ancient inscriptions and a copper plate dating back 480 years were discovered

இந்துசமய அறநிலையத்துறையின் திருக்கோயில் சுவடித் திட்டப்பணியின் மூலம் திருக்கோயில்களில் உள்ள பழமையான அரிய ஓலைச்சுவடிகள் பரிமரித்துப் பாதுகாப்பதோடு நூலாக்கம் செய்யும் பணியும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருக்கோயில் சுவடித் திட்டப்பணிக்குழுவினர் புதிதாக 480 ஆண்டுகள் பழமையானச் செப்புப் பட்டயம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

Advertisment

அதுகுறித்து சுவடித் திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: இந்துசமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் சீரிய பணியின் முன்னெடுப்பால் உருவான திருக்கோயில் சுவடித் திட்டப்பணி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இச்சுவடித்திட்டப்பணியின் மூலம் புதிதாக இராதாபுரம் வரகுணீச்சுரமுடைய நயினார்- கல்யாண சவுந்தரி நாச்சியார் அம்மன் திருக்கோயிலில் இருந்த செப்புப் பட்டயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. செப்புப் பட்டயத்தில் உள்ள செய்தி கோயில் கருவறையின் மேற்கு பக்க மணிமண்டபத்தின் மேல்பகுதியில் கல்வெட்டாகவும் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. செப்புப் பட்டயமும் கல்வெட்டும் கோயில் சந்திப்பூசைக்கு வழங்கப்பட்ட நிலதானம் குறித்த செய்தியைப் பேசுகின்றன. செப்புப் பட்டயமும் கல்வெட்டும் கி.பி.1534ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளன.

Advertisment

இராஜா பூதலவீர ஸ்ரீ இரவிவர்மன் அளித்த நிலதானம்:

ancient inscriptions and a copper plate dating back 480 years were discovered

ராஜா இரவிவர்மனின் முழுப்பெயர் புலி பூதள வீர உதயமார்த்தாண்டன் என்று வரலாறு வழி அறியமுடிகிறது. இவன் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை ஆட்சி செய்ததாக வரலாற்று வழி அறியமுடிகிறது. இவன் சுசீந்திரம், தோவாளை, தாழக்குடி ஆகிய ஊர்களின் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியுள்ளான். இவன் கி.பி.1522 முதல் 1544 வரை ஆண்டதாக வரலாற்று வழி தெரிந்துகொள்ள முடிகிறது.

நமக்கு கிடைத்துள்ள செப்புப் பட்டயமும் கல்வெட்டும் ராஜா இரவிவர்மன் முர்த்தா நாடு பகுதியை ஆண்டதாகக் குறிப்பிடுகிறது. மூர்த்தா நாடு என்பதில் பணகுடி உள்ளிட்ட பகுதிகள் அடங்கி இருந்துள்ளன.இரவிவர்மன் பூசங்குடியான் என்று அழைக்கப்பட்டுள்ளான். மேலும் இவன் செய்துங்க நாட்டை ஆண்ட சங்கரநாராயணன் என்பவனை வென்றதாகவும் அறியமுடிகிறது. இத்தகைய சிறப்புடைய இராஜா ரவிவர்மன் தன் பெயர் விளங்க வரகுணீச்சுரமுடைய நயினார் - கலியாண சவுந்தரி அம்மன் கோயிலுக்கு சந்திப்பூசை நடக்க நிலதானம் செய்துள்ளான்.

Advertisment

இரவிவர்மன் வழங்கிய நிலதான எல்லை விவரம்:

இராஜா இரவிவர்மன் முர்த்தா நாட்டில் உள்ள இருக்கன் துறை என்று இன்று இன்று அழைக்கப்படும் சீவலப் பாடி நகர் பற்றில் சான்றான் குளம் (சாணான்குளம் என்று இன்று வழங்கப்படுகிறது.) உள்ளிட்ட பற்றிலுள்ள நஞ்சையும் புஞ்சையும் கரைப்பற்றும் வழங்கியுள்ளான்.அவன் வழங்கிய தான நிலத்தின் பெரிய நான்கு எல்லைகள் விவரம் தெளிவாகப் பட்டயத்திலும் கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளன.

ancient inscriptions and a copper plate dating back 480 years were discovered

அதாவது:கீழ் எல்கை உப்பிலிகுளத்து நீர்நிலைக்குங் குளுவாஞ்சேரி குளத்து நீர்நிலைக்கும் மேற்கு பகுதி என்று கூறப்பட்டுள்ளன. தென் எல்லைப்பகுதி கூடன்குளத்து வகைக்கு வடக்கு பகுதி என்று சுட்டப்பட்டுள்ளது. அதுபோல மேல் எல்லை சங்கநேரிக்குளத்து எல்கைக்கு கிழக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு எல்லை இராதாபுரத்து எல்லைக்கு தெற்கு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவ் பெரிய நான்கு எல்லைகளுக்குட்பட்ட குளமும் புரவும் கரைப்பற்றும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் பூசங்குடியான இராசராசபுரம் பற்றுக்கு கீழ்ப் பால் இளையனார் குளத்து பற்று (இன்றைய வழக்கு இளையநயினார் குளம்) பகுதியில் வழங்கப்பட்ட நிலதான விவரமும் பெருஎல்லை விவரமும் சுட்டப்பட்டுள்ளன. கீழெல்கை முறக்குளப் பற்று எல்லைக்கு மேற்குத் தென் எல்லை கன்னியார் விளாகத்து நீர்நிலைக்கு வடக்கு என்று நவிலப்பட்டுள்ளது. மேலெல்லை கூற்றுவனேரிக் கரைக்கு கிழக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. வடக்கு எல்லை கோட்டைக் கருங்குளம் பற்றுவகைக்கு தெற்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நான்கு பெருஎல்லைக்கு உட்பட்ட குளமும் புரவும் கரைப்பற்றுமட்டுமல்லாமல் குள மிரண்டிலுள்ள நஞ்சையும் புஞ்சையும் கரைப்பற்றும் மேல்நோக்கின மரமும் கீழ்நோக்கிய கிணறும் தானம் செய்யப்பட்டதாக சுட்டப்பட்டுள்ளது. இச்செய்தி கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்ட செய்தியினையும் செப்புப் பட்டயம் தெளிவாகச் சுட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.