், கொண்டாட வேண்டிய ஒன்றுதான். ஆனால், தமிழக அரசு கரோனா காரணமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட பிறகுதான் கரோனா தொற்று மிக அதிகமானது. இந்தியாவில் பதிவாகும் தினசரி பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு கேரளாவில் பதிவாகிவருகிறது. எனவே மத்திய அரசு, வரக்கூடிய தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகளில் தேவையில்லாமல் மக்கள் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 

 

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர், விநாயகர் திமுகவுக்கு முடிவுரை எழுதுவார், ஆட்சியைக் கலைக்க இது காரணமாக இருக்கப் போகிறது என்று அவர் பேசியதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 


அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறார் என்று தெரியவில்லை. அவரை நான் ஆரம்பத்தில் பாராட்டி பேசியிருக்கிறேன். தற்போது அவர் ஆட்சியைக் கூட கலைப்பேன் என்று சொல்லியிருப்பதாக தெரிகிறது. அவருக்கு அரசியலைப் பற்றி என்ன தெரிந்துள்ளது என தெரியவில்லை. இதற்கெல்லாம் அவர் ஆட்சியைக் கலைப்பாரா? அப்படி செய்ய முடியமா? அரசியல் அனுபவம் சுத்தமாக அவருக்கு இல்லை என்பது இதன் மூலம் உறுதி ஆகிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் அவர் பேசாமல், தேவையில்லாத வார்த்தைகளை, செயல்களை செய்துவருகிறார். ஏட்டிக்குப் போட்டியாக பேசிவருகிறார். இதன் மூலம் அவர் பாஜகவை வளர்க்க முடியாது என்பது மட்டும் உறுதியான ஒன்றாகும். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !